Published : 19 Aug 2017 10:07 AM
Last Updated : 19 Aug 2017 10:07 AM

சாலையோரம் சென்றவர்கள் மீது வேனை மோதி ஸ்பெயினில் திடீர் தாக்குதல்: 14 சுற்றுலா பயணிகள் பரிதாப பலி; 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்பெயின் நாட்டில் சாலையோரத்தில் நடந்துசென்றவர்கள் மீது தீவிரவாதிகள் வாகனங்களை மோதி திடீர் தாக்குதலில் ஈடுபட்டதில் 14 பேர் பலியாயினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 தீவிரவாதிகள் இறந்தனர்.

ஸ்பெயின் நாட்டின் மத்திய பார்சிலோனா நகரில் உள்ளது ராம்ப்லாஸ். பிரபலமான இந்த சுற்றுலா பகுதியில் ஏராளமான ரெஸ்டாரன்ட்டுகள், விற்பனை நிலையங்கள் உள்ளன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்தப் பகுதியில் நேற்று முன்தினம் பிற்பகல் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் இருந்தனர். அப்போது வெள்ளை நிற வேன் ஒன்று வேகமாக வந்தது. திடீரென தாறுமாறாக ஓடி பாதசாரிகள் மீது மோதியபடியே சென்றது. இதில் பலர் தூக்கி வீசப்பட்டனர். வேனை ஓட்டி வந்த தீவிரவாதி தப்பியோடி விட்டான்.

இந்தத் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 13 பேர் பலியாயினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் பீதியில் அலறிக் கொண்டு ஓடினர். அந்தப் பகுதியில் கூச்சலும் குழப்பமும் நிலவியது. உடனடியாக போலீஸார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்தச் சம்பவம் நடந்து 8 மணி நேரம் கழித்து பார்சிலோனாவில் இருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள காம்பிரில்ஸ் என்ற பகுதியில், ‘ஆடி ஏ3’ கார் ஒன்று வேகமாக சென்று பாதசாரிகள் மீது மோதியது. இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கிடையில் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் தீவிரவாதிகளை அடையாளம் கண்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பார்சிலோனாவில் நடந்த தாக்குதலில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அத்துடன் 5 தீவிரவாதிகளும் தங்கள் உடலில் வெடிகுண்டு பெல்ட் அணிந்து வந்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘சந்தேகத்தின் அடிப்படையில் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம். அவர்களில் ஒருவர் ஸ்பெயின் நாட்டவர். மற்றொருவர் மொராக்கோவைச் சேர்ந்தவர். தப்பியோடிய வேன் டிரைவரை தேடி வருகிறோம்’’ என்றனர்.

தாக்குலில் இறந்த மற்றும் காயம் அடைந்தவர்கள் பிரான்ஸ், வெனிசுலா, ஆஸ்திரேலியா, பெரு, அல்ஜீரியா, சீனா உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று ஸ்பெயின் மக்கள் பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் பார்சிலோனா மற்றும் காம்பிரில்ஸ் பகுதிகளில் நடந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தீவிரவாதிகள் தாக்குதலுக்கு ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சோகமான நேரத்தில் நாங்கள் மிகவும் உறுதியுடனும் ஒற்றுமையுடனும் இருக்கிறோம்’’ என்று தெரிவித்துள் ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், ஸ்பெயினுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார். அதேபோல் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உட்பட உலக நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய நகரங்களில் தாக்குதல் நடத்துவதற்கு தீவிரவாதிகள் வாகனங்களைத் தேர்வு செய்வது அதிகரித்துள்ளது. ஏற்கெனவே லண்டன், பிரஸ்ஸல்ஸ், பாரிஸ் ஆகிய நகரங்களில் வாகனங்களை மோதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்தியர்கள் இல்லை

ஸ்பெயினில் நடந்த தாக்குதல் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று கூறும்போது, ‘‘தீவிரவாதிகளின் தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது. இந்த தாக்குதலில் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார்.

- ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x