Published : 14 Sep 2017 10:26 AM
Last Updated : 14 Sep 2017 10:26 AM

உலக மசாலா: மூக்கைவிடச் சிறந்த தொழில்நுட்பம் வேறு இல்லை…

ப்பானிய நிறுவனம் ஒன்று, துர்நாற்றத்தைக் கண்டுபிடிக்கும் ரோபோ நாயை உருவாக்கி இருக்கிறது. ஜப்பானியர் களுக்கு ஷூக்களில் இருந்து வெளிவரும் துர்நாற்றம் முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது. இந்த துர்நாற்றத்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கவே ரோபோ நாய் உருவாக்கப்பட்டிருக்கிறது. வீட்டுக்குள் நுழைந்தவுடன் ரோபோ நாய் அருகில் வரும். துர்நாற்றம் வரவில்லை என்றால் மகிழ்ச்சியாக வாலை ஆட்டிக்கொண்டு சென்றுவிடும். துர்நாற்றம் வந்தால் கோபமாகக் குரைக்க ஆரம்பித்துவிடும். காலணிகள் மட்டுமின்றி, வீட்டிலிருந்து வரும் எத்தகைய துர்நாற்றத்தையும் கண்டுபிடித்துவிடும் அளவுக்கு உயர்தொழில் நுட்பத்தில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டிருக்கிறது. 15 செ.மீ. நீளம் இருக்கும் இந்த ரோபோ நாய், சில நொடிகளில் நுகர்ந்து பார்த்துவிட்டுச் சொல்லி விடுகிறது. 3 விதங்களில் தன்னுடைய கருத்தை இது வெளிப்படுத்துகிறது. நறுமணம் என்றால் வால் ஆட்டும், துர்நாற்றம் என்றால் குரைக்கும், தாங்க முடியாத துர்நாற்றம் என்றால் கீழே விழுந்துவிடும். விலை சுமார் 6 லட்சம் ரூபாய்.

நம் மூக்கைவிடச் சிறந்த தொழில்நுட்பம் வேறு இல்லை…

சோ

மாலியா நாட்டைச் சேர்ந்த தாயும் மகனும் லண்டனில் 3 ஆண்டுகளாக தெருவிலேயே வசித்து வருகிறார்கள். இரவு, பகல், பனி, மழை என்று எதையும் பொருட்படுத்தாமல் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். 2014-ம் ஆண்டு இவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மருத்துவம் பார்த்ததிலும், அவர் மரணம் அடைந்ததிலும் பொருளாதார நிலைமை மிக மோசமடைந்தது. அதனால் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தெருவுக்கு வந்துசேர்ந்தனார். நூலகத்தின் வெளியே இருக்கும் நீண்ட இருக்கைக்கு அடியில் தங்களின் பொருட்கள் அடங்கிய பெட்டிகளையும் பைகளையும் வைத்துக்கொள்கிறார்கள்.

காலை 10.30 மணிக்கு கண் விழிக்கிறார்கள். அரை மணி நேரத்துக்குப் பிறகு காலை உணவு. நூலகம் திறந்தவுடன் அம்மா உள்ளே சென்றுவிடுவார். காலை கடன்களை முடித்துவிட்டு, சிறிது நேரம் புத்தகங்கள் படித்துவிட்டு, இருக்கைக்கு திரும்புவார். மதியம் 2 மணிக்கு உணவுடன் வந்து சேர்வார் மகன். வெயில் காலமாக இருந்தால் குடையை விரித்து வைத்துக்கொண்டு, உணவைச் சாப்பிட்டு, மீண்டும் தூங்க ஆரம்பித்து விடுகிறார்கள். மாலை ஒரு காபியை வாங்கி இருவரும் பகிர்ந்து குடிக்கிறார்கள். மகன் பாட்டு கேட்டு பொழுதுபோக்குவார். அம்மா, அந்த வழியே செல்பவர்களிடம் உற்சாகமாகப் பேசிப் பொழுது போக்குவார். இரவில் பழங்கள், சாண்ட்விச் சாப்பிட்டு 12 மணிக்கு தார்பாலினால் மூடிக்கொண்டு தூங்க ஆரம்பித்து விடுகிறார்கள். அரசாங்கம் இருமுறை இவர்களுக்காக ஒரு வீட்டை ஒதுக்கிய போதிலும் அந்த வாடகையைக் கொடுக்க முடியாது என்பதால் இவர்கள் செல்லவில்லை.

எத்தனையோ அறக்கட்டளைகள் உதவுவதற்குத் தயாராக இருக்கின்றன. ஆனால் எந்த உதவியையும் இவர்கள் பெற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இந்த வழியாகச் செல்பவர்கள் பரிதாபப்பட்டு தண்ணீர் பாட்டில்கள், உணவுப் பொட்டலங்கள் போன்றவற்றை வழங்குகிறார்கள். இந்த அத்தியாவசிய தேவைகளை மட்டும் புன்னகையுடன் ஏற்றுக்கொள்கிறார்கள். யாரிடமும் எந்த உதவியும் தாங்களாகக் கேட்பதில்லை. நகர நிர்வாகம் இவர்களை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் தவிக்கிறது. ஒருவருக்கு கட்டாயப்படுத்தி உதவியைப் பெற வைக்க முடியாது என்று சொல்வதும் உண்மை தானோ.

இவர்களுக்காவது உதவுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x