Published : 23 Nov 2017 10:19 AM
Last Updated : 23 Nov 2017 10:19 AM

உலக மசாலா: கொலைகாரக் காளான்கள் இயற்கையின் விந்தை!

மெரிக்காவின் கிழக்கு ஓரிகன் மலைப் பகுதிகளில் உலகிலேயே மிகப் பழமையான ஆச்சரியம் அளிக்கக்கூடிய ஓர் உயிரினம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. அது Armillaria Ostoyae என்ற தேன் காளான். 2,200 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் காளான்கள் பரந்து விரிந்திருக்கின்றன. இவை அனைத்தும் கண்களுக்குத் தெரியாத ஒரே ஒரு வித்திலிருந்துதான் உருவாகியிருக்கின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்தக் காளான் உருவாகி குறைந்தது 2,400 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 8,000 ஆண்டு கள் ஆகியிருக்கலாம் என்கிறார்கள். தேன் காளான்கள் மெதுவாகப் படர்ந்து, தான் செல்லும் வழியில் உள்ள உயிரினங்களைக் கொன்றுவிடுகின்றன. ஒவ்வோர் இலையுதிர் காலத்தின்போதும் மஞ்சள் வண்ணக் காளான்களாகக் கூட்டம் கூட்டமாகத் தங்கள் இருப்பை வெளிக்காட்டிக்கொள்கின்றன. ஒரு சில வாரங்களில் தங்களுடைய உருவத்தை மாற்றி, வெள்ளை நிறமாக மாறி சுண்ணாம்புபோல் சாதாரணமாகக் காட்சியளிக்கின்றன. இந்தத் தேன் காளான்கள் மரங்களுக்கு மிகப் பெரிய ஆபத்தை விளைவித்துவிடுகின்றன. மரத்தின் வேர்களில் இருந்து சத்தை மெதுவாக உறிஞ்சி தங்களை வளர்த்துக்கொள்கின்றன. இதனால் மரங்கள் மெதுவாக சத்துகளை இழக்க ஆரம்பிக்கின்றன. 20, 30 ஆண்டுகளில் தேன் காளான்களை எதிர்த்து நிற்க முடியாமல் இறக்கும் நிலைக்கு சென்றுவிடுகின்றன.

“காளான்களால் ஒரு மரத்தைக் கொலை செய்ய இயலும் என்பதை மக்களால் நம்ப முடிவதில்லை. மரத்துக்குத் தேவையான சத்துகளும் தண்ணீரும் தொடர்ச்சியாகக் கிடைக்காவிட்டால் அவை காலப்போக்கில் மடிந்துதான் போகவேண்டும். தேன் காளான்கள் இப்படித்தான் அனைத்தையும் அபகரித்துக்கொண்டு, மரங்களை வீழ்த்திவிடுகின்றன” என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த நோய் இயல் மற்றும் வனத்துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் க்ரெக் ஃபிலிப்.

1988-ம் ஆண்டு வனத்துறையைச் சேர்ந்த க்ரெக் விப்பில் என்பவர் முதல்முறையாக இந்தக் காளான்களைக் கண்டுபிடித்தார். பல காளான்கள் சேர்ந்த தொகுப்பாக இருக்கும் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தனர். ஆனால் மரபணு பரிசோதனையில் ஒரே ஒரு வித்திலிருந்து உருவானது என்பது தெரியவந்துள்ளது. இந்தக் காளான்களை எல்லாம் ஒன்று சேர்த்தால் குறைந்தது 7,500 டன்களிலிருந்து அதிகபட்சம் 35,000 டன்கள் வரை எடை இருக்கலாம் என்கிறார்கள். இதே தேன் காளான்கள் அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியிலும் ஜெர்மனியிலும் கூட உள்ளன. ஆனால் ஓரிகனில் வாழ்வதுபோல் அவை மிகப் பெரிய உயிரினமாகவும் இல்லை, மிகப் பழமையான உயிரினமாகவும் இல்லை.

ஓர் ஆண்டுக்கு தேன் காளான்கள் ஓர் அடியிலிருந்து மூன்று அடி தூரம் வரை பரவுகின்றன. இந்தக் காளான்கள் குறித்து ஆச்சரியமும் ஆராய்ச்சியுமாக உலகம் இருக்க, மர வியாபாரிகள் நீண்ட காலம் வளரக்கூடிய அற்புதமான மரங்களை சேதப்படுத்தி அழித்து விடுவதால் வெறுக்கிறார்கள். ஆனால் மரங்கள் அழிந்து, மீண்டும் மண்ணுக்கே உரமாகி மறுசுழற்சி நடைபெறுவதால் தேன் காளான்களைக் கண்டு அஞ்சத் தேவை இல்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

கொலைகாரக் காளான்கள் இயற்கையின் விந்தை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x