Published : 17 Sep 2017 11:05 AM
Last Updated : 17 Sep 2017 11:05 AM

உலக மசாலா: அடடா! காபியில் செல்லப் பிராணிகளின் படங்கள்!

தைவானில் உள்ள கஃபே மை காஃபி மையத்தில் விலங்குகளின் உருவங்களை, காபியில் உருவாக்கித் தருகிறார்கள். விலங்குகள் மீது அளவற்ற அன்பு வைத்திருப்பவர்களுக்கு பால், சாக்லெட் நுரையில் அழகான செல்லப் பிராணிகளை உருவாக்கித் தருகிறார்கள். “செல்லப் பிராணிகளின் படங்களைக் கொடுத்தால், அதே போன்ற உருவத்தை காபியில் கொண்டுவந்துவிடுவோம். அடிப்படை விஷயங்களை என் ஊழியர்கள் செய்வார்கள். நுரை மூலம் உருவத்தை நான் கொண்டுவருவேன். இந்த காபிகளுக்கு வரவேற்பு அதிகம் இருக்கிறது” என்கிறார் சாங் குயீ ஃபாங்.

அடடா! காபியில் செல்லப் பிராணிகளின் படங்கள்!

தாய்லாந்தில் பல தார மணம் சட்டப்படி குற்றம். இந்த நவீன காலத்திலும் ஒருவர் 120 பெண்களைத் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார்! புரோம்னீ மாவட்டத்தில் வசிக்கும் டாம்போன் பிரசெர்ட் சட்டத்துக்குப் புறம்பாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்திருக்கும் விஷயம் சமீபத்தில் வெளியே வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 58 வயது டாம்போன் உள்ளூர் அரசியல்வாதியாகவும் கட்டுமானத் தொழிலதிபராகவும் இருக்கிறார். “எனக்குத் தாய்லாந்து முழுவதும் தற்போது 120 மனைவிகள் இருக்கிறார்கள். 28 மகன்களும் மகள்களும் இருக்கிறார்கள். யாரையும் ஏமாற்றி நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. பெண்கள், அவர்கள் குடும்பத்தினரின் அனுமதியோடுதான் திருமணம் செய்திருக்கிறேன். ஒவ்வொரு திருமணமும் என்னுடைய அனைத்து மனைவிகளுக்கும் தெரியும். அவர்களின் சம்மதத்துடன்தான் செய்திருக்கிறேன். அதனால்தான் இதுவரை எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. எனக்கு 17 வயதில் முதல் திருமணம். 3 குழந்தைகள் பிறந்தனர். என்னுடைய கடின உழைப்பால் தொழிலதிபராகவும் அரசியல்வாதியாகவும் உயர்ந்தேன். நாடு முழுவதும் என் தொழில் விரிவடைந்தது. எங்கெல்லாம் கட்டிடம் கட்டப் போகிறேனோ அங்கெல்லாம் தங்க வேண்டியிருக்கும். அப்போதுதான் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் வந்தது. என்னுடைய எல்லா மனைவிகளும் 20 வயதுக்குக் குறைவானவர்கள்தான். வயதான பெண்களை நான் விரும்புவதில்லை. அவர்கள் அதிகமாக விவாதம் செய்வார்கள். ஊருக்கு ஒருத்தரைத் திருமணம் செய்து, அந்த ஊரில் வேலைக்காகச் செல்லும்போது குடும்பம் நடத்திக்கொள்வேன். ஒவ்வொரு மனைவியையும் நான் மிகவும் மதிக்கிறேன், அன்பு செலுத்துகிறேன். அவர்களும் என் மீது அன்பு செலுத்துகிறார்கள். வீடில்லாத மனைவிகளுக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளேன். எல்லோரையும் பொருளாதார ரீதியில் சிறப்பாக வைத்திருக்கிறேன். பாங்காக்கில் சில கி.மீ. இடைவெளியில் 22 மனைவிகள் இருக்கிறார்கள். யாருமே சண்டையிட்டுக் கொண்டதில்லை. நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டாலும் இருவருமே என் மனைவிகள் என்று தெரியவந்தாலும் ஒரு புன்னகையால் கடந்து சென்றுவிடுவார்கள். நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தால் அனைத்து மனைவிகளிடமும் முறையாகத் தகவல் கொடுத்துவிடுவேன். சட்டப்படி எங்கள் திருமணத்துக்கு அனுமதி இல்லாவிட்டாலும் நான் பாரம்பரிய முறைப்படித்தான் திருமணம் செய்கிறேன். எனக்கும் பிரச்சினை இல்லை. என்னுடைய மனைவிகள், குழந்தைகளுக்கும் பிரச்சினை இல்லை” என்று பத்திரிகையாளர்களிடம் டாம்போம் கூறினார். இந்தச் சந்திப்பின்போது இவருடைய 27 வயது மனைவி நாம் ஃபோன் உடன் இருந்தார்.

மன்னர் காலத்தில்தான் இதுபோன்ற செய்திகளை கேள்விப்பட்டிருக்கிறோம்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x