Last Updated : 28 Mar, 2016 09:26 AM

 

Published : 28 Mar 2016 09:26 AM
Last Updated : 28 Mar 2016 09:26 AM

லாகூர் தாக்குதலில் 69 பேர் பலி: கிறிஸ்தவர்களை குறிவைத்ததாக பயங்கரவாத அமைப்பு தகவல்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உள்ள லாகூர் நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 69 பேர் பலியாகினர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தற்கொலைப் படை பயங்கரவாதியால் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

இக்பால் நகரில் குல்ஷான் இ இக்பால் பூங்காவில் நேற்று மாலை கிறிஸ்தவர்கள் உட்பட ஏராளமானோர் திரண்டிருந்தனர். சரியாக மாலை 6.40 மணிக்கு குண்டு வெடித்தது. மனித வெடிகுண்டாக செயல்பட்ட நபர் தனது உடலில் 10 முதல் 15 கிலோ எடை அளவிளான வெடிப்பொருட்களை கட்டியிருந்திருக்க வேண்டும். அதன் காரணமாகவே உயிர்ச்சேதம் அதிகமாக இருந்ததாக லாகூர் போலீஸ் டிஐஜி ஹைதர் அஷ்ரப் கூறியுள்ளார்.

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சுவதாக பஞ்சாப் மாகாண அமைச்சர் பிலால் யாசின் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

தாக்குதலுக்கு பொறுப்பேற்ற தாலிபன்

லாகூர் தாக்குதலுக்கு தாலிபன் துணை இயக்கமான ஜமாத் உல் அரார் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சிறுபான்மை சமூகத்தினரை குறிவைத்தே தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இஷான் உல் இஷான் கூறும்போது, "எங்களது இலக்கு கிறிஸ்தவ சமுதாயத்தினரே. நாங்கள் லாகூர் முழுவதும் ஊடுருவியுள்ளோம். பிரதமர் நவாஸ் ஷெரீப் முடிந்தால் எங்கள் தற்கொலைப்படையினரை தடுத்து நிறுத்தட்டும்" எனக் கூறியுள்ளார்.

குழந்தைகளை குறி வைத்த கொடூரம்:

பூங்காவில் நடத்தப்பட்ட தாக்குதல் என்பதால் பலியானவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகளாவர். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, "தற்கொலைப்படை பயங்கரவாதிக்கு 20 வயதே இருக்கும். குழந்தைகள் விளையாடும் ஊஞ்சல்கள் நிறைந்த பகுதியிலேயே அவர் தன்னை வெடிக்கச் செய்துள்ளார். இத்தாக்குதலில் தீவிரவாதிகளின் குறி குழந்தைகளாகவே இருந்துள்ளனர்" என்றார்.

மோடி - நவாஸ் பேச்சு:

லாகூர் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை பிரதமர் மோடி நேற்றிரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டிய அவசியம் குறித்தும் மோடி பேசியுள்ளார். இத்தகவலை வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x