Last Updated : 26 Jun, 2017 08:59 AM

 

Published : 26 Jun 2017 08:59 AM
Last Updated : 26 Jun 2017 08:59 AM

முன்னணிக்கு வருகிறாரா பின்லேடனின் மகன்?

அப்பா ஒசாமா பின்லேடன் இறந்து நான்கு வருடங்களுக்குப் பிறகு அவரது மகன் ஹம்ஜா பின்லேடன் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்.

2001 ஆப்கானிஸ்தான் பாகிஸ் தான் எல்லையில் உள்ள ஜலாலாபாத் என்ற பகுதியில் அமைந்துள்ள மலைத்தொடரில் ஒரு தந்தை தன் மூன்று மகன்களுடன் அமர்ந்து பேசினார். ஒவ்வொருவருக்கும் ஒரு புராதன மணி மாலையைக் கொடுத்தார். அந்தத் தந்தை ஒசாமா பின்லேடன். அந்த மகன்களில் ஒருவர்தான் ஹம்ஜா பின்லேடன். ஹம்ஜாவை அல் காய்தாவின் தலைவராக்கும் எண்ணம் ஒசாமாவுக்கு இருந்ததாம்.

2001 செப்டம்பர் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது ஆக்கிரமிப்பு செய்தது. இதைத் தொடர்ந்து பின்லேடனின் பல குடும்ப உறுப்பினர்களும் அல் காய்தா உயர்மட்டத் தலைவர்களும் ஈரானுக்கு பறந்தனர். ஈரானுக்குள் அமெரிக்க ராணுவம் நுழையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானிய அதிகாரிகள் சில முக்கியமானவர் களை தங்கள் வசம் வைத்திருந்தனர். வருங்காலத்தில் தாங்கள் விரும்பி யதை சாதிக்க அவர்களைப் பணயக் கைதிகளாக பயன்படுத்தலாம் என்ற எண்ணம். அவர்களில் முக்கியமானவர் கள் ஹம்ஜா மற்றும் அவரது அன்னையான காய்ரியா.

ஈரானின் பாதுகாப்பில் இருந்து கொண்டே ஹம்ஜா திருமணம் செய்து கொண்டு சில குழந்தைகளுக்குத் தந்தை ஆனார். அதற்குப் பிறகு தன் தந்தையை ஹம்ஜா பார்க்கவில்லை. என்றாலும் ஒசாமா பின்லேடனைப் போலவே அவர் உருவாகிக் கொண்டிருந்தார் என்கிறார்கள்.

2014-ல் அல் காய்தாவும், ஐ.எஸ். அமைப்பும் அதிகாரபூர்வமாகப் பிரிந் தன. அல் காய்தா தனது ‘மிக உலகின் பயங்கரமான தீவிரவாத அமைப்பு’ என்ற பிம்பத்தைப் பறிகொடுத்தது. ஐ.எஸ்.அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி புதிய ஒசாமா பின்லேடனாகக் கருதப்பட்டார்.

இன்று இராக் ராணுவம், குர்துகள், அமெரிக்க ராணுவம் போன்ற பலவற் றால் ஐ.எஸ்.அமைப்பு எதிர்க்கப்பட்டு வரும் நிலையில் அல் காய்தா மீண்டும் தலையெடுத்துள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவை ‘ஒரு கிரிமினல் கூட்டத் தின் கருப்பர் இனத்தலைவர்’ என்று விமர்சித்தார் ஹம்ஜா. 2015-ல் ‘‘சிறை யில் உள்ள அல் காய்தா உறுப்பினர் களை விடுவிக்க வேண்டும்’’ என்று அறிக்கை விட்டார். ஏமன் நகரிலுள்ள ஈரானியத் தூதரகத்தில் அல் காய்தா குண்டுகளை வெடிக்கச் செய்தது. இந்தக் கலவரத்தில் இரண்டு ஈரானிய தூதர்களை உயிரோடு பிடித்துச் சென்றனர். ‘‘அல் காய்தாவின் மூன்று தலைவர்களை விடுவித்தால்தான் இவர்களை அனுப்புவோம்’’ என்று கூற, அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டது.

சென்ற ஆண்டு ஹம்ஜாவிடமிருந்து ஒரு ஒலிநாடா வெளியானது. ‘‘ஜெருசலேம் என்ற மணமகளுக்கு நமது சீதனம் நமது ரத்தம்தான்’’ என்றது. யூதர்கள் மீது தாக்குதல் நடத்துவதை அது ஊக்குவித்தது.

21 நிமிடப் பேச்சு கொண்ட அந்த ஒலிநாடாவில் ‘‘நாங்கள் ஒவ்வொரு வருமே ஒசாமாதான்’’ என்று கூறினார் ஹம்ஜா. குறிப்பாக அமெரிக்காவுக்கு நேரடியாகவே சவால் விட்டிருக்கிறார். ‘‘என் அப்பாவின் இறப்புக்குப் பழி வாங்குவோம். சொல்லப்போனால் என் அப்பாவைக் கொலை செய்ததற் காக என்றில்லை, இஸ்லாமைப் பாதுகாப்பவர்களின் உறுதிமொழி இது’’ என்றார்.

ஹம்ஜா சரியான நேரத்திற்காகக் காத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x