Published : 24 Jul 2014 03:44 PM
Last Updated : 24 Jul 2014 03:44 PM

அல்ஜீரிய விமானம் 116 பேருடன் விபத்துக்குள்ளானதாக ஐ.நா.பிரதிநிதி தகவல்

மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா ஃபாஸோவிலிருந்து 116 பேர்களுடன் சென்ற ஏர் அல்ஜீரிய விமானம் மத்திய மாலி அருகே விழுந்து நொறுங்கியதாக ஐ.நா.பிரதிநிதி ஜெனரல் கோகோ எசியன் என்பவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த விமானம் நைஜரில் விழுந்து நொறுங்கியதாகத் தகவல் வெளியானது. ஆனால் காவோ மற்றும் டெசாலிட் ஆகிய ஊர்களுக்கு இடையே மாலியின் மத்தியப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதாக மாலியில் உள்ள ஐநா படைகளின் பிரதிநிதி பிரிகேடியர் கோகோ எசியன் என்பவர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

மாலி சிவில் ஏவியேஷன் அதிகாரிகள் தாங்கள் உஷார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் இப்போதைக்கு விமானம் மாயமானது மட்டுமே அதிகாரபூர்வ செய்தியாக இருந்து வருகிறது. "நாம் விமானம் விழுந்து நொறுங்கியது பற்றி இன்னும் உறுதியாக கூறமுடியவில்லை என்று மற்றொரு பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பரிகினா ஃபாஸோவிலிருந்து அல்ஜீரிய தலைநகர் நோக்கிச் சென்ற இந்த விமானம் கிளம்பிய 50வது நிமிடத்தில் ராடாரிலிருந்து மறைந்தது. தரைக்கட்டுப்பாட்டுத் தொடர்பையும் இழந்தது.

விமானத்தின் பாதை மிக நேரானது. நடுவில் மாலி உள்ளது. பாதை விலகியதா? அல்லது தவறான தகவல்களினால் விலகிச் சென்றதா, தொழில்நுட்பக் கோளாறா போன்ற கேள்விகளுக்கு இன்னும் விடையில்லை.

’வான்வழிச் சேவைகள் இயக்ககம் ஏர் அல்ஜீரியா விமானத்தின் தொடர்பை இழந்துவிட்டது. இந்த விமானம் உவாகாடவ்கோவிலிருந்து அல்ஜியர்ஸ் செல்லும் விமானம் ஆகும். விமானம் தரையிலிருந்து கிளம்பிய 50 நிமிடங்களில் தொடர்பை இழந்துள்ளது” என்று அந்த ஏர்லைன் தெரிவித்ததாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏ.எச்.5017 என்ற இந்த விமானம் வாரம் 4 நாட்களுக்கு இயக்கப்படுகிறது. இதன் பயண நேரம் 4 மணி நேரங்களே.

இந்த விமானத்தில் 135 பேர் பயணிக்க முடியும் என்றும், தற்போது 116 பயணிகள் இதில் இருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக ஏர் அல்ஜியர்ஸ் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x