Last Updated : 14 Nov, 2015 09:33 AM

 

Published : 14 Nov 2015 09:33 AM
Last Updated : 14 Nov 2015 09:33 AM

பாரீஸ் பயங்கரவாத தாக்குதல்: உலகத் தலைவர்கள் கண்டனம்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச் செயலாள பான் கி மூன், அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது மனித குலத்தின் மீதான தாக்குதல்:

பாரீஸ் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒபாமா செய்தியாளர்களி சந்திப்பின்போது, "பயங்கரவாதிகள் மீண்டும் ஒருமுறை அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதல் பிரான்ஸ் மீதானது மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித குலத்தின் மீதான தாக்குதல்.

இத்தருணத்தில் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஹாலந்தே மிகவும் பரபரப்பாக இருப்பார் என்பதால் இப்போதைக்கு நான் அவருடன் தொலைபேசியில் பேசுவதில்லை என முடிவெடுத்துள்ளேன்.

இருப்பினும், பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து நீதியை நிலைநாட்ட அமெரிக்கா அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறது" என்றார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கண்டனம்:

பாரீஸில் நடந்துள்ள பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரான்ஸ் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். பிரான்ஸுக்கு இந்தியா துணை நிற்கும். தாக்குதலில் சிக்கியவர்கள் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. பொதுச் செயலாளர் கண்டனம்:

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், "பாரீஸில் பல இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதற்கு என் கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறேன், பட்லாகா தியேட்டரின் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி பொது மக்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்துகிறேன்" எனக் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி கண்டனம்:

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கால்பந்து மைதானம் உட்பட பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாரீஸில் இருந்து வந்துள்ள பயங்கரவாத தாக்குதல் செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாகவும், அச்சுறுத்துவதாகவும் உள்ளது. பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மோசமான தருணத்தில் இந்தியா பிரான்ஸுக்கு துணை நிற்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x