Last Updated : 25 Nov, 2014 11:49 AM

 

Published : 25 Nov 2014 11:49 AM
Last Updated : 25 Nov 2014 11:49 AM

பிறவிப் பகைவர்கள் – பாலஸ்தீனம், இஸ்ரேல் 1

யூதர்கள் என்றவுடனே உங்கள் நினைவுக்கு வருவது என்ன?

அந்த இனத்தைக் கூண்டோடு (குறைந்தபட்சம் ஜெர்மனி யிலிருந்து) ஒழிப்பதற்கு ஹிட்லர் எடுத்துக் கொண்ட முயற்சிகளா? பல நாடுகளுக்குச் சிதறினார்கள் அவர்கள்.

உலகின் பல பகுதிகளிலும் யூதர்கள் பரவிக் கிடந்தாலும் அவர்கள் தங்கள் சிறப்பான பங்களிப்பைப் பல விதங்களிலும் உலகிற்கு அளிக்கத் தவறவில்லை. (விஞ்ஞானி ஐன்ஸ்டீன், கம்யூனிஸத் தந்தை கார்ல் மார்க்ஸ், எழுத்தாளர்கள் சால் பெல்லோ மற்றும் போரிஸ் பாஸ்டர்நாக், மதியூகி கிஸிங்கர் ஆகியோர் மறக்கக் கூடியவர்களா?)

அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் மிகவும் செல்வாக்கான பதவிகளில் யூத இனத்தவர் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். இவர்களுக்கெல்லாம் நெஞ்சு நிறைய ஏக்கம் - ‘’நாம் என்னதான் செல்வாக்கோடு இங்கு இருந்தாலும் நமக்கென்று ஒரு தாய்நாடு இல்லையே!’’. சிந்தனையோடு நின்றுவிடாமல் செயலில் காட்ட முடிவெடுத் தார்கள். ‘நமக்கென்று ஒரு நாடு. அது எங்கே இருக்கலாம்?’. அவர்களின் பார்வை பாலஸ்தீனத்தின் மீது படிந்தது.

அத்தனை நாடுகளையும் விட்டு பாலஸ்தீனத்தின்மீது ஏன் பதிய வேண்டும்?

அது ஒரு நாடாக அப்போது இல்லாததினாலா? (இப்போதும் அது ஒரு நாடா என்று கேள்வி எழுப்புபவர்கள் உண்டு. இதைப் பிறகு அலசுவோம்). அதைவிட அழுத்தமான காரணம் ஒன்று இருந்தது.

ஒரு காலத்தில் யூதர்கள் தங்களுக்கென்று ஒரு மத மற்றும் தேசிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டது பாலஸ்தீனத்தில்தான். ‘’யூதர்களின் புனிதத் தந்தை’ எனப்படும் ஏபிரஹாம் அங்கு வாழ்ந்திருக்கிறார். ரோமானிய அரசர்கள் யூதர்களை அங்கிருந்து ஓட ஒட விரட்டினார்கள்’’ என்கிறது சரித்திரம். எனவே தங்களது ஒருகாலத்திய தாய்நாடான பாலஸ்தீனத்தைக் குறி வைக்கத் தொடங்கினார்கள் செல்வாக்கு மிக்க யூதர்கள்.

ஐரோப்பாவில் உள்ள யூதர் கள் ஒன்று சேர்ந்து ஏற்கனவே ‘’ஜியோனிசம்’’ என்ற கொள்கை அமைப்பை உருவாக்கியிருந்தார்கள். ‘’பாலஸ்தீனியர்கள் வசிக்கும் பகுதிதான் எங்கள் தாயகம். அப்படித்தான் பைபிள் (பழைய ஏற்பாடு) கூறுகிறது. எனவே அந்தப் பகுதி யூதர்களின் சொந்த நாடாக வேண்டும்’’ என்று முடிவெடுத்த அவர்கள் சாரிசாரியாக பாலஸ்தீனத்தில் குடியேறத் தொடங்கினார்கள்.

யூதர்களின் வாதம் சரிதான். ஆனால் அதெல்லாம் ரொம்ப ரொம்பப் பழமைவாதம். அதற்குப் பிறகு சரித்திரம் பாலஸ்தீனத்தில் பல மாறுதல்களைக் கொண்டு வந்துவிட்டிருந்தது. பின்னாளில் அரபு மன்னர்கள் பாலஸ்தீனத்தைக் கைப்பற்றிவிட, பிறகு பல நூற்றாண்டுகளாக அங்கு முஸ்லிம்கள் மெஜாரிட்டியினராக இருந்து வந்தார்கள்.

எப்படியோ, வல்லரசு நாடுகள் யூதர்களின் தனிநாடு ஏக்கத்தைப் போக்க முன்வந்தன. 1947ல் ஐ.நா. ஒரு திட்டத்தை அறிவித்தது ‘’பாலஸ்தீனம் இரண்டாக்கப்பட வேண்டும். ஒரு பகுதி அரபு மக்களுக்கு. மற்றொன்று யூத இனத்தவருக்கு’’.

அதற்கு அடுத்த வருடமே, மேற்கத்திய நாடுகளின் பெரும் ஆதரவோடு, யூதர்களுக்காக ஒரு தனிநாடு உருவானது - அதுதான் இஸ்ரேல்!

அது எப்படி ஒரு நாட்டின் ஒரு பகுதியை ஐ.நா. துண்டாடும் என்றால் அதற்கான விளக்கத்தை ஐ.நா. இப்படி அளித்தது (வெளிப்படையாக அல்ல, வல்லரசுகளின் மூலமாக).

பாலஸ்தீனம் என்பது ஒரு பூகோளப் பகுதியைக் குறிப்பதாக மட்டுமே 1948 வரை இருந்தது (வெஸ்ட் இன்டீஸ், மத்திய கிழக்கு என்றெல்லாம் சொல்வது போல). மத்திய தரைக் கடலுக்கும் ஜோர்டான் நதிக்கும் இடைப்பட்ட பகுதியைத்தான் பாலஸ்தீனம் என்று அழைத்தார்கள்.

முதலாம் உலகப் போருக்குப் பிறகு ‘லீக் ஆஃப் நேஷன்ஸின்’ (அந்த நாளைய ஐ.நா. சபை) ஆணைப்படி 1922லிருந்து பாலஸ்தீனத்தை நிர்வகிக்கும் பொறுப்பு பிரிட்டனுக்கு அளிக்கப்பட்டது. (இதனால் அந்தப் பகுதி ‘பிரிட்டிஷ் பாலஸ்தீனம்’ என்றும் அழைக்கப்பட்டது). தனது இந்த ஆணையை முடிவுக்குக் கொண்டுவரும் விதத்தில் தான் ஐ.நா. அந்தப் பகுதியை இரண்டாகப் பிரித்தது.

அப்படிப் பிரித்தபோதே அங்கு சிக்கல்கள் முளைக்க வாய்ப்பு உண்டு என்பது சம்பந்தப்பட்ட எல்லோருக்குமே துல்லியமாகத் தெரிந்திருந்தது. அதனாலதான் ஜெருசலேம்-பெத்லகேம் அடங்கிய பகுதியைப் ‘பாதுகாக்கப்பட்ட பகுதி’ என்று அறிவித்து , அந்தச் சிறிய பகுதி மட்டும் தன்னால் நிர்வகிக்கப்படும் என்றும் ஐ.நா. தெரிவித்தது.

ஐ.நா.வின் தீர்மானம் என்னவோ மிக விளக்கமாகத்தான் இருந்தது. எந்த நாட்டுக்கு எந்தப் பகுதி என்று எல்லைக்கோடுகளையெல்லாம் வரைந்து கொடுத்தது. பிரிட்டிஷ் பாலஸ்தீனத்தின் நடுவே ஒரு கோடு போட்டுக் கிழித்தது போல் இல்லை இந்த எல்லைக்கோடு. ஆங்காங்கே பாலஸ்தீனம், நடு நடுவே இஸ்ரேல் என்கிற மாதிரி தான் இருந்தது. முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதிகள் பாலஸ்தீனத்துக்கு, யூதர்கள் அதிகம் உள்ள பகுதிகள் இஸ்ரேலுக்கு என்று பிரித்திருந்தார்கள்.

வெளியே இஸ்ரேலின் பகுதி, அதற்குள்ளே பாலஸ்தீனத்தின் ஒரு பகுதி, அதற்கும் உள்ளாக ஜெருசலேம் என்று அமைந்திருந்தது. 1948 ஆகஸ்ட்டுக்குள் பிரிட்டன் தன் ராணுவம் உள்ளிட்ட நிர்வாகத்தை வாபஸ் பெறவேண்டும். அதே ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் புதிய நாடுகள் உருவாக வேண்டும். இதுதான் ஐ.நா.வின் நிபந்தனை.

மேற்கத்திய வல்லரசுகளும் யூதர்களும் சிரித்து மகிழ்ந்திருக்க வேண்டும். ஆனால் மிக அதிகமாக அப்போது சிரித்தது விதியாகத்தான் இருக்க வேண்டும்.

(இன்னும் வரும்..)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x