Last Updated : 03 Sep, 2015 09:30 PM

 

Published : 03 Sep 2015 09:30 PM
Last Updated : 03 Sep 2015 09:30 PM

லட்சக்கணக்கில் புகலிடம் தேடி வரும் அகதிகள்: பிரிட்டன், கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பிடிவாதம்

துருக்கி கடற்கரையில் ஒதுங்கிய சிரியாவைச் சேர்ந்த குழந்தையின் உடலும், அதை கையிலேந்திச் சென்ற போலீஸும் அடங்கிய புகைப்படம், இணைய உலக மக்களின் கண்ணீருக்கு காரணமாகியிருக்கிறது.

வாழ்க்கைப் பயணத்தை ஏதேனும் ஒரு நாட்டில் தொடர சிரியாவிலிருந்து கடல் வழியாக சென்று கொண்டிருந்த படகு ஒன்று கிரீஸ் தீவு அருகே கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இதில் 5 குழந்தைகளும் அடங்குவர், இது பற்றிய சமூக வலைத்தள புகைப்படங்கள் உலக அளவில் மனிதர்களை மனம் கனக்கச் செய்துள்ளது.

இதனையடுத்து #refugeeswelcome என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

ஐரோப்பாவுக்கு புலம் பெயர்வோர் எண்ணிக்கை 2-ம் உலகப் போர் காலக்கட்டத்துக்குப் பிறகு பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் 3 வயது குழந்தையின் உடல் ஒன்று குப்புற படுத்த நிலையில் துருக்கி கடற்கடையில் ஒதுங்கியதன் புகைப்படம் காரணமாக அகதிகளை ஏற்காத ஐரோப்பிய அரசுகளுக்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.

மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச்சூழல், பசி, வறுமை, பொருளாதார வீழ்ச்சி ஆகியவை காரணமாக ஆயிரக்கணக்கான அகதிகள் புகலிடம் தேடி ஐரோப்பிய நாடுகளின் கதவுகளை உரக்கத் தட்டி வருகின்றனர், ஆனால் அரசுகளோ அபாயகரமான எல்லை வேலிகளை அமைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன.

அன்று ஆஸ்திரிய-ஹங்கேரி எல்லைப் பகுதியில் 70க்கும் மேற்பட்ட அழுகிய சடலங்களுடன் லாரி ஒன்றைக் கண்டுபிடித்தனர். இவர்கள் அகதிகளே என்று தற்போது தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் பெரும்பாலும் ஆட்கடத்தல் கும்பலிடம் சிக்கி சீரழிகின்றனர். பலர் அபாயகரமான கடல் மார்க்கமாக போதிய பாதுகாப்பின்றி பயணித்து ஐரோப்பாவுக்குள் நுழைய முற்படும் முயற்சியில் உயிரை பறிகொடுத்து வருகின்றனர்.

இத்தனை குழப்பங்களுக்கும், மனிதார்த்த நெருக்கடிகளுக்கும் நடுவே பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், அகதிகளை ஏற்க முடியாது என்ற தனது நிலைப்பாட்டிலிருந்து மனமிரங்கவில்லை. 110,000 கையெழுத்துகளுடன் தற்போது புகலிடம் தேடி வருவோரை அரவணைக்க அவருக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. வரும் திங்களன்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் பெரிய அளவில் தலைதூக்கும் என்று தெரிகிறது.

தற்போது மத்தியதரைக் கடலை கடக்க முயன்ற தாய், சகோதரன் மற்றும் 3 வயது குழந்தை கடலில் மரணமடைந்த விவகாரம் அவர் மனதை மாற்றும் என்று பலரும் நம்பினர், ஆனால் இதுவரை அவர் வாயைத் திறக்கவில்லை. அவர் சமீபத்தில்தான் தெரிவித்திருந்தார், “அதிக அளவில் அகதிகளை வரவேற்பதன் மூலம் இந்தப் பிரச்சினைகளுக்குக் தீர்வு காண முடியாது, மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை உருவாக்குவதன் மூலமே இதற்குத் தீர்வு” என்று கூறினார்.

ஜெர்மனியும் ஐரோப்பிய யூனியனும் மற்ற உறுப்பு நாடுகளை புலம் பெயர்வோரை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தி வருகின்றன. ஆனால் பிரிட்டனும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் உறுதியாக மறுத்து விட்டன. ஹங்கேரியின் வலது சாரி பிரதமர் விக்டர் ஆர்பான், யாரும் ஹங்கேரிக்குள் நுழைய முயற்சி செய்ய வேண்டாம் என்று அறிவிப்பே வெளியிட்டு விட்டார். ஹங்கேரி, பல்கேரியா போன்ற நாடுகள் எல்லையில் அபாயகரமான வேலிகளை அமைத்துள்ளது.

இவ்வாறாக அகதிகள் நெருக்கடி கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளையே கருத்து வேறுபாடுகளுக்குள் சிக்க வைத்து விட்டது. ஜெர்மனி அதிபர் அஞ்சேலா மெர்கெல் அகதிகளை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துவதை கிழக்கு ஐரோப்பிய நாடான செக். குடியரசின் மூத்த தலைவர் ஒருவர் “புதிய பாசிசத்தை உருவாக்குகிறார்” என்று மெர்கெலை சாடியுள்ளார். இதனையடுத்து ஹங்கேரி, போலந்து, ஸ்லோவேகியா, செக்.குடியரசு, ஆகிய நாடுகள் நாளை (வெள்ளிக்கிழமை) சந்தித்து ஜெர்மனியின் கோரிக்கைக்கு பதிலடி தரப்போவதாக முடிவு செய்துள்ளன. ஆனால் ஐரோப்பிய யூனியனோ, அகதிகள் வரவை ஏற்றுக்கொள்ளவில்லையெனில் இந்நாடுகளுக்கு அளித்து வரும் மானியத்தை நிறுத்தும் சாத்தியமும் உள்ளது.

ஜெர்மனி இந்த ஆண்டு 8 லட்சம் புகலிட கோரிக்கையை புரோசஸ் செய்யவுள்ளது. ஜூலை மாதம் மட்டும் ஐரோப்பிய யூனியன் எல்லைகளை 107,500 அகதிகள் முற்றுகையிட்டுள்ளனர்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் கத்தோலிக்க திருக்கோயிலின் தலைமை மதகுருவான கார்டினல் வின்செண்ட் நிகல்ஸ், பிரிட்டனின் நிலைப்பாடு, “இழிவானது” என்றும், அவமானகரமானது என்றும் “நாம் மனிதர்களை சாவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம், கடற்கரைகளில் பிணங்கள் ஒதுங்குகின்றன, சேர்ந்திருக்கும் போது ஐரோப்பா ஒரு செல்வச் செழிப்பான பகுதி” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x