Published : 06 Oct 2017 09:34 AM
Last Updated : 06 Oct 2017 09:34 AM

உலக மசாலா: பாக்டீரியா காப்பாற்றுமா, கைவிடுமா?

ஜெ

ர்மனியைச் சேர்ந்த 48 வயது நடிகை மானோஷ் 35 லட்சம் ஆண்டுகள் பழமையான பாக்டீரியாவைத் தன் உடலில் செலுத்திக்கொண்டிருக்கிறார். இதன்மூலம் தன்னுடைய முதுமை மறைந்து, இளமை திரும்பும் என்று நம்புகிறார். “நான் ஒரு பரிசோதனை எலி போன்றவள். இளமையைத் தக்க வைப்பதற்காக எந்த விஷயத்தையும் மேற்கொள்ளத் தயாராக இருக்கிறேன். எனக்குச் சின்ன வயதில் இருந்தே முதுமை மீது வெறுப்பு வந்துவிட்டது. நான் மட்டும் முதுமை அடைந்துவிடக் கூடாது என்று எண்ணிக்கொள்வேன். கடந்த 20 ஆண்டுகளில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யாத உறுப்புகளே இல்லை என்று சொல்லலாம். மூக்கில் 2, உதட்டில் 2, மார்பகங்களில் 6 என்று ஏராளமான அறுவை சிகிச்சைகளை பல லட்சங்கள் செலவு செய்து செய்திருக்கிறேன். சமீபத்தில் பாக்டீரியா சிகிச்சை பற்றிக் கேள்விப்பட்டேன். உடனே அதைச் செய்துகொள்ள முடிவெடுத்தேன். 35 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவான Bacillus F பாக்டீரியாவை ரஷ்ய விஞ்ஞானிகள்தான் கண்டுபிடித்துள்ளனர். ரஷ்யாவின் வடமேற்கு காடுகளில் 2009-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 2015-ம் ஆண்டு வரை இதை வைத்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் இந்த பாக்டீரியா முதுமைக்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை. இளமையை நீண்ட காலம் தக்க வைத்துக்கொள்ளும் ஆற்றல் இருப்பதாகச் சொல்லப்பட்டது. உடனே நான் அவர்களைத் தொடர்புகொண்டேன். என் உடலில் பாக்டீரியாவைச் செலுத்த சம்மதம் தெரிவித்தேன். ஆராய்ச்சியாளர்கள், என் குடும்பத்தினர், நண்பர்கள் இதைச் செலுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள். ஆனால் நான் யார் சொல்வதையும் பொருட்படுத்தவில்லை. உரிமம் இல்லாததால் பாக்டீரியாவைச் செலுத்த எந்த மருத்துவரும் முன்வரவில்லை. ஒரு சில மருத்துவர்களின் மேற்பார்வையில் நானே 2 வாரங்களுக்கு ஒருமுறை செலுத்திக்கொண்டேன். 3 மாதங்களில் என் உடலில் மாற்றம் தெரிய ஆரம்பித்துவிட்டது. என் தோல் குழந்தையின் தோல்போல் மென்மையாகிவிட்டது. முகத்தில் தழும்புகள், கோடுகள் எல்லாம் மறைந்துவிட்டன. தூக்கம் இன்மையால் அவதிப்பட்டேன். இப்போது நீண்ட நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறேன். ஒருவேளை எனக்கு இது நீண்ட காலத்துக்கு வெற்றியைத் தராவிட்டாலும் பரவாயில்லை. இந்த பாக்டீரியா என்னுடைய ஆயுளை 80, 90 வயதுவரை நீட்டிக்கும். நான் சாகும் வரை என் உடலின் அனைத்து பாகங்களும் வேலை செய்யும்” என்கிறார் மானோஷ். “இளமைக்காக ஏதோ ஒரு பாக்டீரியாவை உடலுக்குள் செலுத்துவதை எங்கள் குடும்பம் கடுமையாக எதிர்த்தது. மருத்துவர் அனாட்டோலி ப்ரோச்கோவும் எவ்வளவோ அறிவுரை வழங்கினார். நேரடியாக ரத்தத்துக்குள் செலுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால் என் அம்மா எதையும் கேட்கவில்லை. முதுமையை ஒரு நோயாக அவர் நினைத்திருக்கிறார். அதைச் சரி செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்” என்கிறார் மானோஷின் மகன். மனித உடல், எலிகள், தாவரங்கள் போன்றவற்றில் நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சிகளில் பாக்டீரியா மூலம் ஆயுள் நீண்டிருப்பதை அறிய முடிகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

பாக்டீரியா காப்பாற்றுமா, கைவிடுமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x