Last Updated : 26 Dec, 2015 09:54 AM

 

Published : 26 Dec 2015 09:54 AM
Last Updated : 26 Dec 2015 09:54 AM

பிரமிக்க வைக்கும் ஆஸ்திரேலியா - 21

ஆஸ்திரேலியாவின் சுற்றுச் சூழல் மிகக் குறிப்பிடத்தக்க விதத்தில் மாறி வருகிறது. அதாவது பாதகமான விதத்தில்!. இதற்குப் பல காரணங்கள். என்றாலும் முக்கிய காரணமாக மாறி வரும் வெப்பச் சூழல் மற்றும் அங்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தாவரங்கள் மற்றும் மிருகங்களையும் குறிப்பிடலாம்.

காடுகளை அழிக்கும்போது மண்ணில் உள்ள உப்புத் தன்மை மிக அதிகமாக அதிகரிக்கும். இதன் காரணமாக அங்குள்ள நீரின் தரம் குறையும். மேற்கு ஆஸ்திரேலி யாவிலுள்ள சுமார் ஏழு சதவிகித விவசாய நிலங்கள் இந்த அதிக உப்புத்தன்மை கொண்ட நீரினால் பாதிக்கப்படுகின்றன.

மிக அதிகமான கால்நடைகளின் மேய்ச்சலும் பசுமைப் பிரதேசங் களின் தன்மையைக்குறைத்து வருகிறது. மீன்பிடித்தலை ஓர் எல்லையோடு நிறுத்திக் கொள்ளா தது மீன் வளம் குன்றுவதற்குக் காரணமாக இருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் 20 புதிய கிருமிகள் அல்லது புதிய நோய் களால் ஆஸ்திரேலியா பாதிக்கப் படுகிறது என்கிறது ஒரு புள்ளி விவரம்.

இறைச்சி மற்றும் கோதுமை ஏற்றுமதியில் முன்னணியில் இருந்து வந்த ஆஸ்திரேலியா அந்தப் பெருமையைப் பெருமளவு இழந்துவிட்டது. காரணம் அமெரிக்கா. தனது விவசாயி களுக்கு பல சலுகைகளைக் கொடுப்பதால், அவர்களால் குறைந்த விலைக்கு கோதுமையை ஏற்றுமதி செய்ய முடிகிறது. அது மட்டுமல்ல பிற நாடுகள் தனக்குப் போட்டியாக இருக்கலாகாது என்ற காரணத்தால் அடக்க விலையை விட குறைந்த விலைக்கேகூட மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்கா கோதுமையை வாரி வழங்கியது (அளவுக்கு அதிகமான கோதுமை விளைச்சல் இருந்த போது அதை அமெரிக்கா கடலில் கொட்டிய விந்தையும்கூட நடந்த துண்டு) இப்படி ஆஸ்திரேலியா வுக்கு ஏற்றுமதி விஷயத்தில் கடும் தலைவலியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.

1836-ல் சார்லஸ் டார்வின் என்ற விஞ்ஞானி ஆஸ்திரேலியா மிக சக்தி வாய்ந்த நாடாக ஒரு காலத் தில் விளங்கும் என்றார். ஆனால் சமீபத்தில் தாமஸ் கெனேலி (இவர்தான் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் என்ற பிரபல நூலின் ஆசிரியர்). ‘’நான் குழந்தையாக இருந்தபோது எங்கள் குடும்பம் வறுமையானதாக இருந்தது. இப் போது வளம் சேர்ந்து விட்டாலும், எங்களால் பாதுகாப்பாக நடமாட முடியவில்லை’’ என் றிருக்கிறார். கணிசமான ஆஸ் திரேலியர்களின் கருத்தும் இதுதான்.

ஆப்பிரிக்காவிலும் அமெரிக்கா விலும் நிறவெறி தலைவிரித்தாடி யதை நாம் அறிவோம். அதே சமயம் பல்வேறு தலைவர்கள் இதற்கெதிராகப் போராடி ஓரளவு வெற்றி பெற்றதும் தெரிந்ததுதான். ஆனால் ஆஸ்திரேலியாவில் இன்னமும்கூட வெள்ளைத் தோலுக்கு உயர்வு மனப்பான்மை உண்டு. சென்ற வருடம்கூட ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் தங்கள் நாடு குடியரசாக விளங்க வேண்டும் என்ற லட்சியமில்லாமல், இங்கிலாந்து அரசியே தங்களது நாட்டின் ராஜாங்கத் தலைவராக தொடர்ந்து விளங்குவார் என்று தீர்மானித்தது.

ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடி மக்கள் அநியாயமான விதத்தில் நடத்தப்படுகின்றனர். குடிபோதை என்ற காரணங்களுக் காகவெல்லாம் நீண்ட சிறை தண்டனையை அவர்களுக்கு அளிக்கத் தயங்குவதில்லை அந்த அரசு. தவிர நகரப் பகுதிகளிலிருந்து இந்த மக்களை முடிந்தவரை வெளியேற்றுவதிலும் முனைப்பு காட்டியது ஆஸ்திரேலியா. பிற நாடுகளும் மனித உரிமைக் கழகங்களும் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதுகூட ‘’அப்படி நாங்கள் நடந்து கொண் டிருக்க வேண்டாம்தான்’’ என்று ஏதோ ஒப்புக்கு அந்த அரசு கூறியதே தவிர, மன்னிப்பு கேட்கவில்லை.

அவ்வளவு பரந்து விரிந்த நாட்டில் மக்கள் தொகை மிகக் குறைவு - சுமார் இரண்டு கோடிதான். நகரப் பகுதிகளில்கூட கட்டிடங்கள் அருகருகில் இருப்பது என்பது சில பகுதிகளில் மட்டுமே. எனவே பல வேலைகளுக்கு வெளிநாட்டி னரை வரவழைத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாய மாகி விட்டது. அதே சமயம் ஆங்கில அறிவை முக்கிய அளவு கோலாக வைத்துக் கொண்டு பிற நாட்டினரை அனுமதிக்கிறது ஆஸ்திரேலியா.

என்றாலும் ‘அமெரிக்காவைப் போல் இருக்க விரும்பி ஆப்பிரிக்கா போல ஆகிவருகிறோமோ’’ என்ற மனக்குறையை அங்கு பலரும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இப்போதைய நிலை நீடித்தால் இன்னும் நாற்பது வருடங்களில் அந்த நாட்டின் மக்கள் தொகையில் கால்வாசிபேர் ஆசியர்களாக இருப்பார்கள். இந்த நிலைக்காக கவலைப்படும் அரசு, நான்கு ஆண்டுகளுக்கு முன் தங்கள் நாட்டில் குடியேறுபவர்களின் எண் ணிக்கையை கணிசமாகக் குறைத் தது. அதுமட்டுமல்ல ‘குடும்ப மறு இணைப்புத் திட்டம்’’ என்பதன் அடிப்படையில் ஆஸ்திரேலியா வுக்குச் சென்று தங்கும் இளைஞர்களுடன், பிற நாட்டில் வசிக்கும் அவனது குடும்பத்தவர் இணைந்து தங்க வழிவகுத்திருந் தது ஆஸ்திரேலியா. இப்போது இந்தத் திட்டத்திற்கும் பலவித நிபந்தனைகளை விதிக்கிறது.

வேறொரு விதத்திலும் ஆஸ் திரேலியாவில் அமைதியின்மை நிலவுகிறது. வளர்ந்த நாடுகளில் பணக்காரர்களுக்கும், ஏழை களுக்குமிடையே உள்ள பொருளா தார வேறுபாடு மிக அதிகமாக இருப்பது இங்குதான்.

நீரிழிவு நோய், உடல் பருமன் இவை இரண்டும் ஆஸ்திரேலி யாவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. தனக்கு நீரிழிவு நோய் வந்தது தெரி யாமலேயே இருப்பவர்கள் பலர். 63 சதவீதம் ஆஸ்திரேலியர்கள் தேவைக்கு அதிகமான எடை கொண்டவர்களாகவே இருக் கிறார்கள்.

போதாக்குறைக்கு ஓஸோன் படலத்தில் அதிக ஓட்டை விழுந் திருப்பது ஆஸ்திரேலியாவுக்கு மேலே உள்ள பகுதியில்தான். எனவே தோல் புற்றுநோயால் பாதிக் கப்படுபவர்களின் எண்ணிக்கை இங்கு அதிகமாகி வருகிறது.ஆஸ்திரேலியாவின் தற்போதைய பிரதமர் மால்கம் டர்ன்புல். 2015 செப்டம்பரில் பிரதமரானவர்.

“ஆஸ்திரேலியா வரம் பெற்ற நாடு. ஒரே ஒரு விஷயத்தைத் தவிர - முதல் ஆஸ்திரேலியர்களோடு நாம் இன்னமும் சமாதானமாகப் போகவில்லை. தவறுகளை சரி செய்து இணைந்த மக்களாக நாம் வாழ வேண்டும்” என்கிறார். உணர்ந் ததை சரிசெய்யும்போது ஆஸ் திரேலியாவின் மதிப்பு உயரும்.



(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x