Published : 02 Nov 2017 09:35 AM
Last Updated : 02 Nov 2017 09:35 AM

உலக மசாலா: உத்வேக மனிதர்

னடாவைச் சேர்ந்த 25 வயது மாடீ கில்பர்ட், மேஜிக் உலகைக் கலக்கி வருகிறார்! பொதுவாக எல்லா மேஜிக் கலைஞர்களும் சீட்டுக் கட்டுகளில் வித்தை காட்டுவார்கள். ஆனால் கில்பர்ட் சிட்டுக் கட்டுகளை வைத்து மட்டுமே இதுவரை யாரும் செய்யாத வித்தைகளைக் காட்டிவருகிறார்! 4 அடி 6 அங்குல உயரம் கொண்ட கில்பர்ட்டின் இடதுகை, முழங்கைக்கு மேல் வளரவில்லை. வலது கை மணிக்கட்டு வரையே வளர்ந்திருக்கிறது. இவரது மேஜிக் தந்திரங்கள் அனைத்தும் இவராலேயே உருவாக்கப்பட்டவை. தன்னுடைய கற்பனையில் நுட்பங்களை உருவாக்கி, அதைச் செயல்படுத்திப் பார்த்து, ஒவ்வொன்றையும் படைத்திருக்கிறார்.

“நான் சின்ன வயதிலிருந்தே யாரையும் சார்ந்திருக்காமல் வாழப் பழகிக்கொண்டேன். அப்போது மேஜிக் கலையைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கூடப் பார்த்ததில்லை. மேஜிக் புத்தகங்களையும் படித்ததில்லை. என்னைச் சுற்றியிருப்பவர்கள் மேஜிக் கலைஞர்களைப் பற்றி ஆச்சரியமாகப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனாலும் என்னுடைய பள்ளி ஆசிரியர் நீ என்னவாக வர விரும்புகிறாய் என்று கேட்டவுடன், ‘மேஜிக் கலைஞராகப் போகிறேன்’ என்று பதில் அளித்தேன். ஆச்சரியமடைந்த ஆசிரியர், இப்போது ஒரு மேஜிக் செய்ய முடியுமா என்று கேட்டார். இதுவரை மேஜிக் எதுவும் தெரியாது, ஆனால் ஒருநாள் மேஜிக் கலைஞாராக மாறுவேன் என்றேன். பிறகுதான் மேஜிக் நிகழ்ச்சிகளை இணையதளங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பார்க்க ஆரம்பித்தேன். புகழ்பெற்ற மேஜிக் கலைஞர் டேவிட் பிளைனின் ரசிகனாக மாறினேன்.

ஆனால் அவர் செய்யும் மேஜிக் கலைகளை என்னால் செய்ய இயலாது என்பதை உணர்ந்தேன். பிறகு இங்கிலாந்தைச் சேர்ந்த டெர்ரென் ப்ரெளன் என்ற உளவியலாளரைச் சந்தித்தேன். அவர்தான் விரல்கள் இல்லாவிட்டாலும் மூட்டுகளைக் கொண்டே மேஜிக் செய்யமுடியும் என்று எனக்கு நம்பிக்கை அளித்தார். என் மூளையைப் பயன்படுத்தி புதிய தந்திரங்களை உருவாக்கினேன். என்னுடைய பேச்சால் மக்களின் கவனத்தை எப்படித் திசை திருப்புவது என்று அறிந்துகொண்டேன். ஒருநாள் என்னாலும் மேஜிக் செய்து, காண்போரை வியப்பில் ஆழ்த்திவிட முடியும் என்ற நம்பிக்கை வந்தது. சக மாணவர்களிடம் என் தந்திரங்களைச் செய்து காட்டி, பயிற்சி எடுத்துக்கொண்டேன். ஆனால் அதில் எனக்கு முழுமையான திருப்தி கிடைக்கவில்லை. 16 வயதில் மூளையை மட்டும் அதிகம் பயன்படுத்தும் சீட்டுக் கட்டு தந்திரங்கள் மீது ஆர்வத்தைத் திருப்பினேன். ஆரம்பத்தில் பல தோல்விகளைச் சந்தித்தேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தந்திரங்களை என் வசமாக்கினேன்” என்கிறார் கில்பர்ட்.

2010-ம் ஆண்டு நடைபெற்ற உலக மேஜிக் மாநாட்டில் கலந்துகொண்டு, புகழ்பெற்ற மேஜிக் கலைஞர்கள் முன் உரை நிகழ்த்தி, வித்தைகளையும் செய்து காட்டினார் இவர். இன்று 18 நாடுகளில் மேஜிக் நிகழ்ச்சிகளை நடத்தி, ஏராளமான மக்களின் மனத்தில் இடம்பிடித்து விட்டார். உலகின் அத்தனை மேஜிக் கலைஞர்களும் கில்பர்ட்டை, மிகச் சிறந்த மேஜிக் கலைஞர் என்று ஒப்புக்கொள்கிறார்கள். ஆரம்பத்தில் இவரை ஈர்த்த டேவிட் பிளைன், ‘கில்பர்ட் என் இன்ஸ்பிரேஷன்’ என்கிறார்!

உத்வேக மனிதர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x