Last Updated : 02 Dec, 2014 10:10 AM

 

Published : 02 Dec 2014 10:10 AM
Last Updated : 02 Dec 2014 10:10 AM

பிறவிப் பகைவர்கள் – பாலஸ்தீனம், இஸ்ரேல் 7

மூனிச் படுகொலைகளைத் தொடர்ந்து அடுத்த இருபது ஆண்டுகளில் தேடித்தேடி பல பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். கார்களுக்குக் கீழே வெடிகுண்டுகள் வெடித்தன. தொலைபேசிகளில் சிறு குண்டு கள் வைக்கப்பட்டன. ஒலிம்பிக் படு கொலைகளுக்கு சம்பந்தமில்லாத, ஆனால் புகழ்பெற்ற பாலஸ்தீனர்களில் பலரும் இப்படிக் கொல்லப்பட்டனர். பாலஸ்தீனம் ரத்த நதியில் மிதக்கத் தொடங்கியது. கோல்டா மேயருக்குப் பின் இஸ்ரேலின் பிரதமர் ஆனார் ராபின்.

ராபின் பிறந்ததே ஜெருசலேம் நகரில்தான். அப்போது அது ‘பிரிட்டிஷ் பாலஸ்தீனத்தில் இருந்தது’. ராபின் சிறுவனாக இருந்தபோதே அவர் அப்பா இறந்து விட்டார். குடும்பத்தை ராபின்தான் உழைத்துக் காப்பாற்ற வேண்டியிருந்தது. அதிக ஊதியம் பெறுவதற்காக தனது பதினெட்டாவது வயதில் அமெரிக்காவுக்குச் சென்றார்.

அதுவரை நெஹேமியா ருபிட்ஜோவ் என்றிருந்த தனது பெயரை இட்சிக் ராபினாக மாற்றிக் கொண்டார். அங்குள்ள போலே ஜியான் என்ற கட்சியில் சேர்ந்தார். ஜியோனிஸத்தை பெருமளவில் ஆதரித்த கட்சி இது. அதாவது உலகிலுள்ள யூதர்கள் கொத்து கொத்தாகச் சென்று பாலஸ்தீனத்தில் குடியேற வேண்டும் என்பதைக் கொள்கையாகவே வைத்திருந்த யூதக்கட்சிகளில் ஒன்று.

1948ல் அரபு இஸ்ரேல் போரின்போது எகிப்திய ராணுவத்திற்கு எதிராக போர் புரிந்தார். பின்னர் ராணுவத்தின் துணை கமாண்டர் ஆனார். ராபினுக்கு மத நம்பிக்கை கிடையாதாம். அமெரிக்கத் தூதரான டென்னிஸ் ராஸ் என்பவர் ‘ராபின் அளவுக்கு மதச்சார்பற்ற யூதர் ஒருவரை நான் இதுவரை கண்டதில்லை’ என்று கூறியிருக்கிறார்.

1988ம் ஆண்டு அராபத்திடமும் அவரது பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடமும் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் தெரிந்தது. ஐ.நா.சபையில் அவர் ஆற்றிய உரையில் அனைவரும் சமாதானத்துடன் அமைதியாக வாழ்வது அவசியம் என்றார். (அராபத்தின் இந்த மாற்றத்துக்கு அவர் சம்சாரியானதும் ஒரு காரணமாக இருக்குமோ என்ற விமர்சனங்கள் எழுந்தன. தனது 61வது வயதில் 27 வயது பாலஸ்தீனப் பெண்மணி ஒருவரை யாசர் திருமணம் செய்து கொண்டிருந்தார். அந்தப் பெண்மணி ஒரு கிறிஸ்தவர்!). ராபினும் அமைதியின் அவசியத்தை ஏற்றுக் கொண்டார்.

‘’பொங்கியது போதும் .. பொறுத்திருப்போம்’’ என்ற முடிவுக்கு இரு தரப்பினருமே வந்ததும் உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டன. ஆஸ்லோ உடன்படிக்கைகள் எனப்படும் இவை பாலஸ்தீனத்துக்கு சில அங்கீகாரங்களை அளித்தன. காஸாவின் சில பகுதிகளிலும் மேற்குக்கரையிலும் பாலஸ்தீன தேசிய அமைப்புக்கு அதிகாரம் உண்டு என்பது ஒத்துக் கொள்ளப்பட்டது.

இதற்கு ஓர் உத்தரவாதத்தைக் கேட்டார் ராபின். யாசர் அராபத் தன் வன்முறைப் பாதையை கைவிட வேண்டும். இஸ்ரேல் என்ற நாட்டை அங்கீகரிக்க வேண்டும். இந்த இரண்டையும் ஒப்புக் கொண்டு ராபினுக்குக் கடிதம் எழுதினார் யாசர் அராபத். கடிதம் கிடைத்த அன்றே (1993 செப்டம்பர் 9) தான் பாலஸ்தீன விடுதலை அமைப்பை அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதாக ராபின் அறிவித்தார்.

வெள்ளைக் கொடிகள் உயர்த் தப்பட்ட வேகம் சமாதான விரும்பி களுக்கு சந்தோஷத்தை அளித்தது. ஆனால் வன்முறையாளர்களின் எண்ணிக்கை அங்கு கொஞ்ச நஞ்சம் இல்லையே. இந்த உடன் படிக்கைகளுக்கு எதிராக இஸ்ரே லில் எதிர்ப்பு ஊர்வலம் நடந்தது. யாசர் அராபத்தும், ராபினும் கைகுலுக்கிக் கொண்ட அசாதாரண சம்பவம் வரலாற்றில் பதிவானது. ‘பாலஸ்தீனியர்களாகிய உங்க ளோடு போரிட்ட இஸ்ரேலியர் களாகிய நாங்கள் உரத்த குரலில் கூறுகிறோம். போதும் நாம் சிந்திய ரத்தமும், கண்ணீரும்... போதும்’’.

அதுமட்டுமல்ல 1994ல் இஸ்ரே லுக்கும், ஜோர்டானுக்கும் உண் டான அமைதி ஒப்பந்தத்துக்கும் ராபின் வழிவகுத்தார். ஆஸ்லோ-2 என்ற ஒப்பந்தம் மிகக் குறிப்பிடத்தக்கதாக இருந் தது. பாலஸ்தீனியர்களை ஆட்சி செய்ய இஸ்ரேல் அனுமதித்துள்ள காஸா பகுதியைத் தாண்டியும் பாலஸ்தீனிய சுயாட்சிக்கு வழிவகுத்தது அது!

இந்த ஒப்பந்தத்துக்கு இறுதி வடிவம் கொடுக்க யாசர் அராபத்தும், இஸ்ரேலின் வெளியுறவு மந்திரி ஷிமான் பெரெஸும் பல நாட்கள் இரவு பகலாக உழைத்தனர்.

ஒப்பந்தப்படி பாலஸ்தீனியர் களின் சுயாட்சிப் பகுதி எல்லை முன்னைவிடக் கொஞ்சம் (4%) அதிகமாகியிருந்தது. ஆனால் மேற்குக் கடற்கரையில் 73 சதவீதப் பகுதியை இஸ்ரேல் தன்னிடமே தக்க வைத்துக் கொண்டிருந்தது. இதன் மூலம் சுமார் 68 சதவீத பாலஸ்தீனியர்கள் ‘அன்னிய’ ஆளுகையின்கீழ் இருக்க வேண்டி வந்தது.

அது மட்டுமல்ல, பாலஸ்தீனர் களின் சுயாட்சிக்காக அனுமதிக் கப்பட்ட பகுதி தொடர்ச்சியாக இல்லை. அங்கே கொஞ்சம், இங்கே கொஞ்சம் என்று பிரித் தளிக்கப்பட்டிருந்தது பிற்காலத்தில் `தனிப் பாலஸ்தீன நாடு’ எழு வதைத் தவிர்க்க ராபின் செய்த சூழ்ச்சி இது என்ற பரவலான கருத்து எழுந்தது.

பாலஸ்தீனர்களின் எல்லைக் குள்ளும் நுழைந்து (ஹமாஸ் என்ற பயங்கரவாதக் குழுவினர் உள்ளிட்ட) தீவிரவாத கெரில்லாக் களைப் பிடிக்க இஸ்ரேலுக்கு அதிகாரம் உண்டு என்பதும் ஒப்பந்தத்தில் இருந்தது. தன் தரப்புக்கு பலவீனம் சேர்க்கும் ஓர் ஒப்பந்தத்துக்கு அராபத் ஏன் ஒத்துக் கொள்ள வேண்டும்?

இஸ்ரேலின் தீவிர எதோச் சாதிக்காரம் ஒருபுறம், ஏற்கெனவே தன் ஆளுகையில் வந்துள்ள காஸா பகுதியையே அமைதியாக ஆள முடியாமல் அங்கு நடக்கும் பயங்கரவாதங்கள் ஒருபுறம். இவை தவிர அமெரிக்காவின் ப்ளாக்மெயிலும் ஒரு முக்கியக் காரணம். இந்த ஒப்பந்தத்துக்கு ஒத்துக் கொள்ளாவிட்டால் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி

`வெளியிடங்களிலிருந்து’ அராபத் இயக்கத்திற்குக் கிடைத்து வரும் எல்லாப் பொருளாதார உதவி களையும் நிறுத்தி விடுவதாக அமெரிக்க அரசு வெளிப்படையாக பயமுறுத்தி உள்ளது! ஹமாஸ் என்ற ஒரே வார்த்தை இந்தக் கட்டுரையில் இடம்பெற் றுள்ளது. ஆனால் அது பாலஸ் தீன-இஸ்ரேல் போக்கைத் தீர் மானிக்கும் சக்திகளுள் முக்கிய மான ஒன்றாக மாறிவிட்டது. அதைப் பற்றியும் அறிந்து கொள்வோம்.

(இன்னும் வரும்..)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x