Published : 27 Sep 2017 10:41 AM
Last Updated : 27 Sep 2017 10:41 AM

உலக மசாலா: மலை ஏறும் ஸ்பைடர் உமன்!

சீ

னாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மியாவோ மக்கள் பல நூற்றாண்டுகளாக செங்குத்தான, கரடுமுரடான மலை உச்சிகளில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை எல்லோரும் ஸ்பைடர்மேன் என்று அன்புடன் அழைக்கிறார்கள். இவர்களில் ஒரே ஒரு பெண் ஸ்பைடர் உமனும் இப்போது பிரபலமாகி இருக்கிறார். லுவோ டென்பிங் கயிறு கட்டிக்கொள்ளாமல், எந்தவிதப் பாதுகாப்பு கருவிகளையும் எடுத்துக்கொள்ளாமல் 100 மீட்டர் உயரம் கொண்ட குன்றுகளில் ஏறி, இறங்குகிறார். மியாவோ ஆண்கள் குன்றின் மீது வளரும் அரிய மூலிகைகளைப் பறிப்பதற்காகவே காலம் காலமாக ஏறிக்கொண்டிருக்கிறார்கள். ஆஸ்துமா, வாத நோய்களுக்கான பாரம்பரிய சீன மருந்துகள் இந்த மூலிகைகளிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. ஆபத்தான இந்தப் பணியில் தற்போது மிகச் சில ஆண்கள் மட்டுமே பங்கேற்கிறார்கள். “மியாவோ மக்கள் தைரியமானவர்கள், திறமையானவர்கள். என் அப்பா மிகவும் நேர்த்தியாக மலை ஏறுவார். நான் ஒரே பெண் என்பதால் அவருக்குப் பிறகு மலை ஏறுவதற்கு எங்கள் வீட்டில் ஆட்கள் இல்லை. ஆண்தான் ஏற வேண்டுமா, நான் ஏறினால் என்ன என்று தோன்றியது. 15 வயதில் மலை ஏற ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் எனக்கு மிகவும் பயமாக இருந்தது. எப்படி இவர்களால் ஏற முடிகிறது என்று ஆச்சரியப்பட்டேன். இந்தக் குன்று என்னை ஏறச் சொல்லி அழைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக என் கைகளுக்கும் கால்களுக்கும் பாறைகள் பழக்கமாகின. பிறகு என் அப்பாவை விட வேகமாக ஏறும் அளவுக்கு முன்னேறினேன். ஒரு கட்டத்தில் மலை ஏறுவதை விட்டுவிட்டேன். திருமணத்துக்குப் பிறகு கணவரின் குறைவான சம்பளத்தில் குழந்தைகளைப் படிக்க வைக்க முடியவில்லை. அதனால் மீண்டும் எனக்குத் தெரிந்த இந்த வேலையைச் செய்ய ஆரம்பித்தேன். நாங்கள் குன்றின் மீது ஏறுவது சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்கிறது என்பதால், அரசாங்கம் இதை ஒரு சுற்றுலாவாக மாற்றிவிட்டது. நாங்கள் இப்போது அரசாங்கத்தில் முறைப்படி வேலை செய்துவருகிறோம். காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணி வரை வேலை செய்ய வேண்டும். தினமும் 2 முறை ஏறி, இறங்குவோம். இதன்மூலம் மாதம் 30 ஆயிரம் வருமானம் வருகிறது. ஒரே ஸ்பைடர் உமன் நான் என்பதால் மிகவும் பிரபலமாகிவிட்டேன். எல்லோரும் ஒரு பெண் இப்படி மலை ஏறலாமா என்று கேட்கிறார்கள். ஆண்களால் செய்யக்கூடிய அத்தனை வேலைகளையும் பெண்களாலும் செய்ய முடியும். அதைத்தான் நான் நிரூபித்திருக்கிறேன். இந்த வேலை செய்வதில் எந்தக் கஷ்டமும் எனக்கு இல்லை” என்கிறார் லுவோ டென்பிங்.

மலை ஏறும் ஸ்பைடர் உமன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x