Published : 01 Oct 2017 10:34 AM
Last Updated : 01 Oct 2017 10:34 AM

உலக மசாலா: நல்ல அட்வைஸ்!

கனடாவைச் சேர்ந்த 24 வயது காட் காலிங்கர் மாடலாக இருக்கிறார். சமீபத்தில் கண்ணில் டாட்டூ போட்டுக்கொண்டார். ஆனால் ஏதோ தவறு நேர்ந்து, இன்று ஒரு கண்ணின் பார்வையை இழந்துவிட்டார். “கண்ணில் டாட்டூ வரைந்துகொள்வது இன்று சாதாரணமானது. இப்படி ஒரு கொடூரம் நிகழும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. டாட்டூ போட்டுக்கொண்ட பிறகு என் கண்ணிலிருந்து ஊதா நிறத்தில் கண்ணீர் வடிய ஆரம்பித்தது. உடனே மருத்துவமனைக்குச் சென்றேன். சிகிச்சை எடுத்துக்கொண்டு வீடு திரும்பினேன். ஆனால் நிலைமை இன்னும் மோசமானது. கண் பெரிதாக வீங்கியது. இமையைத் திறக்க முடியாமல் போனது. டாட்டூ மை கார்னியாவை பாதித்துவிட்டதால், பார்வையும் குறைந்தது. லட்சக்கணக்கில் பணம் செலவு செய்தும் என் பழைய பார்வையை மீட்க முடியவில்லை. கண்ணும் பழைய நிலைக்கு வரவில்லை. இன்னும் வெளிர் ஊதா நிறத்தில்தான் இருக்கிறது. என் பார்வை முழுமையாக மீண்டும் கிடைக்காது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். இன்னும் மோசமாவதற்குள் அறுவை சிகிச்சை செய்துகொள்ளப் போகிறேன். அதற்கு முன்பு எனக்கு ஏற்பட்ட பாதிப்பை உலகத்திடம் சொல்லிவிட முடிவு செய்தேன். என்னைப்போல் எதிர்காலத்தில் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதால் என்னுடைய படங்களை வெளியிட்டிருக்கிறேன். கண்களில் டாட்டூ போடும் முன்பு ஆயிரம் தடவை யோசியுங்கள். தகுதியான, தரமான டாட்டூ கலைஞரா என்று விசாரித்துக்கொள்ளுங்கள். முடிந்தால் கண்களில் டாட்டூ போடுவதைத் தவிர்த்துவிடுங்கள்” என்கிறார் காட் காலிங்கர்.

நல்ல அட்வைஸ்!

இங்கிலாந்தில் வசிக்கும் 65 வயது தெரசா டாயல், கடந்த 14 ஆண்டுகளாக இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். காரணம், இறுதிச் சடங்குக்குப் பிறகு நடைபெறும் விருந்தில் உணவருந்துவதற்காக இப்படிச் செய்கிறார் என்கிறார்கள். தெரசா அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசுவதில்லை. அவர் வசிக்கும் பகுதியைச் சுற்றிலுமுள்ள தேவாலயங்களில் நடைபெறும் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்கிறார். தன்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறார். பிறகு விருந்தில் கலந்துகொண்டு சாப்பிடுகிறார். சில பாத்திரங்களில் உணவுகளை எடுத்துக்கொண்டு, சைக்கிளில் வீடு திரும்பி விடுகிறார். இவரைப் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்கிறது. “கடந்த வாரம் இளம் பெண்ணின் இறுதிச் சடங்கில் பங்கேற்றார் தெரசா. பெண்ணின் தாய், இவரை யார் என்று விசாரித்தார். இறந்த பெண்ணுடன் உணவகத்தில் ஒன்றாக வேலை பார்த்ததாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் தன் மகள் உணவகத்தில் இதுவரை வேலை செய்ததில்லை என்றவர், சந்தேகப்பட்டு விசாரித்தபோது அங்கிருந்து கிளம்பிவந்துவிட்டார். ஒரு சில இறுதிச் சடங்குகளில் விருந்து இல்லை என்று தெரிந்தால், கறுப்பு ஆடையைக் களைந்துவிட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்காமல் திரும்பிவிடுவார்” என்கிறார் தெரசாவின் பக்கத்து வீட்டுக்காரர். தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார் நோயல் கோன்னோலி, “தெரசா அழையா விருந்தாளியாக எல்லா இறுதிச் சடங்குகளிலும் பங்கேற்பது எங்களுக்குத் தெரியும். உணவுக்காகத்தான் இப்படிச் செய்கிறார் என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். 14 ஆண்டுகளாக உணவுக்காகத் தெரியாதவர்களின் இறுதிச் சடங்குகளில் ஒருவரால் பங்கேற்க முடியுமா? ஏதாவது காரணம் இருக்கும். அதனால்தான் நாங்கள் அவரை வரவேண்டாம் என்று சொல்வதில்லை” என்கிறார்.

உணவுக்காக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டுப் போகட்டுமே…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x