Published : 18 Jul 2014 10:06 PM
Last Updated : 18 Jul 2014 10:06 PM

மலேசிய விமானம் அழிப்பு: உக்ரைனில் ஓஎஸ்சிஇ குழு விசாரணை

மலேசிய விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்ட கிழக்கு உக்ரைன் பகுதியில், ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைப்பான ஓ.எஸ்.சி.இ.-யின் சர்வதேசக் குழு தனது விசாரணையைத் தொடங்கியது.

ஆம்ஸ்டர்டாமில் இருந்து 298 பேருடன் புறப்பட்ட எம்.ஹெச்.17 மலேசிய விமானம் வியாழக்கிழமை இரவு உக்ரைனில் கிழக்குப் பகுதியில் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணித்த அனைவருமே உயிரிழந்தனர்.

விமானத்தை சுட்டு வீழ்த்தியது யார் என்பது இதுவரை தெரியவரவில்லை. உக்ரைன் அரசும், அந்நாட்டைச் சேர்ந்த ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் ஒருவரை மற்றொருவர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகருக்கு அருகே விமான பாகங்கள் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு விழுந்து கிடந்தன. உடல்களும் சிதறிக் கிடக்கின்றன.

கருப்புப் பெட்டி மீட்பு

மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், விமானத்தின் கருப்புப் பெட்டிகளை மீட்டுள்ளதாகவும், அதை ஆய்வுக்காக மாஸ்கோவுக்கு அனுப்பி வைப்பதாகவும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தரப்பு தெரிவித்தது. இந்தக் கருப்புப் பெட்டியின் மூலம் முக்கிய தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஓஎஸ்சிஇ குழு தீவிர விசாரணை

மலேசிய பயணிகள் விமானம் அழிக்கப்பட்டது தொடர்பாக முழுமையானதும், ஆழமானதும், தன்னிச்சையானதுமான ஒரு சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை வலியுறுத்தியுள்ளது.

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனும் இதையே வலியுறுத்தியுள்ளார். இந்த சர்வதேச விசாரணைக்கு ரஷ்யாவும் உக்ரைனும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என, அமெரிக்க அதிபர் ஒபாமா உள்பட பல்வேறு நாட்டுத் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்கள் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைப்பான ஓ.எஸ்.சி.இ.-யின் சர்வதேசக் குழு வெள்ளிக்கிழமை சம்பவ இடத்துக்கு விரைந்தது.

மொத்தம் 30 பேர் கொண்ட இந்த விசாரணைக் குழு, விமானம் விழுந்த கிராபோவோ கிராமத்துக்குச் சென்று, சம்பவ இடத்தைப் பார்வையிட்டு வருகிறது.

ரஷ்யா மீது யு.எஸ். சந்தேகம்

இதனிடையே, கிழக்கு உக்ரைன் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவு தருவதில் ரஷ்யா அளவுக்கு அதிகமாகச் சென்றுவிட்டது என்று உக்ரைன் அரசு குற்றம்சாட்டியுள்ளது.

இந்தச் சூழலில், மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் ரஷ்யா மீது அமெரிக்கா சந்தேகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய தயாரிப்பு ஏவுகணைகளான எஸ்ஏ-11 அல்லது எஸ்ஏ-20 ரக ஏவுகணை மூலம்தான் விமானம் வீழ்த்தப்பட்டிருக்க வேண்டுமென்று அமெரிக்கா கூறியுள்ளது.

மேலும், சம்பவம் நடந்த இடத்தில் உக்ரைன் ராணுவம், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மட்டுமல்லாது, ரஷ்ய ராணுவமும் நிலை கொண்டுள்ளது என்றும், இதுவும் சந்தேகத்துக்கு முக்கியக் காரணமாக உள்ளது என்றும் அமெரிக்க தரப்பு தெரிவிக்கிறது.

முன்னதாக, மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை, அமெரிக்க அதிபர் ஒபாமா தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டது குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த விவகாரத்தில் மலேசியாவுக்கு அனைத்து வகையான உதவிகளையும் செய்யுமாறு அமெரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன் பின், உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோசென்கோவிடம் பேசிய ஒபாமா, விமானம் வீழ்த்தப்பட்டது தொடர்பான விசாரணையில் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார்.

விசாரணைக்கு முட்டுக்கட்டை போடும் கிளர்ச்சியாளர்கள்:

மலேசிய விமானம் நொறுங்கி விழுந்த பகுதியில் மலேசிய விசாரணைக் குழு, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைப்பான ஓ.எஸ்.சி.இ.-யின் சர்வதேசக் குழு ஆகியன முகாமிட்டிருக்கின்றன. ஆனால், அவர்கள் விசாரணையை சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத அளவுக்கு கிளர்ச்சியாளர்கள் கெடுபிடி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் விவரம் | நாடுகள் வாரியாக:

நெதர்லாந்து : 189

மலேசியா : 44

ஆஸ்திரேலியா : 27

இந்தோனேஷியா : 12

இங்கிலாந்து : 9

ஜெர்மனி : 4

பெல்ஜியம் : 4

பிலிப்பைன்ஸ் : 3

கனடா : 1

நியூஸிலாந்து: 1

அடையாளம் காணப்படாதோர் : 4

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x