Published : 20 Sep 2017 10:27 AM
Last Updated : 20 Sep 2017 10:27 AM

உலக மசாலா: இயற்கையின் அதிசயங்களில் கல் முட்டையிடும் குன்றும் ஒன்று!

சீனாவில் உள்ள ஒரு குன்றை, ’முட்டையிடும் மலை’ என்று மக்கள் அழைக்கிறார்கள். கைஸொவ் மாகாணத்தில் உள்ள சான் டா யா குன்றில் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல் முட்டைகள் வெளிவருவதாகச் சொல்கிறார்கள். 9 அடி உயரமும் 65 அடி நீளமும் கொண்ட சமதளமற்ற குன்றில் டஜன் கணக்கில் கோள வடிவ முட்டைகள் வெவ்வேறு அளவுகளில் உருவாகியிருக்கின்றன. குன்றுக்கு அருகில் இருக்கும் குலு கிராமத்தைச் சேர்ந்த மக்கள், இந்த மலை நன்றாகச் சாப்பிட்டு, 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல் முட்டைகளை இடுவதாகச் சொல்கிறார்கள். இந்த விசித்திரமான முட்டை இடும் மலையை ஆய்வு செய்வதற்குப் புவியியலாளர்கள் மிகவும் சிரமப்படவேண்டியிருக்கிறது. நகரிலிருந்து நீண்ட தூரம் பயணம் செய்து, ஒதுக்குப்புறமான குன்றை அடையவேண்டும். குன்று கடினமான பாறைகளால் ஆனது. முட்டைகள் சுண்ணாம்புப் பாறைகளால் ஆனவை. எல்லா முட்டைகளும் ஒரே விதமான பாறையால் உருவாகவில்லை. இதுவரை இந்தக் குன்றிலிருந்து ஏன் முட்டை வடிவப் பாறைகள் உருவாகின்றன என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. இன்னும் சில கோடி ஆண்டுகளுக்குப் பிறகு கல் முட்டைகள் எப்படி உருவாகின்றன என்று தெரியவரலாம் என்கிறார்கள். பல தலைமுறைகளாக இந்தக் குன்று முட்டைகளை இடுவது குறித்து குலு கிராம மக்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். அடிக்கடி குன்றுக்கு வந்து, முட்டைகளைத் தொட்டு வணங்குகிறார்கள். ‘கடவுள் முட்டைகள்’ என்றும் ’அதிர்ஷ்டம் தரும் முட்டைகள்’ என்றும் நம்புகிறார்கள். கிராமத்தில் வசிக்கும் 125 குடும்பங்களும் குறைந்தது ஒரு கல் முட்டையையாவது வைத்திருக்கின்றன. மற்ற கிராமங்களில் இருந்தும் முட்டைகளை எடுத்துச் செல்கிறார்கள். சமீபத்தில் இந்தக் குன்று பிரபல சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது. பெரும்பாலான கல் முட்டைகள் விற்பனை செய்யப்பட்டுவிட்டன. 70 கல் முட்டைகளே தற்போது குலு கிராமத்தில் இருக்கின்றன. புதிதாக விழும் முட்டைகளைத் திருடுவதற்காகப் பலரும் காத்திருக்கிறார்கள். சீனாவில் உள்ள மலைகளிலேயே சான் டா யா குன்றில்தான் அதிக அளவில் கல் முட்டைகள் உருவாகின்றன. இவை மற்ற கல் முட்டைகளைவிட மிகச் சிறப்பாக இருக்கின்றன.

இயற்கையின் அதிசயங்களில் கல் முட்டையிடும் குன்றும் ஒன்று!

அமெரிக்காவைச் சேர்ந்த அமன்டா சின்டர் தாயாகியிருந்தார். குழந்தை பிறப்பதற்கு முன்பு அமன்டாவும் அவரது கணவர் ஜெஸ்ஸி வேனும் போடோஷூட் செய்யவேண்டும் என்று திட்டமிட்டனர். ஆனால் ஒரு மரத்தை வெட்டிக்கொண்டிருந்தபோது அந்த மரம் விழுந்து, விபத்தில் உயிரிழந்தார் ஜெஸ்ஸி. அமன்டா உடைந்து போனார். தன்னைத் தேற்றிக்கொண்டவர், தனியாக போடோஷூட்டில் பங்கேற்றார். இவரது உருவத்துக்கு அருகில் ஜெஸ்ஸியின் உருவத்தை போட்டோஷாப் மூலம் பொருத்தச் சொன்னார். “மற்றவர் கண்களுக்கு ஜெஸ்ஸி இல்லை என்பது நிஜம். ஆனால் என்னைப் பொருத்தவரை அவர் இருக்கிறார். அதனால்தான் ஒளிப்படங்களில் நான் பளிச்சென்றும், ஜெஸ்ஸி மங்கலாகவும் தெரியும்படி உருவாக்கச் சொன்னேன். ஆகஸ்ட் மாதம் குழந்தை பிறந்தவுடன் ஒளிப்படக்காரர் ஆல்பத்தைக் கொடுத்தார். என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை” என்கிறார் அமன்டா.

நெகிழ்ச்சியான ஆல்பம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x