Last Updated : 16 Oct, 2015 10:19 AM

 

Published : 16 Oct 2015 10:19 AM
Last Updated : 16 Oct 2015 10:19 AM

பெருமை .. சிறுமை .. பொலிவியா - 4

மேற்கு பொலிவியாவில் உள்ள இஸல்லாவி என்ற கிராமத்தில் பிறந்தவர் பொலிவியாவின் தற்போதைய அதிபர் மொரேல்ஸ். ஏழு குழந்தைகளில் ஒருவர். என்றாலும் இவர் உட்பட மூன்றுபேரைத் தவிர பிறர் குழந்தைப் பருவத்திலேயே இறந்து விட்டார்கள்.

உள்ளூர் இனமான (அதாவது ஐரோப்பிய இனக் கலப்பில்லாத என்று அர்த்தம்) அய்மரா என்ற இனத்தில் பிறந்தார். அந்த இன வழக்கப்படி மொரேல்ஸ் பிறந்தவுடன் அவரது தொப்புள் கொடியை ஒரு தனி இடத்தில் சேமித்து வைத்திருக்கிறார்கள். இளம் வயதில் அவருக்குத் தெரிந்ததெல்லாம் அய்மரா மொழி மட்டும்தான். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தார். செம்மறி ஆடுகளை மேய்க்கும் தொழிலும் செய்தார். சிறுவயதிலிருந்தே கற்பனைத் திறன் மிக்கவராக இருந்தார். சிறுவயதிலிருந்தே தினமும் அதிக நேரம் நடைபயிற்சி செய்வாராம்.

அப்போதே கால்பந்து விளையாட்டின் தீவிர ரசிகர். தான் விளையாடிய கால்பந்தை அவரே உருவாக்கினாராம். தன் பகுதியில்

பலருக்கும் கால்பந்து விளையாட்டில் பயிற்சி கொடுத்து அந்தக் குழுவுக்குக் கேப்டனாக விளங்கினார்.

பட்டப்படிப்பில் சேர்க்கப்பட்டார் மொரேல்ஸ். அதிக மதிப்பெண் களைப் பெறவில்லை என்றாலும் பட்டப்படிப்பை படித்து முடித்தார். கூடவே கடைகளில் வேலை செய்து கொஞ்சம் தொகை சம்பாதித் ததையும் குறிப்பிட வேண்டும்.

பின் ஒரு வருடம் ராணுவத்தில் பயிற்சி பெற்றார் (இது அந்த நாட்டில் கட்டாயம்). அந்தக் கால்கட்டம் இவருக்கு மிகுந்த சுவாரசியத்தை அளித்தது. ஆட்சியாளர்கள் ராணுவத்துக்கு அடங்கியதையும், ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதையும் அவரால் அருகிலிருந்தே காண முடிந்தது. தொடர்ந்த கால கட்டத் தில் இரண்டு ராணுவ ஆக்ர மிப்புகள், 5 அதிபர்கள் அடுத் தடுத்துப் பதவியேற்றனர் என்ற குழப்பமான காட்சியை பொலிவி யாவில் இவர் காண நேரிட்டது.

எல் நினோ புயல் காரணமாக மொரேல்ஸ் குடும்பத்தினரின் விவசாய நிலங்கள் எல்லாம் பெரிதும் பாதிக்கப்பட்டன. எனவே குடும்பத்தைக் கவனிப்பதில் தன் பார்வையைத் திருப்பினார் மொரேல்ஸ்.

அப்போது கோக்கோ விளைபொருள் அதிக லாபத்தைத் தந்தது. வருடத்துக்கு நான்கு முறை இதைப் பயிரிடலாம் என்பது கூடுதல் வசதி. மதம், மருத்துவம் ஆகிய இரண்டு கோணங்களிலுமே கோக்கோ பயன்பட்டது. ஆனால் இன்னொரு முக்கியமான பயன்பாடு காரணமாகத்தான் அது அதிக அளவில் வாங்கப்பட்டது என்பதே உண்மை. கோகெயின் என்ற போதைப் பொருளின் முக்கிய அடிப்படை கோக்கோ. அதனால்தான் அதிக ஏற்றுமதி. எனவே அதிக விளைச்சல்.

மொரேல்ஸ், கோக்கோ விவசாயிகள் தொழிற்சங்கத்தின் விளையாட்டுப் பிரிவின் செயலாளர் ஆனார். அடிக்கடி கால்பந்து போட்டிகளுக்கு ஏற்பாடு செய்து நல்ல பெயர் வாங்கினார்.

1980-ல் மிகவும் வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்டிருந்த ராணுவ தளபதி லூயி கார்ஸியா மெஸா, அதிபர் ஆனபோது பிற அத்தனை அரசியல் கட்சிகளுக்கும் தடை விதித்தார். மொரேல்ஸுக்கு அரசியலில் அழுத்தமான ஆர்வம் உண்டாக, இந்த நிகழ்வு ஒரு காரணம் ஆனது.

கோக்கோ பயிரை விளைவித்த ஒரு விவசாயி கோகெயின் போதைப் பொருளைக் கடத்த உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு ராணுவ வீரர்களால் தாக்கப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் மொரேல்ஸை மிகவும் பாதித்தது. அடுத்த பொதுத் தேர்தலில் கோக்கோ விவசாயிகள் சங்கமும் போட்டியிட்டது.

பொலிவியாவில் விளைந்த கோக்கோ, போதைப் பொருளாக மாற்றப்பட்டு அமெரிக்காவை அடைந்தது. அமெரிக்க அரசு போதைப் பொருளுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. பொலிவிய அரசுக்கு உதவ தனது ராணுவ வீரர்களை அனுப்பியது.

பொலிவிய ராணுவத்தினரும் கோக்கோ பயிர்களை எரித்தனர். கேள்வி கேட்ட விவசாயிகளை சித்ரவதை செய்தனர். மொரேல்ஸ் இதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். அழிக்கப் பட்ட ஒவ்வொரு ஏக்கருக்கும் அரசு அளித்த நஷ்டஈடை வாங்க மறுத் தார். அதிக லாபத்தை ஈட்டித் தரும் ஒரு விளைபொருள் கோக்கோ. காலகாலமாக என் முன்னோர் பயிரிட்டது.

அமெரிக்கா கூறியதற்காக இதற்கு எப்படி தடை விதிக்க வேண்டும்? போதை மருந்து தயாரிப்பாளர்களைத் தண்டிக் காமல், விவசாயிகளை தண்டிப்பது ஏன்?’’. இப்படி யோசித்த மொரேல்ஸ் அப்போதைய அமெரிக்க எதிர்ப்பை தன்வச மாக்கிக் கொண்டார்.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x