Last Updated : 31 Oct, 2015 08:18 AM

 

Published : 31 Oct 2015 08:18 AM
Last Updated : 31 Oct 2015 08:18 AM

பெருமை .. சிறுமை .. பொலிவியா - 12

ஒருபுறம் சமூகநல திட்டங்களுக்கு மிக அதிகமாக தேவைப்பட்ட நிதி, மறுபுறம் ஏற்றுமதியைவிட மிக மிக அதிகமான இறக்குமதி. இவற்றின் காரணமாக பொலிவி யாவில் பண வீக்கம் தாறுமாறாக அதிகமானது. பொலிவியா நாணயமான பெஸோவின் மதிப்பு மிகவும் குறைந்தது. ஒரு டாலருக்கு 60 பெஸோ என்று 1952-ல் இருந்த நிலை, 1956-ல் ஒரு டாலருக்கு 12,000 என்கிற அளவில் மாற்றம் கண்டது. அந்த நேரத்தில் அரசின் நிதி நிலைமைக்கு அமெரிக்கா பெரிதும் உதவியது உண்மை. மீண்டும் அரசுக்கு எதிராக சுரங்க முதலாளிகள், தொழிலாளிகள், விவசாயிகள் ஆகிய அனைவருமே கொதித்தெழுந்தனர்.

தன் ஆட்சிக்கு ஆபத்து வருகிறது என்பதை உணர்ந்ததும் ஜுவாஜோ தன் ராணுவத்தை பலப்படுத்திக் கொள்ள முடிவு செய்தார். போர் பயிற்சி அளிக்க அமெரிக்கா உதவியது.

ஆனால் 1964-ல் வேறொரு எதிர்பாராத நிகழ்வு உண்டானது. ஜுவாஜோவைப் பதவியிலிருந்து நீக்கியது பொலிவிய ராணுவம்! துணை அதிபர் பரியென்டோஸ் என்பவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

இந்தக் காலகட்டத்தில்தான் சே குவாரா பொலிவியாவை அடைந்தார். தொடக்கத்தில் உருகுவே நாட்டைச் சேர்ந்த ஒரு வணிகர் என்று தன்னை சொல்லிக் கொண்டார். பொலிவியாவில் உள்ள சாண்டா க்ரூஸ் என்னும் நகரை அடைந்தார். அங்கே கியூபாவிலிருந்து சிலரும் பிற லத்தீன் அமெரிக்க நாடுகளி லிருந்து பலரும் வந்திருந்தார்கள். அவர்களுக்கு கொரில்லா போர் முறையைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார் சே குவாரா.

சே குவாராவின் கனவு இதுவாக இருந்தது. ‘பிடல் காஸ்ட்ரோவுக்கு கியூபாவில் அளிக்கப்பட்ட ஆதரவு பொலிவியாவில் எனக்கு கிடைக் கும். விவசாயிகள் எங்களை ஆதரிப் பார்கள். எனவே உணவுக்கும் இருப் பிடத்துக்கும் பஞ்சம் இருக்காது. உள்ளூர் இளைஞர்களும் எமது சித்தாந்தத்தால் கவரப்பட்டு கொரில்லா ராணுவத்தில் சேரு வார்கள். பிறகு ஒட்டு மொத்தமாக பொலிவியாவின் தலைநகரை நோக்கிச் சென்று புரட்சியில் ஈடுபட வேண்டியதுதான்’.

பொலிவிய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் சே குவாராவை சந்தித்தார்கள். ஆனால் சே குவாராவின் கனவு நடைமுறைக்கேற்றதாக இல்லை என்று அவர்கள் கருதினார்கள்.

தவிர உள்ளூர் மக்கள் சே குவாராவின் சித்தாந்தங்களை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ‘இருக்கிற பிரச்சினை போதாதென்று சே குவாராவால் புதிய பிரச்சினைகள் வந்துவிடுமோ என்று எண்ணினார்கள். ‘‘இந்தப் பகுதியில் உள்ளவர்களின் தலைகள் பாறைகளைப்போல உள்ளன. எங்கள் கருத்துகளால் அவற்றைத் துளைத்து உள்நுழைய முடியவில்லை’’ என்று சே குவாரா தன் நாட்குறிப்பில் எழுதினாராம்.

போதாக்குறைக்கு உள்ளூரைச் சேர்ந்த ஒரு பெண்மணி சே குவாரா குறித்து பொலிவிய காவல்துறைக் குத் தகவல் கூறினாள். அன்றே சே குவாராவும் அவர் குழுவைச் சேர்ந்த மூன்று கெரில்லாப் படை வீரர்களும் வளைக்கப்பட்டனர். அந்தக் கிராமத்தில் இருந்த சிறு பள்ளியில் அவர்கள் சிறை வைக்கப்பட்டனர். அதற்கு அடுத்த தினமே அக்டோபர் 9 அன்று ஒரு ஹெலிகாப்டர் அங்கு வந்தது. அதில் ராணுவத் தளபதி ஒருவர் இருந்தார். கூடவே அமெரிக்க உளவுத் துறையைச் சேர்ந்த ஓர் அதிகாரியும் இருந்தார். இந்த அதிகாரி சே குவாராவின் நாட்குறிப்பில் இருந்த ஒவ்வொரு பக்கத்தையும் தனது புகைப்படத்தில் பதிவு செய்து கொண்டார். பின்னர் சே குவாராவை பல கேள்விகள் கேட்டார். பொலிவிய அரசின் உத்தரவின் பேரில் சே குவாராவின் மூன்று தோழர்களும் தூக்கிலிடப்பட்டனர். சே குவாரா உயிருடன் இருக்க வேண்டும் என்று கருதியது அமெரிக்க அரசு. அவரை பனாமாவுக்கு அழைத்துச் சென்று தகவல்களைக் கறக்க அமெரிக்க விமானம் ஒன்று தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் பொலிவிய அரசு, சே குவாராவை தூக்கிலிட உத்தரவு பிறப்பித்தது.

‘’யாருக்காவது ஏதாவது தகவல் சொல்ல விரும்புகிறீர்களா?’’ என்று கேட்க, அமெரிக்க உளவுத்துறை அதிகாரியிடம் சே குவாரா கூறியது இவைதான். ‘‘அமெரிக்காவில் மிகவும் வெற்றிகரமான ஒரு புரட்சியை எதிர்பார்க்கலாம் என்று பிடல் காஸ்ட்ரோவிடம் கூறுங்கள். என் மனைவியிடம் மறுமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் இருக்க முயற்சி செய்யச் சொல்லுங்கள்’’ என்றாராம்.

‘‘இறப்பை விரைவில் எதிர்பார்த்த போதிலும் அதை துணிவுடனும், வெகு நாகரிகமாகவும் எதிர்கொண் டார் சே குவாரா’’ என்று பின்னர் குறிப்பிட்டார் ரோட்ரிகுயெஸ் என்ற அந்த அமெரிக்க உளவுத்துறை அதிகாரி.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x