Published : 24 Jun 2016 10:20 AM
Last Updated : 24 Jun 2016 10:20 AM

வாக்கெடுப்பில் 52 சதவீத மக்கள் ஆதரவு: ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகியது

சர்வதேச பங்குச் சந்தைகளில் கடும் சரிவு

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து இங்கிலாந்து மக்கள் 52 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இதை யடுத்து பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியன் கூட்ட மைப்பில் இருந்து விலகும் பிரிட்டனின் இந்த முடிவால் சர்வதேச சந்தைகள் கடும் சரிவைக் கண்டுள்ளன. இந்திய சந்தைகளும் 2 சதவீதத்துக்கு மேல் சரிவைக் கண்டுள்ளன. இந்த வீழ்ச்சி பங்கு சந்தைகளில் மட்டுமல்லாமல், கமாடிட்டி சந்தை, தங்கம் மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி என பல வகைகளிலும் இந்திய பொருளாதாரத்திலும் எதி ரொலித்தது. டாலருக்கு நிகரான மதிப்பில் இங்கிலாந்தின் ஸ்டெர்லிங் கரன்சி 10 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்தியாவின் முக்கிய சந்தையான மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு நேற்று ஒரே நாளில் 604 புள்ளிகள் சரிந்து, 26,397 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்துள்ளது. தேசியப் பங்குச் சந்தையின் குறியீடான நிப்டி 181 புள்ளிகள் சரிந்து 8,088 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது.

ஐரோப்பிய நாடுகள் இணைந்து கடந்த 1993-ம் ஆண்டு, ‘ஐரோப்பிய யூனியன்’ என்ற கூட்ட மைப்பை உருவாக்கின. இந்த நாடுகள் தங்களுக்கென ‘யூரோ’ என்ற கரன்சியையும் அறிமுகப் படுத்தின. அமெரிக்க டாலர், இங்கிலாந்தின் பவுண்ட் கரன்சி களுக்கு ஈடாக யூரோ உயர்ந்தது. இந்த யூனியனில் இங்கிலாந்து உட்பட 28 நாடுகள் உள்ளன.

ஆனால், ஐரோப்பிய யூனியன் நாட்டினர் 28 நாடு களுக்குள் எங்கு வேண்டுமானாலும் விசா இல்லாமல் செல்லலாம். தங்கி வேலை செய்யலாம். இதற்கு இங்கிலாந்து மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாட்டு மக்களால், தங்கள் வேலைவாய்ப்பு பறிபோவதாக குற்றம் சாட்டி வந்தனர். எனினும், யூனியனில் இருந்து விலகினால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கூறிவந்தார். யூனியனில் இங்கிலாந்து நீடிக்க வேண்டும் என்று பிரதமர் சார்ந்துள்ள கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர்கள் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் நீடிக்கலாமா, வேண்டாமா? என்பதை அறிய கடந்த 23-ம் தேதி இங்கிலாந்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், யூனியனில் இருந்து விலக வேண்டும் என்று 51.9 சதவீதம் பேர் வாக்களித்தனர். யூனியனில் நீடிக்க 48.1 சதவீதம் பேர் வாக்களி த்தனர். இதையடுத்து இங்கிலாந்து விலகுவது உறுதியாகிவிட்டது.

யூனியனில் இருந்து விலக அதிக மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால், பிரதமர் டேவிட் கேமரூனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வாக்கெடுப்பு முடிவு வெளிவந்த சிறிது நேரத்தில், தனது மனைவி சமந்தாவுடன் லண்டனில் செய்தியாளர்களை கேமரூன் சந்தித்தார். அப்போது அவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், வரும் அக்டோபர் மாதத்துக்குள் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், புதிதாக பிரதமர் பதவியேற் பவர் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளை எடுப்பார் என்றும் கேமரூன் அறிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரதமர் கேமரூன் கூறும்போது, ‘‘யூனியனில் இருந்து விலக இங்கிலாந்து மக்கள் ஆதரவு அளித்திருந்தாலும், உடனடியாக எந்த மாற்றமும் ஏற்பட்டு விடாது. யூனியனை சேர்ந்த நாட்டினர் விசா இல்லாமல் வந்து செல்வது, இங்கிலாந்தில் வேலை செய்வது, சேவைகள் பெறுவது போன்றவை பாதிக்கப்படாது. இங்கிலாந்தில் ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வெளியான மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும். அவர்களின் முடிவை செயல்படுத்த வேண்டும்’’ என்றார்.

வரும் திங்கள்கிழமை இங்கிலாந்தில் அமைச்சரவை கூட்டம் கூடி, பிரதமர் கேமரூன் எப்போது பதவி விலகுவது, புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகளை எப்போது தொடங்குவது என்பது உட்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து முடிவெடுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் முடிவு உலக வர்த்தகத்தையும் பாதித்தது. முன்எப்போதும் இல்லாத வகையில் இங்கிலாந்தின் பவுண்ட் கரன்சி மதிப்பும் சரிந்தது.

இங்கிலாந்து முடிவு குறித்து ஐரோப்பிய யூனியன் தலைவர் மார்ட்டின் டஸ்க் பிரஸ்ஸல்சில் நேற்று கூறும்போது,’’ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக இங்கிலாந்து முடிவெடுத்தாலும், மற்ற 27 நாடுகள் இணைந்து யூனியனாக தொடர்ந்து செயல்படு வோம்’’ என்றார்.

ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் மார்ட்டின் சுல்ஸ் கூறும் போது, ‘‘இங்கிலாந்து விலகுவதால் ஐரோப்பிய யூனியனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இங்கிலாந்தில் நடந்ததுபோல் யூனியனில் உள்ள மற்ற நாடுகளில் நடக்காது. ஏனெனில், உலகில் ஐரோப்பிய யூனியன் என்பது மிகப்பெரிய சந்தையை கொண்டது. அதன் தொடர்பை இங்கிலாந்து துண்டித்துக் கொண்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x