Last Updated : 03 Nov, 2015 10:19 AM

 

Published : 03 Nov 2015 10:19 AM
Last Updated : 03 Nov 2015 10:19 AM

பெருமை .. சிறுமை .. பொலிவியா - 13

நமது தேசியக் கொடிக்கும் பொலிவியாவின் தேசியக் கொடிக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இரண்டுமே மூன்று குறுக்கு வண்ணப் பட்டைகள் கொண்டவை. இரண்டிலுமே கொடியின் கீழ்ப் பகுதியில் உள்ள நிறம் பச்சை.

சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய வண்ணங்கள் கொண்டது பொலிவிய கொடி. நடுவில் (நமக்கு அசோகச் சக்கரம் மாதிரி) அவர்களுக்கு ராணுவச் சின்னம்.

சமீபகாலமாக மற்றொரு கொடி யையும் அரசு தொடர்பான நிகழ்ச்சி களில் மொரேல்ஸ் அறிமுகப் படுத்தி வருகிறார் என்றோம். 2009-ல் மாற்றியமைக்கப்பட்ட பொலிவிய அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்த இரண்டாவது கொடி தேசியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கொடியில் உள்ள ஒன்பது சிறிய மஞ்சள் நிற நட்சத்திரங்கள் பொலிவியாவின் ஒன்பது துறை களைக் குறிக்கின்றன. சற்று கீழே தனியாக ஒரு பெரிய நட்சத்திரம் காணப்படுகிறது. இது கடல் வழிக்கான உரிமை பொலிவியா வுக்கு இருப்பதைக் குறிக்கிறதாம். (ஒரு காலத்தில் பொலிவியாவின் ஒரு பகுதி கடலை ஒட்டியும் இருந்தது. ஆனால் 1884-ல் நடைபெற்ற பசிபிக் யுத்தத்தில் சில நிலப்பகுதிகளை இழந்ததால் இன்று நாற்புறமும் நாடுகளால் சூழப்பட்ட தேசமாகிவிட்டது பொலிவியா).

இந்தத் தொடரில் கோக்கோ அடிக்கடி இடம் பெற்றதற்குக் காரணம் உண்டு. அது பொலிவிய சரித்திரத்தில் பின்னிப் பிணைந்த ஒன்று. பொலிவியாவின் உள்ளூர் வாசிகளுக்கு கோக்கோ என்றால் வெகு இஷ்டம். நாமெல்லாம் காப்பியோ, டீயோ குடிப்பதுபோல அவர்கள் பல நூற்றாண்டுகளாக கோக்கோ இலையை மெல்வது வழக்கம். நம் கட்டிடத் தொழிலா ளிகள் பசியை மறக்கவும் பழக்கம் காரணமாகவும் புகையிலையை மெல்வதுண்டு. அதுபோல் அவர்கள் கோக்கோ இலைகளை மெல்கின்றனர்.

இன்றுகூட மூன்றில் ஒரு பொலிவியர் கோக்கோ இலையை அப்படியே சாப்பிடுகிறாராம். 1980-களில் கோக்கெயின் என்ற போதைப் பொருள் உலகெங்கும் பரவியது. அதன் அடிப்படை கோக்கோ இலைகள். முக்கியமாக பொலிவியாவின் லாஸ் யுங்காஸ், சபரே ஆகிய இடங்களில் கோக்கோ அதிகமாக விளைந்தது.

இந்தக் கோக்கோ, போதைப் பொருளாக மாற்றப்பட்டு அமெரிக் காவை பெருமளவில் அடைந்தது என்பதால், இதைத் தடுக்கத் தீர்மானித்தது அமெரிக்கா. கோக்கோ விவசாயிகளையே எதிரி களாக கருதியது. 1990-களில் பெருமளவு அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. இதற்கு எதிராக ஈவோ மொரேல்ஸ் செயல்பட்டதும் தொழிற்சங்கத் தலைவர் ஆனதும் பின்னர் அதிபர் ஆனதையும் நாம் கவனித்தோம்.

‘‘கோக்கோவை வரவேற்போம், கோக்கெயினை மறுப்போம்’’ என்ற வாசகங்களுடன் மொரேல்ஸ் கோக்கோ விளைச்சலுக்கு ஆதரவாகச் செயல்பட்டார்.

‘‘கோக்கோவைத் தாராளமாகப் பயிரிடுங்கள். ஆனால் அது கோக்கெயின் எனும் வடிவத்தைப் பெறுவதற்கு ஒத்துழைக்காதீர்கள்’’ என்று அறிவித்தார் மொரேல்ஸ்.

இது ஒரு வியப்பான அறிவிப்பு. ஒரு ஏழை நாடு, அமெரிக்காவுக்கு எதிராகக் குரல் கொடுப்பதும் அதை எதிர்த்தபடி ஆட்சி செய்வதும் எளிதான விஷயம் அல்ல. இதன் மூலம் அமெரிக்காவிடமிருந்து கிடைத்து வந்த லட்சக்கணக்கான டாலர் நிதி உதவி நின்றுவிடக் கூடும் என்று தெரிந்தும் இப்படி ஒரு முடிவெடுத்து செயல்படுத்தினார் மொரேல்ஸ்.

அந்த அறிவிப்பு செய்யப்பட்ட 9 வருடங்களுக்குப் பிறகு பொலி வியா இன்று வெற்றி கண்டிருக் கிறது. கடந்த 4 வருடங்களில் கள்ளத் தனமான கோக்கோ தயாரிப்பை (அதாவது போதைப் பொருளுக் காகவே தயாரிக்கப்படும் கோக்கோ) மூன்றில் ஒரு பங்காகக் குறைத்திருக்கிறது பொலிவியா.

அந்தவிதத்தில் பக்கத்து நாடு களான கொலம்பியா, பெரு ஆகியவற்றை ஏக்கப் பெருமூச்சு விட வைத்திருக்கிறது இந்த நாடு. (அங்கெல்லாம் போதைப் பொருள் ஆதிக்கம் மிக அதிகம்).

ஐ.நா.வின் போதைப் பொருள் மற்றும் குற்றத் தடுப்புப் பிரிவு செயற்கைக் கோள்களின் மூலம் கண்காணிப்பதில் கோக்கோ விளைச்சல் பொலிவியாவில் நிஜமாகவே குறைந்திருக்கிறது என்று நற்சான்றிதழ் வழங்கியிருக் கிறது. என்றாலும் அமெரிக்காவில் கள்ளத்தனமாக விற்கப்படும் கோகெயினில் ஒரு சதவீதம் பொலி வியாவில் விளையும் கோக்கோவி லிருந்து உருவானதுதான் என்கிறது ஓர் ஆய்வு.

இப்போதெல்லாம் கோக்கோ விவசாயிகள் தங்கள் பயிர்களையும் பிற விவரங்களையும் அரசிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதிகபட்சம் 2500 சதுர மீட்டர் பரப்பளவு நிலத்தில்தான் கோக்கோ பயிரிடலாம்.

இந்த நிபந்தனைகளை விவசா யிகள் வரவேற்கிறார்கள். ஏனென்றால் அந்த அளவு கோக்கோ விளைச்சலை அரசு சட்டபூர்வ மானதாக ஆக்குகிறது. (இன்ற ளவும் கோக்கோ அளவுக்கு லாபம் தரும் விவசாயப் பொருள் பொலிவியாவில் வேறு எதுவும் இல்லை).

என்றாலும் .இந்த ஆண்டு அமெரிக்காவில் வெளியாகி உள்ள அரசு அறிவிக்கை பொலிவிய அரசை விமர்சிக்கிறது. இன்னமும் அதிக கட்டுப்பாடுகளை கோக்கோ விவசாயிகளின் மீது பொலிவிய அரசு கொண்டுவர வேண்டும் என்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கத் தூதரகமே தங்களுக் குத் தேவையில்லை என்று கூறியது பொலிவியா. அந்தக் கசப்பின் மிச்சம் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஐ.நாவின் பொதுச் செயலாளர் பான் கி மூன் அக்டோபர் 11, 2015 அன்று பொலிவியாவில் உரையாற் றினார். மாறி வரும் வெப்பநிலை குறித்த உலக மாநாட்டில் அவர் பேசும்போது ‘‘அடேலா ஜமுடியோ’’ (Adela Zamudio) என்ற பொலிவிய பெண் கவிஞரைப் பற்றிக் குறிப்பிட்டார் (அன்று உலக மகளிர் தினம் நெருங்கிக் கொண்டிருந்தது).

‘‘சமூகத்தின் தடைகளை மீறிக் கொண்டு ஒரு மகளிர் தலைவியாக அவர் உயர்ந்தார். அவரை நாம் உதாரணமாகக் கொள்ள வேண்டும்’’ என்றார்.ஒருவிதத்தில் பார்க்கப் போனால் மகளிர் தினத்தைக் கொண்டாடும் முழுத் தகுதி பொலிவியாவுக்கு உண்டு. அதன் நாடாளுமன்றத்தில் ஆண்களுக்குச் சமமான எண்ணிக் கையில் பெண்களும் இருக்கி றார்கள்.

(அடுத்து - ஒரு நாடு? ஒரு கண்டம்?)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x