Published : 13 Sep 2017 09:33 AM
Last Updated : 13 Sep 2017 09:33 AM

உலக மசாலா: ஒரு சுவர்க்கோழியின் விலை பல லட்சங்களா!

சே

வல் சண்டை, மாடு சண்டை போலவே சீனாவில் சுவர்க்கோழிகள் சண்டை மிகவும் பிரபலமானது. இந்த விளையாட்டு தோன்றி ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. காலப்போக்கில் செல்வாக்குக் குறைந்திருந்த இந்த விளையாட்டு, தற்போது மீண்டும் பிரபலமாகிவிட்டது. மரபணுவில் உயர்ந்த நிலை பெற்ற சுவர்க்கோழிகள் வளர்ப்பு சீனாவில் தற்போது அதிக லாபம் தரும் தொழிலாக மாறிவிட்டது. இதற்காக வெளிநாடுகளில் இருந்து சுவர்க்கோழிகளை வாங்குகிறார்கள்.

ஒவ்வொன்றையும் தனிக் கவனம் செலுத்தி, மண் பானையில் வைத்துப் பராமரிக்கிறார்கள். இறால், ஈரல், புழுக்கள் போன்றவற்றை உணவாகக் கொடுக்கிறார்கள். சுவர்க்கோழி சண்டை நடப்பதற்கு முதல் நாள் இரவு, மண் பானைக்குள் இருக்கும் ஆண் சுவர்க்கோழியிடம் பெண் சுவர்க்கோழியை விடுகிறார்கள். பெண்ணுடன் சண்டையிட்டு, ஒத்திகை பார்த்துவிடுகிறது ஆண் சுவர்க்கோழி. வலிமை, ஆக்ரோஷம் போன்றவற்றை வைத்து ஆண் சுவர்க்கோழியின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு சுவர்க்கோழி சுமார் 5 லட்சம் வரை விலை போகிறது. சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் உள்ள சிடியான் நகரம்தான் சுவர்க்கோழிகள் விற்பனைக்குப் புகழ்பெற்றது.

இங்கே பெரும்பாலான மக்கள் சுவர்க்கோழி வளர்ப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். கோடைகாலத்தில் சிடியான் நகர் இரவு, பகல் பாராமல் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். அருகில் உள்ள கிராமங்களில் இருந்தும் மக்கள் சுவர்க்கோழிகளை விற்பதற்காகக் கொண்டுவருவார்கள். சண்டைப் பயிற்சி பெற்ற சுவர்க்கோழிகள் விலை அதிகம் போகும் என்பதால், பிரத்யேகமாகப் பயிற்சியளிக்கிறார்கள். பயிற்சியாளர்கள், இடைத்தரகர்கள் என்று ஏராளமானவர்கள் இந்தத் தொழிலை நம்பியிருக்கிறார்கள். சிடியான் பகுதியில் தங்கும் விடுதிகளும் ஏராளமாக இருக்கின்றன. சுவர்க்கோழி வளர்ப்பில் சிறந்த குடும்பங்கள், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் ரூபாய்வரை சம்பாதித்து விடுகின்றனர்.

இந்த ஆண்டு 1.5 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை சுவர்க்கோழிகள் விற்பனையாகியிருக்கின்றன. 2014-ம் ஆண்டில் ஒரு சுவர்க்கோழி 49.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாகத் தகவல் பரவியது. ஆனால் அது வதந்தி என்கிறார்கள். சீனக் கலாச்சாரப் புரட்சியின்போது சுவர்க்கோழி விளையாட்டு தடை செய்யப்பட்டிருந்தது. நாளடைவில் மிகப் பெரிய வருமானம் தரக்கூடிய தொழிலாக மாறிவிட்டது. சிடியான் நகரைச் சேர்ந்த மக்கள் வருடத்தின் பெரும்பாலான நாட்களைப் பெரிய நகரங்களில் கழிக்கிறார்கள். போட்டி நடக்கும் காலகட்டத்தில் மட்டும் கிராமத்துக்கு வந்து, சுவர்க்கோழி வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். குறுகிய காலத்தில் அதிக அளவு பணத்தை ஈட்டிக்கொண்டு, மீண்டும் நகரம் நோக்கிச் சென்றுவிடுகின்றனர்.

சீனா முழுவதும் சுவர்க்கோழி சண்டை போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறும் 35 சுவர்க்கோழிகள் தேசிய அளவில் நடைபெறும் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கின்றன. சுவர்க்கோழி வர்த்தகம் மிகவும் லாபகரமான தொழிலாக இருக்கிறது. ஆனால் மண்ணில் வாழும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. சீனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ஊடகங்களும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்துவருவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்கள். ஆனால் லாபம் மட்டுமே நோக்கமாகக் கொண்டிருப்பவர்களிடம் இது எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது என்கிறார்கள்.

ஒரு சுவர்க்கோழியின் விலை பல லட்சங்களா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x