Published : 05 Oct 2017 05:29 PM
Last Updated : 05 Oct 2017 05:29 PM

இலக்கியத்துக்கான நோபல் பரிசு: பிரிட்டன் எழுத்தாளர் கசுவோ இசிகுரோ தேர்வு

ஸ்டாக்ஹோம்பிரிட்டிஷ் எழுத்தாளர் கசுவோ இசிகுரோவுக்கு (62) இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு பிரிட்டிஷ் எழுத்தாளர் கசுவோ இசிகுரோ நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 1954 நவம்பர் 8-ம் தேதி ஜப்பானின் நாகசாகி நகரில் கசுவோ பிறந்தார். அவருக்கு 5 வயதிருக்கும்போது அவரது குடும்பம் பிரிட்டனில் குடியேறியது. சிறுவயது முதலே எழுத்தின் மீது ஆர்வம் கொண்ட கசுவோ கடந்த 1982-ல் ‘தி பேல் வியூ ஆப் ஹில்ஸ்’ என்ற நாவலை வெளியிட்டார். பின்னர் நாகசாகியை மையமாக வைத்து 1986-ல் இரண்டாவது நூலை எழுதி வெளியிட்டார். அடுத்தடுத்து நாவல்கள், திரைக்கதை, சிறுகதைகள் என ஏராளமான படைப்புகளை வழங்கினார்.

கடந்த 2015-ம் ஆண்டில் ‘தி பரிடு ஜயன்ட்’ என்ற நாவலை வெளியிட்டார். கடைசி காலத்தில் மகனோடு சேர்ந்து வாழ்வதற்காக அவரை தேடி செல்லும் வயதான பெற்றோரை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த நாவலுக்காக கசுவோ இசிகுரோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தம் 8 நாவல்களை கசுவோ எழுதியுள்ளார். அந்த நாவல்கள் 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

நோபல் பரிசு கிடைத்திருப்பது குறித்து அவர் கூறியதாவது: ஊடகங்கள்தான் என்னை முதலில் தொடர்பு கொண்டன. எனவே இந்த தகவல் வதந்தியாக இருக்கும் என்றே கருதினேன். உண்மை என்று தெரிந்தபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மிகப்பெரிய எழுத்தாளர்களுக்கு கிடைத்த நோபல் பரிசு இன்று எனக்கும் கிடைத்திருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த லோர்னாவை, கசுவோ திருமணம் செய்துள்ளார். இத்தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x