Published : 24 Sep 2017 07:33 AM
Last Updated : 24 Sep 2017 07:33 AM

உலக மசாலா: விலங்குகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

காடுகள் அழிப்பு, சுற்றுச் சூழல் சீர்கேடு, வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் ஓரங் ஊத்தன்களின் எண்ணிக்கை மிக மோசமாகக் குறைந்துவிட்டது. ஆனால் தற்போது ஓர் ஓரங் ஊத்தன் பற்றி உலகமே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது. அல்பா என்ற ஓரங் ஊத்தன், அல்பினோ என்ற வெண் தோல் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறது. மரபணு குறைபாட்டால் ஏற்படும் இந்த நோயால் சிவப்பும் பழுப்புமாக இருக்க வேண்டிய ஓரங் ஊத்தனின் தோல், முடி என்று அனைத்தும் வெள்ளையாகக் காட்சியளிக்கிறது. உலகிலேயே அல்பினோ வகை ஓரங் ஊத்தன் இது ஒன்றுதான். 5 வயது அல்பா, ஒரு கூட்டத்தால் பிடிக்கப்பட்டு, கூண்டுக்குள் அடைபட்டிருந்தது. இந்தோனேஷிய மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டபோது மிகவும் மோசமான நிலையில் இருந்தது. தொற்று, நீரிழப்பு, எடை குறைப்பு போன்ற பல பிரச்சினைகள் இருந்தன. “ஓரங் ஊத்தன்கள் பொதுவாக மனிதர்களிடம் நட்பாகப் பழகக்கூடியவை. அல்பாவுக்கு அல்பினோ பிரச்சினை இருப்பதால் பார்க்கும் சக்தியும் கேட்கும் சக்தியும் குறைவாக இருக்கிறது. அதோடு தோல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கின்றன. இதனால் அல்பா உயிர் வாழ்வது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. அதனால்தான் நாங்கள் தனிப்பட்ட முறையில் அல்பாவைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். காடுகளில் சுதந்திரமாகச் சுற்றித் திரிய வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். ஆனால், அல்பினோ அல்பாவுக்கு மனிதர்களால் ஆபத்து காத்திருக்கிறது. இதுபோன்ற அல்பினோ உயிரினங்களை, ‘அதிர்ஷ்டம்’ என்ற பெயரில் பிடித்து, விற்பனை செய்வது ஒரு தொழிலாக மாறிவருகிறது. அதனால்தான் காட்டில் மீண்டும் அல்பாவை விடுவதற்கு நாங்கள் விரும்பவில்லை. அதே நேரம் அரிய அல்பினோ ஓரங் ஊத்தனை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. அல்பாவுடன் இன்னும் 3 ஓரங் ஊத்தன்களைக் கவனித்து வருகிறோம். ஓர் இடம் சொந்தமாக வாங்கி, ஓரங் ஊத்தன்களுக்குப் பாதுகாப்பான, அதே நேரத்தில் காட்டில் இருக்கும் சூழலை உருவாக்குவதற்கு சுமார் 52 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. உலகின் ஒரே அல்பினோ ஓரங் ஊத்தனை பாதுகாக்கும் முயற்சியில் உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான மக்கள் உதவ ஆரம்பித்திருக்கிறார்கள். அல்பா மூலம் அழிந்து வரக்கூடிய ஆபத்தான நிலையில் இருக்கும் ஓரங் ஊத்தன்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுவருகிறது” என்கிறார் செய்தித் தொடர்பாளர் நிகோ ஹெர்மனு.

உலகின் ஒரே அல்பினோ ஓரங் ஊத்தனை பாதுகாப்பவர்களுக்குப் பாராட்டுகள்!

அமெரிக்க உயிரியல் பூங்காவைச் சுற்றிப் பார்க்க வந்த ஒரு பெண், யானையுடன் ஒளிப்படம் எடுக்க விரும்பினார். யானையும் தடுப்புக் கம்பிகள் மீது நீண்ட தும்பிக்கையை வைத்தபடி நின்றுகொண்டிருந்தது. தும்பிக்கையைப் பிடித்தபடி சந்தோஷமாக நின்றார் அந்தப் பெண். அடுத்த நொடி யானை தும்பிக்கையால் அந்தப் பெண்ணின் கழுத்தைச் சுற்றியது. தலையில் அடித்தது. அவர் தலையில் மாட்டியிருந்த கண்ணாடியை உடைத்தது. பெரிய காயங்கள் இன்றி தப்பினாலும் அந்தப் பெண்ணுக்கு அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு வெகு நேரமானது.

விலங்குகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x