Published : 13 Oct 2017 10:08 AM
Last Updated : 13 Oct 2017 10:08 AM

உலக மசாலா: குப்பையில் மருத்துவக் காப்பீடு.. இளைஞருக்குப் பூச்செண்டு!

ந்தோனேஷியாவைச் சேர்ந்த தொழில் முனைவர் ஒருவர், குப்பைகளை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஏழை மக்களுக்கு அடிப்படை மருத்துவக் காப்பீட்டை வழங்கி வருகிறார். ‘கார்பேஜ் க்ளினிகல் இன்சூரன்ஸ்’ என்ற பெயரில் மூன்று இடங்களில் நிறுவனத்தை நடத்தி வருகிறார் 28 வயது கமால் அல்பின்சையத். 7 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம், இன்று நாட்டின் பல பகுதிகளிலும் பலரால் ஆரம்பிக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. “வறுமையின் காரணமாக ஏழை மக்களுக்கு அடிப்படை மருத்துவ உதவிகள் கூட கிடைக்காததைக் கண்டு சின்ன வயதிலிருந்தே யோசித்து இருக்கிறேன். எங்கள் மலாங் நகரத்தில் மட்டும் ஒரு நாளைக்கு 55 ஆயிரம் டன்கள் குப்பை கொட்டப்படுகிறது என்பதும் அதில் பாதி அளவே அப்புறப்படுத்தப்படுகிறது என்பதும் தெரியவந்தது. மறுசுழற்சிக்கான குப்பைகளைப் பிரித்து, விற்றால் ஓரளவு பணம் கிடைக்கும். அதைக் கொண்டு ஏழை மக்களுக்கு அடிப்படை மருத்துவ உதவிகள் வழங்கலாம் என்று திட்டமிட்டேன்.

2010-ம் ஆண்டு என்னுடைய 21 வயதில் இந்தக் குப்பைக் மருத்துவக் காப்பீடு நிறுவனத்தை ஆரம்பித்தேன். ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வீட்டில் உள்ள குப்பைகளைத் தரம் பிரித்து, சேர்த்து வைக்க வேண்டும். மாதம் ஒருமுறை எங்களிடம் வந்து, சுமார் 3 கிலோ குப்பைகளைக் கொடுக்க வேண்டும். இந்தக் குப்பைகள் மூலம் 11,750 ரூபாய் கிடைக்கும். அதை வைத்து அவர்களுக்கான அடிப்படை மருத்துவக் காப்பீட்டை வழங்குகிறோம். இந்தோனேஷிய மக்களில் 60% பேர் ஏழைகள். அவர்களுக்கு மருத்துவக் காப்பீடு இதுவரை கிடைத்ததில்லை. இப்போதுதான் என்னைப் போன்ற பலரின் முயற்சியில் சிறிய அளவுக்காவது மருத்துவக் காப்பீடு வழங்க முடிந்திருக்கிறது. இதன்மூலம் மக்களுக்கும் மருத்துவ உதவி கிடைக்கிறது, சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது. எங்களோடு பல இளைஞர்கள் தன்னார்வத்துடன் வந்து, எதையும் எதிர்பார்க்காமல் வேலை செய்கிறார்கள். பிளாஸ்டிக், உலோகம், காகிதம் என்று குப்பைகளைப் பிரிப்பார்கள். மட்கும் குப்பைகளை உரமாகப் பயன்படுத்த முடியும் என்பதால், அதைத் தனியாக அனுப்பி வைத்துவிடுவார்கள். மலாங் நகரில் இயங்கும் எங்கள் மருத்துவக் காப்பீடு நிறுவனங்களின் மூலம் சுமார் 2 ஆயிரம் மக்கள் பலன் அடைகிறார்கள். ஜகார்தாவிலும் ஒரு நிறுவனம் இயங்கி வருகிறது. குப்பைகளால் எந்தப் பயனும் இல்லை என்று நினைத்த மக்கள், அதன்மூலம் மருத்துவ உதவி கிடைப்பதைப் பார்த்து, குப்பைகள்மீது மதிப்பு வைத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் இதுபோன்ற சேவையைத் தொடர்வது மிகவும் சவாலானது. புதிது புதிதாகப் பிரச்சினைகள் முளைக்கும். அவற்றைச் சரி செய்ய வேண்டும். மக்களின் நலன் மீது அக்கறை இருப்பதால்தான் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு, இந்த மருத்துவக் காப்பீடு நிறுவனத்தை நடத்திவருகிறோம். நாட்டின் பிற பகுதிகளில் இருந்து ஆர்வத்துடன் வரும் இளைஞர்களுக்கு, அவர்கள் பகுதியில் காப்பீடு நிறுவனம் ஆரம்பிக்கப் பயிற்சியும் உதவியும் செய்துவருகிறோம்” என்கிறார் கமால் அல்பின்சையத்.

குப்பையில் மருத்துவக் காப்பீடு.. இளைஞருக்குப் பூச்செண்டு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x