Published : 17 Nov 2017 10:11 AM
Last Updated : 17 Nov 2017 10:11 AM

உலக மசாலா: இப்படி ஓர் அப்பா கிடைக்க கொடுத்துவைத்திருக்க வேண்டும்!

லிபோர்னியாவில் வசிக்கும் 62 வயது முகமது ப்ஸீக், கடந்த இருபதாண்டுகளாக நோயுற்றக் குழந்தைகளை வளர்த்து வருகிறார். இந்தக் குழந்தைகள் ஆதரவற்ற இல்லங்களைச் சேர்ந்தவர்கள். மிகக் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள். இல்லங்களால் கைவிடப்பட்டவர்கள். இவர்களைத் தன் வீட்டில் வைத்து மருத்துவம் பார்க்கிறார், அன்பு செலுத்துகிறார், தன்னம்பிக்கை ஊட்டுகிறார், மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார். லாஸ் ஏஞ்சல்ஸில் ஆதரவற்ற குழந்தைகளின் வளர்ப்புத் தந்தையாக இவர் ஒருவர் மட்டுமே இருக்கிறார்! “எங்கள் அமைப்பில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு, கவனிக்கப்பட வேண்டிய குழந்தைகள் இருந்தால் நாங்கள் உடனே முகமதுவைத்தான் தொடர்புகொள்வோம். எத்தனை குழந்தைகளைக் கொடுத்தாலும் அன்புடன் அழைத்துச் செல்வார். இவரைப் போன்ற ஒரு மனிதரை நான் பார்த்ததில்லை” என்கிறார் குழந்தைகள் நல அமைப்பைச் சேர்ந்த மெலிஸா டெஸ்டர்மென்.

1978-ம் ஆண்டு லிபியாவிலிருந்து கல்லூரி மாணவராக, கலிபோர்னியா வந்தார் முகமது. 1987-ம் ஆண்டு டான் என்ற பெண்ணைச் சந்தித்தார். அவர் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்கக்கூடிய பணியில் முழுமையாக ஈடுபட்டிருந்தார். இருவரும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் வீட்டுக் கதவு ஆதரவற்ற குழந்தைகளுக்காக எந்த நேரமும் திறந்திருந்தது. ஒரே நேரத்தில் 12 குழந்தைகள் வரைகூட வீட்டில் வைத்து கவனித்து வந்தனர். ஆண்டு முழுவதும் குழந்தைகள் இருந்துகொண்டே இருப்பார்கள். இருவரும் சிறிதும் சலிப்பின்றி குழந்தைகளை அன்போடு பராமரிப்பார்கள். கலிபோர்னியாவிலேயே மிகவும் போற்றக்கூடிய வளர்ப்புத் தாயாக அறியப்பட்டார் டான்.

“நாங்கள் வளர்த்த குழந்தைகளில் ஒன்றை 1991-ம் ஆண்டு இழந்தோம். எங்களால் அந்தத் துயரத்தைத் தாங்க முடியவில்லை. இனி வாழ்நாள் முழுவதும் நோயுற்ற குழந்தைகளுக்காகவே வாழவேண்டும் என்று முடிவெடுத்தோம். மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் உயிருடன் இருக்கும்வரை அன்பும் மகிழ்ச்சியும் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். 1997-ம் ஆண்டு எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு எலும்பு நோய் தாக்கியிருந்தது. அவனது துணியை மாற்றினால் கூட எலும்பு உடையும் அபாயம் இருந்தது. மரபணுக் குறைபாடு என்பதால் அந்த நோய்க்கு மருத்துவமும் அப்போது இல்லை. மற்ற குழந்தைகளைப் போலவே அவனையும் கவனித்துக்கொண்டோம். 12 ஆண்டுகளுக்கு முன்பு என் மனைவி இறந்துபோனார். அதற்குப் பிறகு நான் தனியாளாக குழந்தைகளைக் கவனித்து வருகிறேன். காது கேட்காத, வாய் பேசாத, பார்வையற்ற, மூளை வளர்ச்சியற்ற 6 வயது குழந்தை என்னிடம் இருக்கிறாள். அவளுடன் நான் பேசிக்கொண்டே இருப்பேன். விளையாடுவேன். அவளுக்கு எப்போதும் நான் அருகில் இருக்க வேண்டும். கைகளை விடவே மாட்டாள். பெரும்பாலான நேரத்தை அவளுக்கே செலவிட வேண்டியிருக்கிறது. ஒரு மாதக் குழந்தையாக இவள் என்னிடம் வந்தபோது, சில வாரங்கள்தான் உயிருடன் இருப்பாள் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 6-வது பிறந்த நாளைக் கொண்டாடிவிட்டாள். மருத்துவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். பெயர் கூட இல்லாமல்தான் குழந்தைகள் எங்களிடம் வருகிறார்கள். அவர்களுக்கு அழகான பெயர்களை வைத்துதான் அழைப்பேன். 40 குழந்தைகளின் பெயர்களும் அவர்களைப் பற்றிய தகவல்களும் எனக்கு அத்துப்படி. இவர்களில் 10 பேர் என் நினைவுகளில் மட்டுமே இப்போது வாழ்ந்துவருகிறார்கள்” என்கிறார் முகமது.

இப்படி ஓர் அப்பா கிடைக்க கொடுத்துவைத்திருக்க வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x