Published : 19 Nov 2017 12:03 PM
Last Updated : 19 Nov 2017 12:03 PM

உலக மசாலா: நிஜ சதுரங்கவேட்டை!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மிகவும் பிரபலமான ஏமாற்றுப்பேர்வழி ஜிம்மி சபாட்டினோ. சமீபத்தில் 67.5 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட குற்றத்துக்காக, இவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இவர் ஏற்கெனவே சிறையில்தான் வேறொரு குற்றத்துக்காகத் தண்டனை அனுபவித்து வருகிறார். சிறைக்குள் இருந்துகொண்டே, சிலரின் உதவியோடு வெளியில் 67.5 கோடி ரூபாயை ஏமாற்றிச் சம்பாதித்துவிட்டார். விசாரணை நடைபெற்றபோது, தன்னால் ஏமாற்றுவதை நிறுத்த முடியாது என்றும் சூப்பர்மேக்ஸ் தனிச் சிறையில் அடைக்கும்படியும் கேட்டுக்கொண்டார். அமெரிக்காவில் இருக்கும் சிறைச்சாலைகளில் மிகவும் கடுமையானது சூப்பர்மேக்ஸ். இங்கே ஜிம்மி அடைக்கப்பட்டால் வெளியுலகத்திலிருந்து யாரும் தொடர்புகொள்ள முடியாது. 19 வயதில் ஒரு மதுபான விடுதியில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கே மோசடி செய்த குற்றத்துக்காகச் சிறையில் அடைக்கப்பட்டவர், 2014-ம் ஆண்டுதான் வெளியே வந்தார். அவர் சிறையில் இருந்தபடியே மோசடிச் செயல்கள் மூலம் ஏராளமான பணத்தைச் சம்பாதித்திருப்பது பிறகுதான் தெரிந்தது. விசாரணையில் சிறைச்சாலையில் இரண்டு அதிகாரிகள் ஜிம்மிக்கு 5 மொபைல் போன்களைக் கொடுத்து உதவியது தெரியவந்தது. உடனே இரண்டு அதிகாரிகளும் வேலையைவிட்டு நீக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் மீது குற்றவியல் வழக்குகள் தொடரப்படவில்லை. இந்த மோசடியில் ஜார்ஜ், வலெரி கே ஹன்ட், டெனிசி சிக்ஷா லெவிஸ் மூவரும் பங்கேற்று இருக்கிறார்கள். புகழ்பெற்ற இரண்டு நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகளை இமெயில், போன் மூலம் தொடர்புகொண்டு நகைகள், கடிகாரங்கள், விலை மதிப்பு மிக்கப் பொருட்களை ஏமாற்றி வாங்கியிருக்கிறார்கள். அவற்றைப் பணமாக மாற்றி, தங்களுக்கு உரிய பங்கை எடுத்துக்கொண்டு மீதியை ஜிம்மியின் வங்கிக் கணக்கில் செலுத்தியிருக்கிறார்கள். விசாரணையின் இறுதியில் யாரிடமாவது மன்னிப்புக் கேட்க விருப்பமா என்று நீதிபதி கேட்டார். “நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்க மாட்டேன். சிறையில் இருந்தபடியே என்னால் இவ்வளவு தூரம் சம்பாதிக்கமுடிகிறது என்றால் இந்த அரசு நிறுவனங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை நினைத்து அரசாங்கம்தான் வெட்கப்பட வேண்டும்” என்றார் ஜிம்மி.

நீதிபதி அதிகபட்ச தண்டனையாக 20 ஆண்டுகள் சிறையில் இருக்கும்படி தீர்ப்பளித்தார். ஜிம்மியின் விருப்பப்படி கொலோராடாவில் உள்ள சூப்பர்மேக்ஸ் தனிச் சிறையில் அவரை அடைக்கவும் உத்தரவிட்டுள்ளார். அங்கே மற்ற கைதிகளை அவரால் பார்க்கக்கூட முடியாது. யாருக்கும் கடிதம் எழுத முடியாது. தொலைபேசியில் உரையாட முடியாது. இவரது அம்மா மற்றும் 2 வழக்கறிஞர்கள் மட்டுமே அரிதாகச் சந்திக்க இயலும். தினமும் சிறிது நேரம் சூரிய வெளிச்சம் கிடைக்க மட்டும் அனுமதிக்கப்படுவார். இவரது வழக்கறிஞர்கள், “ஜிம்மிக்கு மோசடி செய்வது ஒரு பொழுதுபோக்கு. அவரால் அப்படிச் செய்யாமல் இருக்கவே முடியாது. இந்த அரசு அமைப்பை உடைக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார்” என்கிறார்கள். அமெரிக்காவின் மிக முக்கியமான, மோசமான குற்றவாளிகள் இந்த சூப்பர்மேக்ஸ் சிறைச்சாலையில்தான் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

நிஜ சதுரங்கவேட்டை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x