Published : 24 Aug 2017 10:03 AM
Last Updated : 24 Aug 2017 10:03 AM

உலக மசாலா: நோயாளிகளுக்காக வேஷம் போடும் மருத்துவர்!

சீ

னாவின் பெய்ஜிங் நகரில் உள்ள தோல் மருத்துவமனையில் மருத்துவராக பணி புரிகிறார் பாய் ஷுஃபாங். தினமும் சீனப் பாரம்பரியப்படி ஒப்பனை செய்துகொண்டு, மருத்துவமனைக்கு வருகிறார். “ஒரு மருத்துவரிடம் தங்கள் பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்வதைவிட, இந்த ஒப்பனையில் நோயாளிகள் இன்னும் நெருங்கிவந்து பகிர்ந்துகொள்கிறார்கள். சீனாவின் புகழ்பெற்ற மருத்துவமனைகளில் இதுவும் ஒன்று. இங்கே தோல் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் மருத்துவம் பார்க்கிறோம். பெரும்பாலான மக்கள் தங்கள் பிரச்சினைகளை வெளியே சொல்வதில் தயக்கம் காட்டுகிறார்கள். அதிலும் வெண்புள்ளி உள்ளவர்கள் எளிதில் சொல்லிவிட மாட்டார்கள். ஒரு மருத்துவரிடம் பகிர்ந்துகொள்வதில் அவர்களுக்கு இருக்கும் மனத்தடைகளை நான் புரிந்துகொண்டேன். இதை எப்படி சரி செய்வது என்று யோசித்தபோதுதான் இந்த அலங்காரம் பற்றிய எண்ணம் வந்தது. கடந்த மூன்று வாரங்களாக தினமும் காலை ஒரு மணி நேரம் ஒப்பனைக்காக செலவு செய்கிறேன். மருத்துவமனையில் நோயாளிகள் எந்தத் தயக்கமும் இன்றி என்னுடன் பேச விரும்புகிறார்கள். அவர்களது பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். மாலையில் ஒப்பனையைக் கலைக்க ஒரு மணி நேரம் ஆகிறது. ஒரு மருத்துவருக்கு தினமும் இரண்டு மணி நேரம் எவ்வளவு முக்கியமானது என்று தெரியும். என்னுடைய வேலைக்காகத்தான் இந்த அலங்காரத்தையே செய்துகொள்கிறேன் என்பதால் எனக்கு இதில் குற்றவுணர்வு எதுவும் இல்லை” என்கிறார் பாய் ஷுஃபாங். இந்த விஷயம் சமூக வலைதளங்களில் வெகு வேகமாகப் பரவி பாராட்டுகளையும் எதிர்ப்புகளையும் பெற்றுவருகிறது. “வழக்கத்துக்கு மாறான ஆடை, அலங்காரம் எல்லாம் மக்களின் கவனத்தை திசை திருப்பும். இந்த ஒப்பனை செய்யும் நேரத்தில் 10 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவிடலாம்” என்கிறார்கள் சிலர். இன்னும் சிலரோ, “நோயாளிகளின் நலன் கருதி ஒரு மருத்துவர் இந்த முடிவை எடுத்திருப்பதை வரவேற்க வேண்டும். வெண்புள்ளி குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் எளிதில் வெளியே சொல்ல மாட்டார்கள். அவர்கள் கூட இப்போது தைரியமாகச் சொல்கிறார்கள் என்றால் இது நல்ல விஷயம்தானே! தொழில் மீதும் மக்கள் மீதும் அக்கறை, அன்பு உள்ளவர்களால் மட்டுமே இப்படிச் செய்யமுடியும்” என்கிறார்கள்.

நோயாளிகளுக்காக வேஷம் போடும் மருத்துவர்!

பு

ற்றுநோயாளிகள் கீமோ தெரபியின்போது ஏற்படும் விளைவுகளால் தங்கள் முடியை இழக்கிறார்கள். இது பலருக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்திவிடுகிறது. ஸ்பெயினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோய்க்கான 3 புதிய மருந்துகளை உருவாக்கி, பரிசோதனை செய்துவருகிறார்கள். இந்த மருந்துகளின் விளைவால் நரைத்த முடி கறுப்பாக மாறிவிடுகிறது. இதுவரை 52 மனிதர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 14 பேரின் முடி கறுப்பாக மாறிவிட்டது கண்டு, நோயாளிகள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். “மருந்துகளை அளிக்கும் முன்பு அவர்களைப் புகைப்படங்கள் எடுத்தோம். மருந்துகளை எடுத்துக்கொண்ட பிறகு மீண்டும் புகைப்படங்கள் எடுத்தோம். இந்த 14 பேருக்கும் இருந்த வெள்ளை, பழுப்பு, சாம்பல் வண்ண முடிகள் கறுப்பாக மாறிவிட்டன. இந்த நிற மாற்றம் மருந்து வேலை செய்வதை உறுதி செய்துள்ளது. இதில் மிகக் குறைந்த அளவிலேயே பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. இந்தப் புதிய மருந்துகள் மருத்துவ உலகில் ஒரு முன்னேற்றமாக எதிர்காலத்தில் இருக்கும்” என்கிறார் மருத்துவர் ரிவேரா.

மகிழ்ச்சியளிக்கும் செய்தி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x