Published : 22 Oct 2017 12:19 PM
Last Updated : 22 Oct 2017 12:19 PM

உலக மசாலா: ஐயோ… பார்க்கும்போதே பதறுகிறதே…

ஐயோ… பார்க்கும்போதே பதறுகிறதே…

ஹோண்டுராஸ் நாட்டுக்கு அருகில், ரோட்டன் தீவுப் பகுதியில் உள்ள கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் ஏராளமாக மிதக்கின்றன. கடலில் இப்படி ஒரு மோசமான சூழலை இதுவரை யாரும் கண்டதில்லை. சமீபத்தில் கவுதமாலா நாட்டில் பெய்த அதீத மழையால், குப்பைகள் அடித்துவரப்பட்டு ஆறுகளில் கலந்தன. ஆற்று நீர் குப்பைகளைக் கடலில் சேர்த்துவிட்டது. அதனால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு கடல் மாசு அடைந்துவிட்டது. பிளாஸ்டிக் பாட்டில்கள், முள்கரண்டிகள், கத்திகள், பைகள், குப்பைகள் என்று சூரிய ஒளியைக் கடலுக்குள் செல்லவிடாதபடி அடைத்துக் கொண்டிருக்கின்றன. “கடலுக்குள்ளும் ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் பாட்டில்கள் மிதந்துகொண்டிருந்தன. பிளாஸ்டிக் துண்டுகள் துகள்களாக மாறினால் மீன்களும் மிதவை உயிரினங்களும் இவற்றைச் சாப்பிட நேரும். இதனால் உணவுச் சங்கிலியே பாதிக்கப்படும். 90% கடல் பறவைகளும் கடல் ஆமைகளும் தெரியாமல் பிளாஸ்டிக் துண்டுகளை விழுங்கினால் உயிரிழக்க நேரிடும். தனி மனிதர்களிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும்படி பிரச்சாரம் செய்துவருகிறோம். அதேபோல தொழிலதிபர்களும் அரசாங்கங்களும் பிளாஸ்டிக் உற்பத்தியையும் பயன்பாட்டையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கடலும் விஷமாக மாறிவிடும்” என்கிறார் ப்ளூ ப்ளானட் சொசைட்டியைச் சேர்ந்த ஜான் ஹோர்ஸ்டன்.

நிறம் மாறாத ஆப்பிள்!

உலகிலேயே முதல் முறை மரபணு மாற்றப்பட்ட ஆர்டிக் ஆப்பிள் விற்பனைக்கு வந்துள்ளது. இதை நறுக்கினால் பழுப்பு நிறமாக மாறாது. கனடாவைச் சேர்ந்த ஆகனாகன் நிறுவனம், இந்த ஆப்பிள்களை விளைவித்து விற்பனைக்கு வைத்திருக்கிறது. சாதாரண ஆப்பிள்களை நறுக்கும்போது அதில் உள்ள உயிரணுக்கள் அழிக்கப்படுவதால், பாலிபினோல் ஆக்ஸிடேஸ் வேதி மாற்றம் அடைந்து சில நிமிடங்களில் பழுப்பு நிறமாக மாறிவிடுகிறது. சில ஆப்பிள் விரைவாகவும் சில ஆப்பிள் மெதுவாகவும் நிறம் மாறக்கூடியவை. ஆனால் ஆர்டிக் ஆப்பிள்களை நறுக்கி ஒரு நாள் ஆனாலும் பழுப்பு நிறமாக மாறுவதில்லை. “ஆப்பிள் துண்டுகள் நிறம் மாறினால், அதைக் குப்பையில் கொட்டிவிடுகிறார்கள். இதைத் தவிர்க்க நானும் என் மனைவி லூயிசாவும் 20 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தோம். 2003-ம் ஆண்டிலேயே நிறம் மாறாத ஆப்பிள்களை விளைவித்துவிட்டோம். ஆனால் அதைப் பரிசோதனை செய்து, கேடு விளைவிக்காத உணவுப் பொருள் என்று சான்றிதழ் பெற இத்தனை ஆண்டுகளாகிவிட்டன. அமெரிக்க விவசாயக் கழகமும் உடல் நலனுக்கோ, சுற்றுச் சூழலுக்கோ ஆர்டிக் ஆப்பிள்களால் கெடுதல் இல்லை என்று சொல்லிவிட்டது. அதே நேரம் மற்ற ஆப்பிள்களில் உள்ள அதே அளவு சத்து, சுவை இதிலும் உள்ளன. நறுக்கினால் வண்ணம் மட்டுமே மாறுவதில்லை. இதனால் நறுக்கிய ஆப்பிள் துண்டுகளும் வீணாகாது. நல்ல ஆப்பிளா என்பதை இந்த ஆர்டிக் ஆப்பிளில் எளிதாகக் கண்டுபிடித்துவிடவும் முடியும்” என்கிறார் ஆகனாகன் நிறுவனத்தின் தலைவர் நீல் கார்ட்டர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x