Published : 20 Oct 2017 10:57 AM
Last Updated : 20 Oct 2017 10:57 AM

உலக மசாலா: கால் வலிக்கக் காக்க வைக்கும் டீ!

சீ

னாவில் ஒரு கோப்பை தேநீருக்காக ஆயிரக்கணக்கான மக்கள் 5 மணி நேரம் கூட வரிசையில் காத்திருக்கிறார்கள்! சாதாரண ஐஸ் டீயின் மீது சீஸைச் சேர்த்துக் கொடுத்தால் அது ‘ஹே டீ’. சீனா முழுவதுமே ஹே டீ சுவையில் மக்கள் மயங்கிக் கிடக்கிறார்கள். தேநீர் பற்றிய அடிப்படை விஷயங்கள் கூடத் தெரியாத 21 வயது இளைஞர்தான் இந்த சீஸ் டீயை உருவாக்கியவர்! சில மாதங்களுக்கு முன்பு வரை ஜியாங்மென் பகுதியிலுள்ள சிறிய தெருவில், ஓர் ஆள் நிற்கும் அளவுக்கான கடையில்தான் இந்த சீஸ் டீ விற்பனை நடந்து கொண்டிருந்தது. இன்று குவாங்டோங் மாகாணத்தில் மட்டுமே 50 கிளைகள் இருக்கின்றன! ஒவ்வொரு கடையிலும் குறைந்தது 2 மணி நேரம் ஒரு கோப்பை தேநீருக்காக மக்கள் காத்திருக்கிறார்கள். ஒரு சில இடங்களில் 5 மணி நேரம் கூட பொறுமையுடன் காத்திருந்து, தேநீரைப் பருகுகிறார்கள். “கோங் சா என்ற தேநீரைப் பார்த்துதான் நான் சீஸ் டீயை உருவாக்கினேன். கோங் சா தேநீரில் க்ரீம் வைத்துக் கொடுப்பார்கள். சில காலம் இது பிரபலமாக இருந்தது. இன்று என்னுடைய சீஸ் டீ மக்களின் விருப்பமாக மாறிவிட்டது.

2012-ம் ஆண்டில் ஒரு சிறிய டீ கடையை ஆரம்பித்தேன். வியாபாரமே இல்லை. ஆனாலும் நம்பிக்கையைக் கைவிடவில்லை. கடையை மூடிவிட்டு, என்ன செய்யலாம் என்று யோசித்தேன். பல முயற்சிகளை மேற்கொண்டேன். எல்லாவற்றிலும் தோல்வி. இறுதியில் சீஸ் டீயை அறிமுகம் செய்தேன். இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்கும் என்று நானே எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றியில் கணிசமான பங்கு சமூக ஊடகங்களுக்குதான். நான் ஆரம்பத்தில் விளம்பரம் செய்யவே இல்லை. இதைப் பருகியவர்கள் நல்லவிதமான கருத்துகளைப் பரப்பிவிட்டனர். இன்றும் காத்திருந்து சீஸ் டீ வாங்கியதும் உடனே பருகுவதில்லை. ஒளிப்படம் எடுத்து, ஃபேஸ்புக்கில் போட்டுவிட்டுதான் குடிக்கிறார்கள். ஒரு கோப்பை டீ தயாரித்துக் கொடுக்க 1 நிமிடம்தான் ஆகும். ஒரு மணி நேரத்தில் 360 கோப்பைகளை வழங்குகிறோம். ஆனாலும் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்க முடியவில்லை. அவ்வளவு மக்கள் படை எடுக்கிறார்கள். இதைச் சமாளிக்க பல இடங்களில் கிளைகள் ஆரம்பித்துவிட்டோம். ஆனாலும் பிரச்சினை தீரவில்லை. கூட்டம் அலை மோதுகிறது. விரைவில் சீனா முழுவதும் கிளைகளைத் திறக்க இருக்கிறோம். 80 ரூபாய் முதல் 275 ரூபாய் வரை பல சுவைகளில் விற்பனை செய்துவருகிறோம். பால் கலக்காத தேநீரில் லேசான கசப்புச் சுவை இருக்கும். பாலாடைக் கட்டியைச் சேர்க்கும்போது கசப்புச் சுவை மறைந்துவிடுகிறது. இனிப்பு அதிகமாகத் தெரிகிறது. இதுதான் இந்தத் தேநீரை மக்கள் விரும்புவதற்குக் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். மக்களின் கருத்துகளை மிகவும் நெருக்கமாகக் கவனித்து வருகிறேன். அவர்களுக்குப் பிடிக்காத விஷயங்களை உடனுக்குடன் சரி செய்துவிடுவேன். கருவுற்றிருக்கும் பெண்கள் கூட வரிசையில் காத்திருப்பதைக் கண்டதும், அவர்களுக்கு வரிசையில் இருந்து விலக்கு அளித்தேன். ஆனால் அவர்கள் 2 கோப்பைகளுக்கு மேல் வாங்க முடியாது” என்கிறார் யுன்சென் நை.

சீனர்களை கால் வலிக்கக் காக்க வைக்கும் டீ!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x