Published : 15 Sep 2017 10:14 AM
Last Updated : 15 Sep 2017 10:14 AM

உலக மசாலா: ஐயோ… புதுசு புதுசா நோய் உருவாகுதே…

ஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசித்துவரும் நடாலியா அட்லெர், விநோத நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். திடீரென்று இமைகள் மூடிக்கொண்டால் 3 நாட்களுக்கு அவரால் இமைகளைத் திறக்க முடியாது. 13 ஆண்டுகளாக இந்த விசித்திர நோயால் நடாலியா அனுபவிக்காத துன்பமே இல்லை. இதுவரை ஏராளமான பரிசோதனைகள் செய்து பார்த்துவிட்டார்கள். ஆனால் சரியான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. “17 வயதில் ஒரு ஞாயிற்றுக் கிழமை தாமதமாகக் கண் விழித்தேன். என்னுடைய இமைகள் ஏனோ வீங்கியிருந்தன. என்ன காரணம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது இமைகள் இடைவிடாமல் மூடி, மூடித் திறந்தன. சில நிமிடங்களில் மூடிய இமைகளை என்னால் திறக்க முடியவில்லை. உடனே மருத்துவரிடம் சென்றோம். அவருக்கும் காரணம் புரியவில்லை. மூன்று நாட்கள் பார்வையின்றி தவித்துக்கொண்டிருந்தேன். பிறகு திடீரென்று இமைகள் திறந்தன. என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இனி பிரச்சினை இல்லை என்று நினைத்தேன். ஆனால் சில நாட்களில் மீண்டும் இமைகள் மூடிக்கொண்டன. 3 நாட்களுக்குப் பிறகு திறந்தன. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மருத்துவரைப் பார்த்தோம். பரிசோதனைகள் எடுத்தோம். ஆனால் யாருக்கும் காரணம் தெரியவில்லை. மருத்துவ உலகத்துக்கே என் பிரச்சினை சவாலாக இருந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு வரிசையாகப் பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இமைகளில் உள்ள 99% தசைகளை எடுத்துவிட்டனர். ஆனாலும் மாதம் ஒருமுறை இமைகள் மூடிக்கொள்வதை இன்றுவரை தடுக்க முடியவில்லை. கடந்த 13 ஆண்டுகளில் 40 மருத்துவ நிபுணர்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனாலும் என்னை முழுவதுமாகக் குணப்படுத்த முடியவில்லை. ஒவ்வொரு முறை இமைகளை மூடும்போதும் திறக்க முடியாதா என்ற பயம் வந்துவிடுவது கொடுமையானது. என் கணவர் அளிக்கும் அன்பாலும் தைரியத்தாலும்தான் நான் வாழ்க்கையை ஓரளவு சிரமமின்றி நடத்தி வருகிறேன். ராயல் மெல்பர்ன் மருத்துவமனை மரபணு ஆராய்ச்சி மையத்தில் பதிவு செய்திருக்கிறேன். அங்குள்ள ஆராய்ச்சியாளர்களால் என் பிரச்சினையைச் சரி செய்ய முடியும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்” என்கிறார் நடாலியா.

ஐயோ… புதுசு புதுசா நோய் உருவாகுதே…

மெரிக்காவின் டெக் சாஸ் பகுதியில் ஏற்பட்ட சூறாவளியின் விளைவால் பல கடல்வாழ் உயிரினங்கள் கரை ஒதுங்கியிருந்தன. நேஷனல் அடோபோன் சொசைட்டியைச் சேர்ந்த ப்ரீத்தி தேசாய், இறந்து போன ஒரு கடல்வாழ் உயிரினத்தைக் கண்டார். நீண்ட உருளை போன்ற உடலும் ரம்பம் போன்ற கூர்மையான பற்களும் கொண்ட இந்த உயிரினத்துக்குக் கண்கள் இல்லை. “நான் இப்படி ஒரு உயிரினத்தை இதுவரை பார்த்ததில்லை. எங்கள் மையத்திலும் இது குறித்து யாருக்கும் எதுவும் தெரியவில்லை. அதனால் சமூக வலைதளங்களில் ஆராய்ச்சியாளர்களின் உதவி கேட்டேன். சிலர் மீன் வகையைச் சேர்ந்தது என்றார்கள். இன்னும் சிலர் ஃபேங்டூத் ஸ்நேக் ஈல் என்றார்கள். இன்னும் சரியாக அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை” என்கிறார் ப்ரீத்தி தேசாய்.

மனிதனால் கண்டுபிடிக்க முடியாத விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x