Last Updated : 27 Oct, 2015 10:33 AM

 

Published : 27 Oct 2015 10:33 AM
Last Updated : 27 Oct 2015 10:33 AM

பெருமை .. சிறுமை .. பொலிவியா - 9

சமீபத்தில் பொலிவியாவுக்குச் சென்றிருந்தார் போப். இதுவே பலரால் ஓர் அதிசயமாக நோக் கப்பட்டது. கம்யூனிஸ்ட் ஆட்சிகளுக்கும், கத்தோலிக்கத் தலைமைக்கும் பொதுவாக ஏழாம் பொருத்தம்தான்.

இந்த நிலையில் பொலிவியாவுக்கு போப் செல்லப்போவதாக திட்டமிட்டது வியப்பை உண்டாக்கியது என்றால் தொடர்ந்தது மற்றொரு வியப்பு.

பொலிவியாவின் பண்பாட்டு அமைச்சகம் போப்பின் வருகையை உறுதி செய்தது. போதாக்குறைக்கு அந்தத் துறையின் அமைச்சர் ‘‘தான் வரும்போது கோகோ இலைகள் தனக்கு அளிக்கப்பட வேண்டுமென்று போப் வேண்டு கோளை விடுத்திருக்கிறார்’’ என்றார். இது பரபரப்பை ஏற்படுத் தியது.

பொலிவியாவின் முக்கிய விவசாயப் பொருட்களில் ஒன்று கோக்கோ. அந்த நாட்டின் சரித்திரத்தையே மாற்றியமைத்த தில்கூட இதற்குப் பங்கு உண்டு. கோகோ என்பது சாக்லெட்டில்கூட பயன்படுத்தப்படும் ஒரு பொருள் தான். மருத்துவக் காரணங்களுக் காக கோகோ இலைகளை மெல்வது பொலிவியாவில் சட்டப்படி தவறல்ல. மலையேற்றத் தின்போது கோகோ இலைகளை மெல்வது என்பதும் அங்கு வழக் கத்தில் உள்ள ஒன்றுதான். அதே சமயம் கோகெயின் போதைப் பொருளுக்கும் இது ஒரு முக்கிய மூலப்பொருள்.

ஊடகங்கள் வாடிகனை கேள்வி எழுப்பின. ‘‘எதற்காக கோகோ இலைகளை அளிக்கும்படி போப் கோரியிருக்கிறார்? பொலிவி யாவுக்கும், வாடிகனுக்கும் நட்புறவு தோன்றியதின் அடையாளமா இது? அந்த இலைகளை போப் பொலிவிய மண்ணிலேயே உண்ணப் போகிறாரா?’’.

‘‘பகைமை இல்லாததால்தான் பொலிவியா செல்கிறார் போப். மற்றபடி இலைகளை சாப்பிடுவது குறித்தெல்லாம் அவர் முடிவெடுக்க வில்லை’’ என்றது வாடிகன் தரப்பு.

‘‘தனக்குச் சரி என்று தோன்று வதை அவர் செய்வார்’’ என்று கூறியது வாடிகன். இந்த ஆண்டு ஜூலை 6-லிருந்து 12 வரை போப்பின் பொலிவிய விஜயம் நடை பெற்றது. அப்படிச் சென்றிருந்த போது பொலிவிய அதிபர் மொரேல்ஸை அவர் சந்தித்தார்.

இதைத் தொடர்ந்து ஊடகங் களில் மிகப் பெரிய அளவில் இடம் பெற்ற செய்தி என்ன வாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? பொலிவியாவின் கத்தோலிக்கர்களின் நிலை குறித்து போப் பேசியதா? அல்லது கத்தோலிக்க மதம் குறித்த தன் கருத்துகளை மனம் விட்டு மொரேல்ஸ் பேசி அது முக்கிய இடத்தைப் பிடித்து விட்டதா? இரண்டுமில்லை. ஒருவேளை மேலே குறிப்பிட்ட கோகோ இலைகள் தொடர்பான செய்தியா? அதுவும் இல்லை.

மொரேல்ஸ் போப்புக்கு அளித்த ஒரு பரிசுதான் ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பெற்றது. ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட காட்சிதான் வெகுமதிப் பொருளாக இருந்தது. ஆனால் ஒரு பெரிய சுத்தியலில் நீளமான கைப்பிடிப் பகுதியில் ஏசுநாதரின் நின்ற உருவமும், அந்தச் சுத்தியலின் மேற்பகுதியில் ஏசுநாதரின் முகமும் இருபுறமும் நீட்டப்பட்டிருந்த அவரது கைகளும் இடம் பெற்றிருந்தன. போதாக்குறைக்கு இந்தச் சிலையில் கீழ்ப்புறம் அரிவாளைப் போலவே காட்சியளித்தது. ஆக கம்யூனிஸச் சின்னத்தில் ஏசுநாதர்!

இதை போப் ஏற்றுக்கொள் வாரா? வாடிகனுக்கு எடுத்துச் செல்வாரா? இந்தக் கேள்விகள் பலமாகவே எழுந்தன. ‘‘இது என்னை எந்தவிதத்திலும் புண்படுத்திவிடவில்லை’’ என்றபடி அதை எடுத்துச் சென்றார் போப்.

சர்ச்சுக்கு எதிராக பலவிதக் கருத்துகளைக் கூறிய மொரேல்ஸ் ஏசுநாதரின் சிலையை அளித்ததன் மூலம் தன் அரசியல் வியூகத்தைக் கொஞ்சம் மாற்றிக் கொண்டு விட்டாரோ என்கிற கேள்வியும் அங்கு கட்டுரைப் பொருளாகி வருகிறது.

எஸ்பினல் என்பவர் வடிவமைத் ததைப் போலவே இந்தப் பரிசுப் பொருள் இருக்கிறது. எஸ்பினல் ஒரு கத்தோலிக்க பாதிரிதான். (ஜெசூட் பிரிவைச் சேர்ந்தவர்). எனினும் மார்க்ஸிய தத்துவங் களில் ஈடுபாடு கொண்டவர். இதை வாடிகன் ஆதரிக்கவில்லை. ‘‘ஏழைகளுக்கு அதிக ஆதரவு, அவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை’’ என்ற கொள்கை களுக்கு ஆதரவு கொடுக்கத் தொடங்கினால் அது காலப்போக் கில், கத்தோலிக்கத்துக்கு ஆதர வாக இருந்த வலதுசாரி ஆட்சி களை பாதிக்கும் என்ற அச்சம் வாடிகனுக்கு. (அங்கெல்லாம் ஏழைகள் புரட்சியில் இறங்கி விட்டால்?).

பொலிவியாவை அடைந்த வுடன் தூய எஸ்பினல் கொலை செய்யப்பட்ட பகுதிக்குச் சென்று தன் அஞ்சலியைச் செலுத்தினார் போப்.

எதற்காக போப்புக்கு இந்த வித்தியாசமான பரிசை மொரேல்ஸ் அளிக்க வேண்டும். இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்டவர் மொரேல்ஸ் என்பதாலும், சர்ச்சுக்கு எதிரான பலவித நிலைபாடுகளை அவர் கொண்டிருந்ததாலும் அவர் அளித்த பரிசு மேலும் விமர்சிக் கப்பட்டது அல்லது பாராட்டப் பட்டது.

‘‘என்னால் இந்தப் பரிசையும் அதிலுள்ள கலை வேலைப்பாடு களையும் புரிந்து கொள்ள முடிகிறது. இது என்னை அவமதித்து விட்டதாக நான் நினைக்கவில்லை’’ என்று கூறிய போப் அந்த வெகுமதியை மறக்காமல் வாடிகனுக்கும் கொண்டு சென்று விட்டார்.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x