Published : 10 Nov 2013 12:56 PM
Last Updated : 10 Nov 2013 12:56 PM

பிலிப்பைன்ஸில் புயலுக்கு 10,000 பேர் பலியானதாக அச்சம்

பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்தியப் பகுதியில் சக்தி வாய்ந்த ஹையான் புயல் கடுமையாகத் தாக்கியதில் சுமார் 10,000 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது.

வீடுகள், பள்ளிகள், விமான நிலைய கட்டடங்கள் சூறைக்காற்றில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 10 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக, காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மணிக்கு 315 கி.மீ. வேகத்தில் வீசிய ஹையான் புயலால் லெய்டே மற்றும் சமர் ஆகிய தீவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் 36 மாகாணங்களைச் சேர்ந்த 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட லெய்டே தீவின் பாலோ நகருக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று மின் துறை செயலாளர் ஜெரிகோ பெடில்லா பார்வையிட்டார். அதிபர் பெனிக்னோ அக்வினோ உத்தரவின் பேரில் அங்கு சென்றுள்ள அவர், மரங்கள் ஆங்காங்கே வேருடன் சாய்ந்துள்ளதாகவும், வீட்டுக் கூரைகள் காற்றில் பறந்து விட்டதாகவும் மின்சார மற்றும் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

புயலின் வேகத்தை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், அமெரிக்காவில் வீசும் கடும் சூறாவளிக்கு (4-ம் வகை) இணையானதாக ஹையான் புயல் கருதப்படுகிறது.

தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் புயலுக்கு எத்தனைப் பேர் பலியானார்கள், எந்த அளவுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனினும், உயிரிழப்பு 10 ஆயிரத்தை எட்டிவிட்டதாக அங்குள்ள அமைப்புகளின் தகவல்கள் உறுதிபட கூறுகின்றன.

மேலும், இந்தப் புயலில் சிக்கிய 2,000-க்கும் மேற்பட்டோரின் நிலை என்ன என்பது இதுவரைத் தெரியவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x