Last Updated : 28 Oct, 2015 11:00 AM

 

Published : 28 Oct 2015 11:00 AM
Last Updated : 28 Oct 2015 11:00 AM

பெருமை .. சிறுமை .. பொலிவியா - 10

பிரபல புரட்சியாளர் சே குவாராவுக்கும் பொலிவியாவுக்கும்கூட ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு.

சே குவாரா பற்றி ஓரளவு அறிந்தவர்களில் சிலருக்கு ஒரு சந்தேகம் எழுந்திருக்கலாம். அவர் பிறந்தது அர்ஜென்டினாவில். அவர் பெரும் புரட்சிகள் செய்த நாடு என்றதும் சட்டென்று நினைவுக்கு வருவது கியூபா. அப்படியிருக்க பொலிவியாவுக்கும் அவருக்கும் எந்தவகையில் தொடர்பு?

நிச்சயம் உண்டு. தென் அமெரிக்க நாடுகள் அனைத்துக்கு மாகக் குரல் கொடுத்தவர் சே குவாரா. தவிர பொலிவியாவில் தான் அவர் இறந்தார்.

கடந்த 1928-ல் அர்ஜென்டினாவில் ஒரு வளம்மிக்க குடும்பத்தில் பிறந்தவர்தான் சே குவாரா. மருத்துவப் படிப்பைப் பயின்றார். பியூனோ ஏரெஸ் பல்கலைக்கழகத்தில் அவரது கல்வி தொடர்ந்தது. அவருக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுவது பிடிக்கும். தென் அமெரிக்க நாடுகளைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் நிறைய இருந்தது. இந்த இரண்டையும் இணைத்துக் கொண்டார் அவர். தனதுமோட்டார் சைக்கிளிலேயே பல தென் அமெரிக்க நாடுகளுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பயணம் செய்தார். (மருத்துவக் கல்வியின்போது இப்படிப்பட்ட வாய்ப்புகள் அடிக்கடி கிடைத்து விடுமா என்ன? அவற்றை அவர் எப்படியோ ஏற்படுத்திக் கொண்டார் என்பதுதான் உண்மை).

இப்படி ஆர்வத்துடன் அவர் தொடங்கிய பயணங்கள் பெரும்பாலும் சோகத்துடன் முடிவடைந்தன. தென் அமெரிக்க நாடுகளில் நிலவிய வறுமை அவரை வருத்தமடைய வைத்தது. தவிர கீழ்மட்ட மக்களின் மீது ஆட்சியாளர்கள் செலுத்திய அடக்குமுறை அவரைக் கொந்தளிக்க வைத்தது.

கடந்த 1953-ல் மருத்துவப் பட்டம் கிடைத்தது. ஆனால் மன அமைதி கிடைக்கவில்லை. லத்தீன் அமெரிக்காவில் (தென் அமெரிக்க நாடுகள்) தொடர்ந்து பயணங்களை மேற்கொண்டார். அப்போது பல இடதுசாரி அமைப்புகளுடன் தொடர்பு ஏற்பட்டது. அந்தத் தொடர்புகளை வளர்த்துக் கொண்டார்.

கடந்த 1950-களில் மெக்ஸி கோவில் அவர் ஒரு தலைவரைச் சந்திக்க, அந்தச் சந்திப்பு சில நாடுகளின் சரித்திரத்தையே திருப்பிப் போட்டது. அவர் சந்தித்தது பிடல் காஸ்ட்ரோவை. அந்தச் சந்திப்பு மெக்ஸிகோவில் ரகசிய இடம் ஒன்றில் நடை பெற்றது. ஏனென்றால் பிடல் காஸ்ட்ரோ அப்போது தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டி ருந்தார்.

அப்போது கியூபாவை படிஸ்டா என்பவர் ஆட்சி செய்து கொண்டிருந்தார். இவர் ஒரு சர்வாதிகாரி என்று குற்றம்சாட்டி அவருக்கு எதிராகப் பல புரட்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் சே குவாரா. காலப்போக்கில் சே குவாராவும் பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து கொண்டு கியூபா அரசுக்கு எதிராகப் புரட்சிகளில் ஈடுபட்டார். 1959-ல் கியூபாவின் அரசு கைமாறியது. பிடல் காஸ்ட்ரோவின் கைக்கு அதிகாரம் வந்தது. அந்தக் காலகட்டத்தில் சே குவாரா, பிடல் காஸ்ட்ரோவின் பெருநம்பிக்கைக்கு உரியவராக விளங்கினார். தொழில் அமைச்ச ராக நியமிக்கப்பட்டார் சே குவாரா.

லத்தீன் அமெரிக்க நாடுகளை அமெரிக்கா (அதாவது யு.எஸ்.) ஆக்கிரமிப்பு செய்வதை சே குவாராவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதை விவசாயிகள் கடுமையான எதிர்க்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்.

கடந்த 1965 ஏப்ரலில் சே குவாரா தனது அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் (சிலர் வேறுமாதிரியும் கூறுகிறார்கள். கியூபாவின் பொருளாதார மாற்றம் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பாக பிடல் காஸ்ட்ரோவுக் கும் சே குவாராவுக்கும் கருத்து மோதல்கள் உண்டாயின என்றும் இதைத் தொடர்ந்து சே குவாரா பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்கிறார்கள்).

பிறகு கியூபாவிலிருந்து வெளி யேறினார் சே குவாரா. ஆப்பிரிக்க பயணத்தை மேற்கொண்டார். அதன் பிறகு இவர் தன்னை வெளிப் படுத்திக் கொண்டது பொலிவியா வில். அப்போது சே குவேராவுக்கு வயது 39. அவர் தங்கியிருந்த இடத்தை வளைத்தது பொலிவிய ராணுவம். (அமெரிக்க ராணுவத்தின் பங்களிப்பும் பொலிவிய ராணுவத்தில் அப்போது இருந்தது). அப்போது கொரில்லா போர்முறைத் தாக்குதலில் தன் குழுவினருக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார் சே குவாரா.

கைது செய்யப்பட்ட சே குவாராவை அடுத்த நாளே கொலை செய்தது பொலிவிய ராணுவம். அவர் உடலை ஓரிடத்தில் புதைத் தது. அந்த சமாதியின் மேல் எந்தக் குறிப்பும் (பெயர் உட்பட) பொறிக்க அனுமதிக்கப்படவில்லை. அவரது கைகளை மட்டும் துண்டித்து உலகுக்குக் காட்டியது. அதாவது சே குவாரா இறந்துவிட்டார் என்பதற்கான சான்று!

கடந்த 1997-ல் சே குவாராவின் உடல் பகுதிகள் தோண்டிக் கண்டுபிடிக்கப்பட்டன. அவை கியூபாவுக்கு அனுப்பப்பட்டன. அங்கு அவை அரசு மரியாதையுடன் புதைக்கப்பட்டன. அதிபர் பிடல் காஸ்ட்ரோவும், ஆயிரக்கணக்கான கியூபா மக்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 1960-ல் அல்பெர்ட்டோ கோர்டா என்பவர் சே குவாராவை வட்டமான தட்டையான குல்லாய் அணிந்திருந்த நிலையில் புகைப்படம் எடுத்திருந்தார். அது பின்னர் உலக அளவில் பரவலாகியது. இந்தியாவில்கூட பல இளைஞர்களின் டீ-ஷர்ட்களில் இடம் பெற்றது இந்த உருவம்தான்.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x