Published : 31 Oct 2017 10:15 AM
Last Updated : 31 Oct 2017 10:15 AM

உலக மசாலா: எப்போதும் அம்மா!

ங்கிலாந்தைச் சேர்ந்த 98 வயது அடா கியாட்டிங், ஒரு காப்பகத்தில் வசித்து வந்தார். இவருடைய மூத்த மகன் 80 வயது டாம், இன்னொரு காப்பகத்தில் வசித்து வந்தார். திடீரென்று டாமுக்கு அதிகக் கவனிப்பு தேவைப்பட்டது. அதை அறிந்த அடா, மகன் இருக்கும் காப்பகத்துக்கே சென்று, அவரைக் கவனித்து வருகிறார்! “எனக்கு 4 குழந்தைகள். டாம் மட்டும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதனால் வாழ்க்கை முழுவதும் என்னுடனே இருந்தான். முதுமை காரணமாக நான் ஒரு காப்பகத்தில் சேர்ந்துவிட்டேன். அவனைக் கவனிக்க ஆள் இல்லாததால், அவனும் ஒரு காப்பகத்தில் சேர்ந்துவிட்டான். இருவரும் அடிக்கடி பேசிக்கொள்வோம். வாய்ப்பு இருக்கும்போது சந்தித்துக்கொள்வோம். இப்போது டாமுக்கு உடல் நிலை மோசமாகிவிட்டது. காப்பகத்தில் நன்றாகக் கவனித்துக்கொண்டாலும் வீட்டினரின் அன்பும் அரவணைப்பும் அவனுக்குத் தேவைப்பட்டது. அதனால் அவன் இருக்கும் காப்பகத்துக்கே சென்றுவிட்டேன். இருவரும் பக்கத்து பக்கத்து அறைகளில் வசிக்கிறோம். தினமும் இருவரும் சேர்ந்து உணவருந்துவோம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்போம். பேசிக்கொண்டிருப்போம். இடையிடையே அவரவர் அறைகளில் ஓய்வெடுத்துக்கொள்வோம். இரவு அவனுக்கு குட் நைட் சொல்லிவிட்டுதான் படுக்கச் செல்வேன். இப்போது டாமின் உடலும் மனமும் தேறிவருவதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்” என்று மகிழ்கிறார் அடா. “அடாவைப் போல் ஒருவரைப் பார்ப்பது அரிது. செவிலியராக இருந்தவர். இந்த வயதிலும் தன் மகனை அவ்வளவு மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார்” என்கிறார் காப்பகத்தின் மேனேஜர் பிலிப் டேனியல்.

எப்போதும் அம்மா!

சீ

னாவின் ஹிஃபை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் இலைகளால் ஆன உடை ஒன்றை வடிவமைத்திருக்கிறார்கள். “எங்கள் குழுவில் 2 பெண்கள், 2 ஆண்கள் இருக்கிறோம். 6 மாதங்களுக்கு முன்பு விலங்குகள் மற்றும் தாவரங்கள் மாதிரிகளை வைத்து ஒரு போட்டி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது. அந்த நேரம் பெண்கள் எல்லோரும் சீன நடிகை ஃபான் பிங்பிங் கேன்ஸ் திரைப்பட விழாவில் அணிந்து வந்த உடையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அதே போன்ற உடையை இலைகளை வைத்துச் செய்தால் என்ன என்று கேட்டார் எங்கள் பேராசிரியர். மிகவும் கடினமான வேலைதான், ஆனாலும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று முடிவு செய்தோம். சில வகை இலைகள் எங்கள் பல்கலைக்கழகத்துக்குள்ளேயே கிடைத்தன. மங்கோலியா இலைகளைத் தேடி மலைப்பகுதிக்குச் சென்றோம். இலைகளை ரசாயனத்தில் 2 மணி நேரம் ஊற வைத்தோம். பச்சயம் எல்லாம் கரைந்து, இலைகளின் நரம்புகள் மட்டுமே இருந்தன. அவற்றைக் காய வைத்தோம். 6 ஆயிரம் இலைகள் சேர்ந்தவுடன் உடை தயாரிக்கும் பணியை ஆரம்பித்தோம். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் மட்டுமே இந்தப் பணியை மேற்கொண்டதால் 4 மாதங்களுக்குப் பிறகே உடையைச் செய்து முடித்தோம். இந்த உடையில் இலைகள், நூல், ஏராளமான பொறுமை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சீனா முழுவதும் நாங்கள் பிரபலமாகிவிட்டோம்” என்கிறார்கள் 4 ஸ்டூடண்ட்ஸ் குழுவினர்.

அட்டகாசமாக இருக்கிறதே இந்த இலை உடை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x