Published : 28 Oct 2017 10:26 AM
Last Updated : 28 Oct 2017 10:26 AM

உலக மசாலா: சிரித்தால் மட்டுமே முகம் காட்டும் அதிசய கண்ணாடி!

வீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, புற்றுநோயாளிகளுக்காகவே ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை உருவாக்கியிருக்கிறார் துருக்கியைச் சேர்ந்த பெர்க் இல்ஹான். டேப்லட் போலவே இருக்கும் இந்தக் கருவியில் கண்ணாடியும் கேமராவும் பொருத்தப்பட்டிருக்கின்றன. முக உணர்ச்சிகளை கண்காணித்துக்கொண்டிருக்கும். சிரித்தவுடன் சட்டென்று கண்ணாடியில் முகத்தைக் காட்டும். சிரிக்கவில்லை என்றால் கண்ணாடியில் முகம் தெரியாது. வழக்கமான கண்ணாடி போலவே சுவரில் மாட்டலாம், மேஜையில் வைக்கலாம். ரூ.1.2 லட்சத்திலிருந்து ரூ.1.94 லட்சம் வரை பல விதங்களில் இந்தக் கண்ணாடிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. “என் குடும்பத்தில் ஒருவருக்கு புற்றுநோய் வந்துவிட்டது. அதுவரை அவரிடமிருந்த மகிழ்ச்சியும் சிரிப்பும் காணாமல் போய்விட்டன. கண்ணாடி பார்ப்பதைக் கூட நிறுத்திவிட்டார். அப்போது தான் அவர்கள் மகிழ்ச்சியடையும் விதத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். எந்தக் கஷ்டம் வந்தாலும் அதைக் கண்டு துவண்டு போகாமல், நம்பிக்கையோடும் புன்னகையோடும் எதிர்கொண்டால் நோய் விரைவில் குணமாகலாம். அல்லது மரணமாவது தள்ளிப் போகலாம். நியூயார்க்கில் படிப்பை முடித்தவுடன் சில புற்றுநோய் மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வு நடத்தினேன். சிரிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும் ஆயுளும் அதிகரிக்கும் என்பதை அறிந்துகொண்டேன். புற்றுநோயாளிகளிடமும் மருத்துவர்களிடமும் பேசினேன். 2 ஆண்டுகள் கடுமையாக உழைத்து, சிரித்தால் முகம் காட்டும் கண்ணாடியை உருவாக்கினேன். இப்போது இந்தக் கண்ணாடி தயாரிக்க அதிகம் செலவாகிறது. 32 ஆயிரம் ரூபாய்க்குள் கண்ணாடி தயாரிப்பைக் கொண்டுவருவது தான் என் லட்சியம். மருத்துவமனைகளும் மருத்துவமனைகளுக்கு நன்கொடை அளிப்பவர்களும் இந்தக் கண்ணாடியை வாங்கிக்கொள்ளலாம்” என்கிறார் பெர்க் இல்ஹான்.

சிரித்தால் மட்டுமே முகம் காட்டும் அதிசய கண்ணாடி!

ந்தோனேசியாவில் பலதார மணம் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் ஒரு நேரத்தில் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்வார்கள். டெலுக் கிஜிங் கிராமத்தைச் சேர்ந்த பான்சர், நவம்பரில் 2 பெண்களை திருமணம் செய்ய போகிறார். நவம்பர் 5-ல் ஒன்று, 8-ல் இன்னொன்று. நவம்பர் 9-ல் இரு திருமணங்களுக்கும் சேர்த்து ஒரே வரவேற்பு நிகழ்ச்சி. 2 பெண்களுடனும் பான்சர் இருப்பதுபோல் அச்சடிக்கப்பட்ட வரவேற்பு அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. “இரண்டு திருமணங்கள் சட்டப்பூர்வமாக செய்துகொள்ள அனுமதிக்கும் ஒரு நாட்டில், ஒரே வரவேற்பு வைத்துக்கொள்வதில் என்ன அதிசயம்? சிண்ட்ரா பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர், இன்டா இதே கிராமத்தைச் சேர்ந்தவர். திருமணங்களை எளிமையாகவும் தனித் தனியாகவும் நடத்துகிறோம். வரவேற்பு மட்டும் ஆடம்பரமாக இருக்கும். இரண்டு பெண் வீட்டார்கள் சம்மதத்துடன்தான் திருமணமும் வரவேற்பும் நடக்க இருக்கின்றன. மணப்பெண்கள் இருவரிடமும் போட்டியோ, பொறாமையோ இல்லை. இருவரின் விருப்பத்தின் பேரில்தான் திருமணம் நடக்கிறது” என்கிறார் பான்சர்.

அடப்பாவிகளா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x