Published : 17 Oct 2015 10:03 AM
Last Updated : 17 Oct 2015 10:03 AM

பெருமை .. சிறுமை .. பொலிவியா - 5

விவசாய யூனியனில் முக்கியப் பதவிகள் மொரேல்ஸை நாடி வந்தன. விவசாயிகள் சித்ரவதையால் இறந்த போதும் அதற்குப் பெரிய அளவில் எதிர்ப்புகளை விதைக்கத் தொடங்கினார் மொரேல்ஸ். ஒரு கட்டத்தில் ராணுவம் இவரை நன்கு அடித்து மலைப் பகுதியில் வீசிவிட்டு வந்தது. விவசாய சங்க உறுப்பினர்கள் அவரைக் கண்டெடுத்துக் காப்பாற்றினர். ஒரு கட்டத்தில் விவசாயிகளையே துணை ராணுவம் ஆக்கி கெரில்லா போர் முறை மூலம் அரசைக் கவிழ்க்கலாமா என்றுகூட நினைத்தார். பின்னர் தேர்தல்தான் சிறந்த முறை என்று முடிவெடுத்தார்.

கியூபா, கனடா போன்ற நாடு களுக்குச் சென்று ஆதரவு திரட்டி னார். அங்கெல்லாம் கூட்ட அமைப்பாளர்களுக்கு கோக்கோ இலைகளைப் பரிசாகத் தந்தார். அமெரிக்க எதிர்ப்புக்கு அடையாளமாகவே கோக்கோ இலை கருதப்படத் தொடங்கியது.

எங்கு சென்றபோதிலும் ‘நான் போதைப் பொருள் விவசாயி அல்ல. கோக்கோ பயிர் விவசாயி. கோக்கோ என்பது ஓர் இயற்கைத் தாவரம். அதை நான் போதைப் பொருளாக மாற்றவில்லை. அது எங்கள் கலாச்சாரத்தில் வழக்கமும் இல்லை. எங்கள் நாட்டில் தலையிட அமெரிக்காவுக்கு யார் உரிமை கொடுத்தது?’’ என்று முழக்கமிட்டார்.

இந்த நிலையில் 1993 பொதுத் தேர்தலில் புரட்சி தேசிய இயக்கம் தேர்தலில் நின்றது. கொன்ஜலோ என்பவர் அதிபர் ஆனார். அமெரிக் காவுடன் இணைந்து கொண்டு பல அதிர்ச்சி வைத்தியங்களைக் கொடுத்தார். 12,500 ஏக்கர் கோக்கோ விளைநிலங்கள் எரிக்கப்பட்டன. இதற்கு இரண்டு கோடி டாலர் அமெரிக்க உதவி கிடைத்தது.

மொரேல்ஸ் இதைக் கடுமை யாக எதிர்த்தார். அரசால் சிறைப் பிடிக்கப்பட்டார். சிறையில் இவர் உண்ணாவிரதம் இருக்கத் தொடங் கினார். அவர் புகழ் பெரிதும் பரவத் தொடங்கியது. வேறு வழியில் லாமல் விடுதலை செய்யப்பட்டார். அர்ஜென்டினாவுக்குச் சென்று அங்கும் ஆதரவு திரட்டினார். பின்னர் 1995 மார்ச் 27 அன்று ஓர் அரசியல் பிரிவைத் தொடங்கினார். முழுக்க இடதுசாரிகளைக் கொண்டிருந்தது இது. 1997 பொதுத் தேர்தலில் இதன் நான்கு உறுப்பி னர்கள் வென்றனர். தொடக்கத்தில் மொரேல்ஸ் தேர்தலில் நிற்பதில் அவ்வளவு குறியாக இல்லை. ஆனால் கட்சியில் பிளவுகள் தோன்ற, பொதுத் தலைவர் தேவைப்பட்டபோது, மொரேல்ஸ் மீது கவனம் அதிகமானது.

மொரேல்ஸ்சின் கட்சி தேர்தலில் வென்றால் அமெரிக்கா பொலிவியாவிற்கு நிதி உதவி செய்வதை நிறுத்திவிடும் என்றார் பொலிவியாவுக்கான அமெரிக்க தூதர். இது அமெரிக்காவுக்கே எதிராகத் திரும்பியது. மொரேல்ஸுக்கு ஆதரவு அதிக மானது. மொரேல்ஸ் ஒரு குற்ற வாளி என்றது அமெரிக்கா. அமெரிக்க உளவுத்துறை தன்னைக் கொல்வதற்கு சதி செய்வதாகக் குற்றம் சாட்டினார் மொரேல்ஸ்.

2003-ல் அடுத்த திருப்புமுனை நிகழ்ந்தது. நாட்டின் எரிவாயு நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டன. இவற்றை அதிக அளவில் வாங்கின அமெரிக்க நிறுவனங்கள். இதற்குப் பெரிய அளவில் எதிர்ப்பு எழுந்தது. சந்தை விலையைவிட குறைவான விலைக்கு விற்பனை நடந்தது மக்களின் கோபத்தை மேலும் தூண்டியது. சாலை மறியலில் ஈடுபட்டனர் எதிர்ப்பாளர்கள். இதில் 80 பேர் கொல்லப்பட்டனர். அப்போது லிபியா, சுவிட்சர்லாந்து என்று மொரேல்ஸ் வெளிநாட்டுப் பயணங்களில் இருந்தார். எனினும் எதிர்ப்பைத் தூண்டிவிட்டது அவர் தான் என்றது பொலிவிய அரசு.

எதிர்ப்பாளர்களில் கணிசமான வர்கள் அடக்குமுறையால் இறக்க, அதிபர் சான்செஸ் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று குரல் கொடுத்தார் மொரேல்ஸ். அவருக்கான ஆதரவு மிகவும் பெருகியது. ஒரு கட்டத்தில் அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அமெரிக்காவிலுள்ள மியாமிக்குப் பறந்தார். அடுத்த அதிபர் ஆனார் கார்லோஸ் மெஸ்ஸா என்பவர்.

அவர் நம்பிக்கைக்கு உகந்தவர் அல்ல என்று கருதினார் மொரேல்ஸ். மீண்டும் நாட்டில் சாலை மறியல்கள், கலவரங்கள்.

மெஸ்ஸாவும் ராஜினாமா செய்ய, டிசம்பர் 2005-ல் பொதுத் தேர்தல் நடந்தது. அதில் வெற்றி பெற்று அதிபர் ஆனார் மொரேல்ஸ்.

பொலிவியா இன்றைய வளத்துக்கு முக்கியமான காரணம் என்று மொரேல்ஸைக் குறிப்பிட லாம். தேர்தலில் நிற்கும்போது ‘‘பொலிவியாவின் மக்களின் நலனுக்குதான் நான் முன்னுரிமை கொடுப்பேன். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அழுத்தி வைக்கப் பட்டிருந்த அவர்கள் நல வாழ்வை நான் ஒளி பெறச் செய்வேன்’’ என்றார். சொன்னதை கிட்டத்தட்ட செய்து காட்டினார்.

அதிபர் பதவியேற்ற உடனேயே பொலிவியாவின் பெட்ரோலிய கிணறுகளையெல்லாம் தேசியம யமாக்கினார். இதன் மூலம் வரி வருமானம் மிக அதிகமானது.

இப்படிக் கிடைத்த அதிகப்படி வருமானத்தை பல பொதுப் பணிகளுக்கு செலவிட்டார். கூடவே பல சமூகநலத் திட்டங்களையும் அறிமுகப்படுத்தினார். இதன் காரணமாக வறுமை நிலை குறைந்தது. வறுமைக்கோட்டுக்கு மிகக் கீழே இருப்பவர்களின் அளவு 43 சதவீதம் சரிந்தது.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x