Last Updated : 27 Mar, 2017 10:59 AM

 

Published : 27 Mar 2017 10:59 AM
Last Updated : 27 Mar 2017 10:59 AM

மணிக்கு 300 கிமீ வேகத்துடன் கூடிய ‘டெபி’ புயல்: ஆஸ்திரேலியாவில் கடும் எச்சரிக்கை

மணிக்கு 300 கிமீ வேகத்துடன் கூடிய காற்றுடன் ‘டெபி’ புயல் தாக்கவுள்ள நிலையில் ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாகாண கடற்கரை ஊர்களிலிருந்து சுமார் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு பீதியில் வெளியேறியுள்ளனர்.

மற்றவர்கள் அரசு அதிகாரிகளின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் அங்கேயே இருந்து வருகின்றனர், இவர்களையும் அவ்விடத்திலிருந்து அகற்ற அதிகாரிகள் போராடி வருகின்றனர்.

செவ்வாயன்று வடகிழக்குப் பகுதியில் கரையைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் ‘டெபி’ புயல் 4-ம் எண் புயற்காற்று என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

2011 யாசி சூறாவளிக்குப் பிறகு ஆஸ்திரேலியாவைத் தாக்கும் பயங்கரமான புயல் இது என்று கருதப்படுகிறது. யாசி புயலினால் வீடுகளும், பயிர்களும், தீவு சுற்றுலாப் பகுதிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.

டவுன்ஸ்வில் பகுதியில் சுமார் 3,500 பேர் வெளியேற்றப்பட்டனர், அதே போல் போவென் பகுதியிலிருந்து 2000 பேர் வெளியேறுகின்றனர். ‘வெளியேற வாய்ப்பும், கால நேரமும் நெருங்கி வருகிறது, இப்போதே வெளியேறினால் நல்லது’ என்று குவீன்ஸ்லாந்து மாகாண தலைவர் அனாஸ்டேசியா பலாசுக் என்பவர் எச்சரித்துள்ளார். இது மிகவும் மோசமான புயல் என்று நிபுணர்களும் எச்சரித்துள்ளனர்.

அபாட் பாயிண்ட் நிலக்கரி முனையம், மெக்காய் மற்றும் ஹே பாயிண்ட் துறைமுகங்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. டவுன்ஸ்வில் விமான நிலையம் மூடப்பட்டது. பல விமான நிறுவனங்கள் திங்கள், செவ்வாய் தங்கள் சேவைகளை ரத்து செய்துள்ளன.

கனமழை மற்றும் பயங்கரக் காற்றினால் அங்கு பயிராகும் வாழைப்பழங்களுக்கு கடும் சேதம் ஏற்படும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x