Published : 19 Aug 2017 06:36 PM
Last Updated : 19 Aug 2017 06:36 PM

குழந்தைகளின் உயிரைக் குடிக்கும் ‘செப்சிஸ்’ நோய்க்கு புதிய சிகிச்சை: இந்திய வம்சாவளி மருத்துவர் சாதனை

ஒவ்வொரு ஆண்டும் ‘செப்சிஸ்’ என்ற பாக்டீரியா நோய்க்கு உலகம் முழுதும் சுமார் 6 லட்சம் குழந்தைகள் பலியாகி வருகின்றனர். இதற்கு கடந்த 20 ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார் இந்திய வம்சாவளி அமெரிக்க மருத்துவர் பினாகி பானிகிரஹி. இதன் பலனாக அதிக செலவற்ற பெரிய அளவில் பலன்களைத் தரக்கூடிய மருந்து ஒன்றை இவர் தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது.

மேலும் இது புரோ-பயாடிக் சிகிச்சை முறை என்பதால் ஆயுர்வேத சிகிச்சைக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

செப்சிஸ் என்பது புண் ஏற்பட்டால் அதில் சில தீங்கான பாக்டீரியாக்கள் காணப்படும், இந்தக் கிருமித்தொற்று விரைவில் உடலில் பரவி ரத்தத்தில் நச்சுத் தன்மை ஏற்பட்டு உடல் உறுப்புகளைச் செயலிழக்கச் செய்யும் மோசமான ஒரு நோயாகும்.

நேச்சர் இதழில் இதன் விவரங்கள் வெளியாகியுள்ளன. சோதனைகளில் இந்த மருந்து செப்சிஸ் நோய்க்கு எதிராக சிறப்பாகச் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தமருந்துக்கான செலவு ஒரு டாலருக்கும் குறைவானதே என்று தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு தொலைபேசியில் தெரிவித்தார் பானிகிரஹி.

டாக்டர் பானிகிரஹி நெப்ராஸ்கா பல்கலைக் கழகத்தின் குளோபல் ஹெல்த் செண்டரின் குழந்தைகள் நல ஆரோக்கிய ஆய்வுக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இந்தச் சிகிச்சை செப்சிஸ் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நல்ல பாக்டீரியாவைக் கொடுப்பதாகும்.இது உறிஞ்சப்பட முடியாத சர்க்கரையுடன் சேர்ந்து குடலுக்கு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்துகிறது. இந்த புரோ-பயாடிக் சர்க்கரைச் சேர்க்கை மருந்தை ‘சின்பயாடிக்’ (synbiotic) என்று ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். இது குடலில் தங்கியிருந்து தீமையான பாக்டீரியாவை அழிக்கும். இது வாய்வழியாகச் செலுத்தப்படும் மருந்துதான், வாக்சைன் செயல்படுவது போல்தான் இதுவும் செயல்படும்.

2008-ல் தான் வளர்ந்த ஒடிசாவில் இந்த செப்சிஸுக்கு எதிரான ஆராய்ச்சியை தொடங்கினார் டாக்டர் பானிகிரஹி. இந்தச் சிகிச்சையினால் மேலும் சில கூடுதல் பலன்கள் இருக்கின்றன என்கிறார் அவர். இதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும் என்பதும் தெரியவந்துள்ளது, மேலும் மூச்சுக்குழல் கிருமித் தொற்றுக்கும் இந்த சிகிச்சை தீர்வு அளிக்கிறது.

“குழந்தைகளை செப்சிஸ் நோயிலிருந்து காப்பாற்றுவதுடன் மூச்சுக்குழல் கிருமித் தொற்றுக்கும் இதில் தீர்வு கிடைத்துள்ளது.

“குழந்தைகளின் ஆரம்பகாலங்களில், அதாவது முதல் 2 ஆண்டுகள் வாழ்க்கையில் பெரிய பாக்டீரியச் சுமைக்கு குழந்தைகள் ஆளாகின்றன. இதனால் ஊட்டச்சத்துக்களை உள்ளே உறிஞ்சிக் கொள்ளும் குடலின் தன்மை பழுதடைகிறது (enteropathy). 30 ஆண்டுகளுக்கு முன் இப்படியொரு நிலையை பாடப்புத்தகங்களில்தான் பார்த்திருக்கிறேன், ஆனால் இப்போது இத்தகைய குடல் பழுது நொய் இந்தியாவில் அதிகம் காணப்படுகிறது. 2 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளில் 40% குழந்தைகளுக்கு ஸ்டண்ட் வைக்கப்படுகிறது. ஸ்டண்ட் வைக்கப்பட்ட குழந்தைகளுக்கு அறிதலில் பிரச்சினை ஏற்படுகிறது. இதனுடன் கொழுப்பும் அதிகம் சேரத் தொடங்குகிறது. ஸ்டண்ட்டிங்கினால் ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, ஆகியவை பெரியவர்கள் ஆனபிறகு ஏற்படுகிறது” என்றார். இப்போது இந்த புதிய சிகிச்சை முறையில் இதனையும் கட்டுப்படுத்த முடியும் என்கிறார் டாக்டர் பானிகிரஹி.

இன்று பரவலாக ஆன்ட்டி-பயாடிக் மருந்துகள் தாறுமாறாக பயன்படுத்தப்படுகின்றன, இது பல மருந்துகள் வேலை செய்வதையே தடுத்து வருவதோடு, ஆனட்டி பயாடிக் தடுப்பு பாக்டீரியாக்களும் தோன்றத் தொடங்கியுள்ளன. இதனால் தன்னுடைய இந்த புரோ-பயாடிக் சிகிச்சை முறை இந்தத் தீமைகளைக் களைய முடியும் என்கிறார்.

“தயிர் என்ற புரோ-பயாடிக் உணவை எடுத்துக் கொள்வது, இதன் மூலம் குடலின் ஆரோக்கியத்தைப் பேணி காப்பது என்பது நம் கலாச்சாரத்தில் ஆயுர்வேதத்தின் ஆரம்பகாலங்களிலேயே இருந்துள்ளது” என்கிறார் பாணிகிரஹி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x