Published : 23 Nov 2017 10:07 AM
Last Updated : 23 Nov 2017 10:07 AM

அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்பு வழக்கில் ரூ.625 கோடி இழப்பீடு வழங்க விமான நிறுவனங்கள் ஒப்புதல்

அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு நடந்த இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பான வழக்கில் கட்டிட உரிமையாளருக்கு ரூ.625 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க விமான நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை கோபுர கட்டிடத்தின் மீது, கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அல்-காய்தா தீவிரவாதிகள், பயணிகள் விமானங்களைக் கடத்தி வந்து மோதி தாக்குதல் நடத்தினர். இதில், 2,750 பேர் உயிரிழந்தனர். அந்தக் கட்டிடம் தரை மட்டமானது. அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் மற்றொரு விமானத்தை மோதி தாக்குதல் நடத்தினர். மொத்தமாக இந்தத் தாக்குதலில் 3,000 பேர் உயிரிழந்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான இரட்டை கோபுரம், நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸி துறைமுக கழகத்துக்கு சொந்தமானது. சம்பவம் நடப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு அந்தக் கட்டிடத்தை சில்லவர்ஸ்டீன் என்பவர் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்திருந்தார். அந்தக் கட்டிடத்துக்கு அவர் இன்சூரன்ஸ் செய்திருந்த நிலையில், தாக்குதலுக்கு பின் சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.30,000 கோடியை இழப்பீடாக பெற்றார்.

எனினும், தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு இரட்டை கோபுர தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட விமானங்களின் உரிமையாளர்களான, அமெரிக்க ஏர்லைன்ஸ் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் மீதும் சில்லவர்ஸ்டீன் வழக்கு தொடர்ந்தார். அதில், ரூ.81,100 கோடி இழப்பீடு கோரி இருந்தார்.

இந்த வழக்கு நீதிமன்றங்களில் 17 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்நிலையில், ரூ.625 கோடி இழப்பீடு வழங்க விமான நிறுவனங்கள் ஒப்புக் கொண்டன. இதை சில்லவர்ஸ்டீனும் ஒப்புக் கொண்டார். இதையடுத்து வழக்கு முடிவுக்கு வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x