Published : 07 Dec 2017 11:01 AM
Last Updated : 07 Dec 2017 11:01 AM

ஜெருசலேம் விவகாரம்: ட்ரம்ப் முடிவுக்கு இஸ்ரேல் வரவேற்பு; பாலஸ்தீனம் கடும் எதிர்ப்பு

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கும் அமெரிக்காவின் முடிவை இஸ்ரேல் வரவேற்றுள்ளது. அதேசமயம் அமெரிக்கா நடுநிலை தவறுவதாக பாலஸ்தீனம் விமர்சித்துள்ளது.

கடந்த 1967-ல் ஜெருசலேமின் கிழக்கு பகுதியை இஸ்ரேல் கைபற்றியது முதல் அந்த நகரின் உரிமை தொடர்பாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே மோதல் நிலவி வருகிறது. அரபு நாடுகள் மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகள் கூட, ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகர் என்பதை ஏற்க வில்லை.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை, ஜெருசலேம் நகருக்கு மாற்றும் உத்தரவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறுகையில் ‘‘பாரம்பரியம் மிக்க ஜெருசலேம் நகருடன் யூத, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளது. இந்த நகரின் உரிமை தொடர்பான மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும்’’ எனக்கூறினார்.

இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில் ‘‘அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவு வரலாற்றுச் சிறப்புமிக்கது. அமைதி பேச்சுவார்த்தையை இது முன்னெடுத்துச் செல்லும்’’ எனக்கூறினார்.

பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் கூறுகையில் ‘‘அமெரிக்காவின் முடிவு இருதரப்புக்கும் மத்தியஸ்தம் செய்யும் நடுநிலையில் இருந்து அந்நாட்டை தவறச் செய்து விடும். பாலஸ்தீனத்தின் தார்மீக தலைநகர் ஜெருசலேம். இதில் எந்த மாற்றமும் இல்லை’’ எனக்கூறினார்.

இதேபோல், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை, அமெரிக்கா அங்கீகரிக்கும் முடிவு, மத்திய கிழக்கு பகுதியில் மோதலை உருவாக்கி விடும் என அரபு நாடுகளின் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த பிரச்னை தீவிரமடைந்து வரும் நிலையில் இதுபற்றி விவாதிப்பதற்காக இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் மாநாட்டை, டிசம்பர் 13ம் தேதி துருக்கி அதிபர் எர்டோகன் கூட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளிக்கிழமை விவாதிக்க ஐநா சபையும் முடிவு செய்துள்ளது.

இதனிடையே அமெரிக்காவின் முடிவை கண்டித்த பாலஸ்தீனத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x