Published : 30 Nov 2017 10:17 AM
Last Updated : 30 Nov 2017 10:17 AM

உலக மசாலா : உலகின் கடைசி தாய்வழிச் சமூகம் தப்பிப் பிழைக்குமா?

எஸ்தோனியா நாட்டின் ஒரு பகுதியில் பெண்கள் மட்டுமே வசிக்கிறார்கள். பால்டிக் கடல் பகுதியில் அமைந்துள்ள கினு தீவு முழுமையாகப் பெண்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வருகிறது. இங்கே மிக அரிதாகத்தான் ஒன்றிரண்டு ஆண்களைப் பார்க்க முடியும். 400 பேர் வசிக்கும் இந்தத் தீவில் உலகின் கடைசி தாய்வழிச் சமூகம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. பெண்கள் மட்டும் வசிக்கும் தீவு என்பதால், இவர்கள் ஆண்களுக்கு எதிரானவர்கள் என்று எண்ணிவிடக் கூடாது. இந்தத் தீவைச் சேர்ந்த ஆண்கள் காலம் காலமாகத் தொலைதூரத்தில் பணிபுரிந்து வந்திருக்கிறார்கள். அதனால் வீடுகளையும் தீவையும் நிர்வகிக்கும் பொறுப்பு பெண்கள் கைகளுக்கு வந்துவிட்டது. பெண்கள் மீன் பிடிக்கிறார்கள். துணி நெய்கிறார்கள். காய்கறி, பழங்களை விளைவிக்கிறார்கள். கால்நடைகளையும் பறவைகளையும் வளர்க்கிறார்கள். குழந்தைகளை வளர்த்து, கல்வி புகட்டுகிறார்கள்.

கினு கலாச்சார மையத்தின் தலைவராக இருக்கும் மேரி மட்டாஸ், “தீவிலேயே தங்கியிருந்தால் ஒரு குடும்பத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாது. அதனால்தான் ஆண்கள் பல நூற்றாண்டுகளாக நகரங்களில் வேலை செய்துவருகிறார்கள். ஆண்டுக்கு ஒன்றிரண்டு தடவைதான் குடும்பத்தைப் பார்க்க வருவார்கள். ஆண்களின் சுமையை குறைக்கவும் குடும்பம், குழந்தைகளை கவனிக்கவும் பொறுப்புகளைச் சுமக்க ஆரம்பித்தோம். இங்கே இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் மிகவும் வலிமையானவராகவும் சுதந்திரமானவராகவும் இருப்பார். எங்களால் கினுவின் கலாச்சாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எங்கள் கலாச்சாரம் மிகவும் சுவாரசியமாக இருக்கும். இன்றும் தினசரி அணியும் ஆடைகளை நாங்களே நெய்து, பாரம்பரிய முறைப்படிதான் அணிகிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த இசையையும் நடனத்தையும் இன்றும் வாழவைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இவற்றை எல்லாம் காப்பாற்ற முடியும் என்று தெரியவில்லை. இன்றைய குழந்தைகள் படிப்பதற்காகவும் வேலைக்காகவும் நகரங்களுக்குச் செல்கிறார்கள். அவர்கள் யாரும் மீண்டும் இந்தத் தீவில் வசிக்க விரும்புவதில்லை. அவர்களை குறை சொல்ல முடியாது. கோடைகாலத்தில் ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் கொஞ்சம் வருவார்கள். மற்றபடி இந்தத் தீவில் வேலை வாய்ப்பு, தொழில் வாய்ப்பு எதுவும் கிடையாது. நான் ஒவ்வொரு நாளும் என் கண் முன்னே எங்களது தனித்துவமான கலாச்சாரம் மறைந்து போவதைக் காண்கிறேன். எனினும், நாங்கள் இருக்கும்வரை இந்தத் தீவு தன் அடையாளத்தைத் தொலைக்காது” என்கிறார்.

கினுவின் கலாச்சாரம், முக்கியமாக திருமணச் சடங்குகளை ‘உலகப் பாரம்பரியச் சின்னமாக’ அங்கீகரித்திருக்கிறது யுனெஸ்கோ. அதனால் அரசாங்கம் இவர்களின் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்தி வருகிறது. இங்கிருக்கும் அருங்காட்சியகத்தைப் புதுப்பித்து, தீவின் வரலாற்றைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இருந்தாலும் கினுவின் எதிர்காலம் சவால்கள் நிறைந்ததாகத்தான் இருக்கும். பிழைப்பதற்கு வழியில்லாததால் இங்கே இனி புதிதாக யாரும் குடியேறப் போவதில்லை. எஞ்சியிருக்கும் பெண்கள் உலகிலேயே மிகச் சிறந்த இடத்தில் தாங்கள் வசிப்பதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.

உலகின் கடைசி தாய்வழிச் சமூகம் தப்பிப் பிழைக்குமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x