Published : 29 Sep 2017 10:36 AM
Last Updated : 29 Sep 2017 10:36 AM

உலக மசாலா: வாடகை பணத்தில் ஒரு திருமணத்தையே நடத்திவிடலாம்!

மணப்பெண்கள் திருமணத்தின்போது மிகச் சிறந்த ஆடை, அணிகலன்களை அணிய விரும்புகிறார்கள். இவர்களின் விருப்பத்தை நிறைவேற்றியிருக்கிறது ஜப்பானைச் சேர்ந்த குராவ்டியா நிறுவனம். டிஸ்னியின் பிரபலமான இளவரசிகள் அணியும் ஆடைகளை, திருமண ஆடைகளாக வடிவமைத்திருக்கின்றனர். ஸ்நோ ஒயிட், சிண்ட்ரெல்லா, ராபுன்ஸெல், ஸ்லீப்பிங் பியூட்டி, ஏரியல், பெல் போன்ற இளவரசிகளின் ஆடைகளை அற்புதமாக உருவாக்கியிருக்கின்றனர். “இளவரசிகளின் ஆடைகள் மிகச் சிறந்த வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டவை. எந்த ஆடையை அணிந்தாலும் முழுத் திருப்தி கிடைக்கும். இந்த ஆடையை அணியும் மணமகள் நிஜமான இளவரசியைப்போல் ஜொலிப்பார். ஆடைகள் மட்டுமின்றி, திருமணம் நடக்கும் அரங்கம், ராஜ விருந்து, மணமகனுக்கான ஆடைகள் போன்றவற்றையும் நாங்களே ஏற்பாடு செய்து தருகிறோம். திருமணம் நடக்கும் இடத்தை தேவதைக் கதைகளில் வரும் இடம் போன்று உருவாக்கிவிடுவோம். இதுவரை 14 இளவரசிகளின் ஆடைகளை உருவாக்கியிருக்கிறோம். இதில் 6 இளவரசிகள் உலகம் முழுவதும் பிரபலம். அதனால் அந்த ஆடைகளை அதிகமாக விரும்புகிறார்கள். இந்த ஆண்டு நவம்பர் முதல் தேதியிலிருந்து ஜப்பானில் மட்டும் ஆடைகள் விற்பனைக்கு வருகின்றன. ஆடைகள் விலை அதிகம் என்பதால் வாடகைக்குக் கொடுப்பதில்தான் கவனம் செலுத்துகிறோம். இளவரசி ஆடையின் கட்டணம் 2.37 லட்சம் ரூபாய். இளவரசரின் ஆடையையும் வாடகைக்கு எடுப்பதென்றால் மேலும் 60 ஆயிரம் ரூபாய் செலவாகும். திருமணம் முடிந்த பிறகு, ஆடைகளை திருப்பித் தரவேண்டும் என்பது முக்கியம். வசதியானவர்கள் எங்களிடம் ஆடைகளை வாங்கி, வாடகைக்கு விட்டுச் சம்பாதிக்கலாம்” என்கிறார் குராவ்டியா நிறுவனர்.

வாடகை பணத்தில் ஒரு திருமணத்தையே நடத்திவிடலாம்!

பியூர்டோ ரிகோ தீவைப் புரட்டிப் போட்டது மரியா புயல். வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துகொண்டது. மனிதர்கள் பிழைப்பதே கடினமான காரியமாகிவிட்ட நிலையில், ஒரு தம்பதியர் தங்களின் 7 நாய்களையும் 8 பூனைகளையும் காப்பாற்றியிருக்கின்றனர்! போலந்தைச் சேர்ந்த ஹராசிமோவிஸும் அவரது மனைவி ரோசாரியோவும் புயல் வருவதற்கு முன்பே தங்கள் குழந்தைகளை நண்பரின் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். “மரியா புயல் பற்றிய எச்சரிக்கைகள் வந்துகொண்டிருந்தாலும் நாங்கள் இவ்வளவு பாதிப்பை எதிர்பார்க்கவில்லை. புயல் வந்தபிறகு தப்பிச் செல்லவும் வழியில்லை. வீட்டுக்குள் வெள்ள நீர் புகுந்தது. எங்கள் செல்லப் பிராணிகளை உயரமான அலமாரிகள் மீது வைத்திருந்தோம். கழுத்தளவு தண்ணீர் வந்ததும் இத்துடன் எங்கள் வாழ்க்கை முடிந்துவிடும் என்று அஞ்சினோம். வெள்ள நீர் வடிய ஆரம்பித்தது. வீடு முழுவதும் சகதி. பொருட்கள் அனைத்தும் நாசமாகியிருந்தன. மின்சாரம் இல்லை. அருகில் உள்ளவர்கள் இங்கிருந்து சென்றுவிடும்படிக் கூறினார்கள். ஆனால் எங்கள் செல்லப் பிராணிகளை விட்டுவிட்டு எங்களால் எப்படிப் போக முடியும்? மீண்டும் வெள்ள நீர் வீட்டுக்குள் வர ஆரம்பித்தது. வேறு வழியின்றி பூனைகளையும் நாய்களையும் அழைத்துக்கொண்டு, பக்கத்து வீட்டுக் கதவை உடைத்து, மாடியில் தஞ்சமடைந்தோம். இப்படி ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது” என்கிறார் ரோசாரியோ.

செல்லப் பிராணிகளைக் காப்பாற்றிய அதிசய தம்பதியர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x