Last Updated : 09 Oct, 2015 09:53 AM

 

Published : 09 Oct 2015 09:53 AM
Last Updated : 09 Oct 2015 09:53 AM

பெருமை .. சிறுமை .. பொலிவியா - 1

தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் கிட்டத் தட்ட நடுவாக உள்ள நாடு பொலிவியா. அதன் கிழக்குப் பகுதியில் பிரேசில், தெற்குப் பகுதி யில் பராகுவே மற்றும் அர்ஜென் டினா, தென்மேற்குப் பகுதியில் சிலி, வடமேற்குப் பகுதியில் பெரு ஆகிய நாடுகள் உள்ளன.

“முதன்முதலாக’’ என்பதே பொதுவாக கொஞ்சம் பெருமைக் குரியதுதான். சரித்திரத்தில் இடம் பெறக்கூடியதுதான்.

ஆனால் பொலிவியாவின் இப் படிப்பட்ட ஒரு விஷயம் பெருமைக் குரியது என்று தோன்றவில்லை.

பொலிவியாவில் பத்து லட்சம் குழந்தைகள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். கேக் விற்பதிலிருந்து கடுமையான உடல் உழைப்புவரை. குடும்பத்தின் ஏழ்மை அவர்களை இப்படிச் செய்ய வைக்கிறது.

இந்த நிலை பல ஏழை நாடுகளில் நிலவும் ஒன்றுதானே? ஏன், இந்தியா போன்ற வளரும் நாடுகளில்கூட குழந்தைத் தொழி லாளிகளை நாம் பார்ப்ப தில்லையா? உண்டுதான். ஆனால்

இங்கெல்லாம் அது குறைந்த பட்சம் ‘சட்டபூர்வமாக’ அனுமதிக் கப்படுவதில்லை.

ஆனால் பொலிவியா? குழந்தை கள் பணிகளில் அமர்த்தப்படுவதை சட்டபூர்வமாக்கிய முதல் நாடு என்ற நெருடலான பெருமையைப் பெற்றிருக்கிறது.

உலகின் பல நாடுகளும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பொலிவியா அதற்கு ஆதரவு தெரிவிப்பதுபோல இப்படியொரு சட்டத்தை இயற்றி இருக்கிறது.

எதைத்தான் நியாயப்படுத்த முடியாது? பொலிவிய அரசு கூறும் நியாயம் இதுதான். “எப்படி யும் குழந்தைகள் பணியில் ஈடுபடுத் தப்படுவதை ஒழிக்கவே முடியாது. குடும்பங்களின் பொருளாதார நிலைமை அப்படி. எங்களின் சட்டத்தை முழுமையாகப் பாருங் கள். பத்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் வேலை செய்யலாம் என்கிறோம். பாதி நாள் வேலை செய்துவிட்டு பாதி நாள் பள்ளிக்குப் போக வேண்டும் என்கிறோம்’’.

குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது பொலிவியாவில் குழந்தைப் பணியாளர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து அதிகமாகவே வைத்திருக்கிறது. பன்னிரெண்டு வயதுக் குழந்தையின் கூலி, வீட்டிலுள்ள அதன் 10, 8, 6 வயது சகோதர, சகோதரிகளுக்கு உணவு கிடைக்க தேவைப்படுகிறது. பள்ளி விடுமுறைகளின்போது முழுநாள் வேலை செய்வதை குடும்பமும் ஆதரிக்கிறது. சட்டமும் தடுக்கவில்லை.

சட்டத்தில் மேலும் ஒரு சின்ன விளக்கம் இருக்கிறது. பத்து வயதிலிருந்து சுய வேலை செய்யலாம். பன்னிரெண்டிலிருந்து பிறருக்காகப் பணி புரியலாம். பெற்றோர்களின் சம்மதம் தேவை. அதனால் என்ன? கொடுக்காமலா இருக்கப் போகிறார்கள்.

இதற்கு முந்தைய சட்டப்படி 14 வயது தாண்டினால்தான் வேலை செய்ய முடியும்.

புதிய சட்டத்தின்படி 2025-க்குள் தங்கள் நாட்டின் கடுமையான வறுமையை ஓரளவு குறைத்துக் கொள்ள முடியும் என்கிறது அரசு. தங்கள் நாட்டின் மிக முக்கியப் பிரச்சினை கடும் வறுமைதானே தவிர, குழந்தைத் தொழிலாளர்கள் அல்ல என்பதை வலியுறுத்துகிறது.

கருத்தடையை ஆதரிக்காத அரசு. கருச்சிதைவு செய்து கொண்டால் 30 வருடங்கள்கூட சிறையில் இருக்க நேரிடலாம் எனும் நிலை. ஆக ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

குழந்தைகள் நல உலக அமைப்பான யூனிசெஃப் என்ன சொல்கிறது? “ஆயிரம் நியாயம் கற்பித்தாலும் பொலிவியா அரசு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. புதிய சட்டம் நடைமுறைக்கு வரும்போது குழந்தைகள் கொடூரமாக நடத்தப்படும் வாய்ப்பு அதிகமாகவே உண்டு.’’ என்கிறது.

உலகத் தொழிலாளர் அமைப்பு என்ன காரணத்தைக் கொண்டும் குழந்தைகள் பணி செய்வதைத் தாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என்று கூறியுள்ளது. வேலை செய்யும் குழந்தைகள் முதலில் இழப்பது தங்கள் குழந்தைத் தன்மையை.

இப்படி பரபரப்பான ஒரு சட்டத்தைக் கொண்டு வந்துள்ள பொலிவியா நாட்டு அதிபர் இவா மொரேல்ஸ் பலவிதங்களில் குறிப் பிடத்தக்கவர். பல பெருமைகளுக் கும் உரியவர்.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x