Published : 09 Feb 2016 10:39 AM
Last Updated : 09 Feb 2016 10:39 AM

நேபாள முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா மறைவு

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா (79) உடல்நலக் குறைவால் காலமானார்.

கடந்த பிப்ரவரி 2014 முதல் அக்டோபர் 2015 வரை நேபாளத்தின் பிரதமராக பதவி வகித்தவர் சுஷில் கொய்ராலா. அந்நாட்டின் முக்கிய அரசியல் கட்சியான நேபாளி காங்கிரஸின் தலைவராக பொறுப்பேற்று கட்சியை வழிநடத்தி வந்தவர். நேபாளத்தில் புதிய அரசமைப்பு சட்டத்தை அமல்படுத்தி, அங்கு அமைதி மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டியதில் முக்கிய பங்காற்றியவர்.

சமீப காலமாக நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்த கொய்ராலாவுக்கு காத்மண்டில் உள்ள அவரது வீட்டிலேயே மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன் தினம் அவரது உடல்நிலை மோசமாகி நள்ளிரவு 12.50 மணியளவில் உயிரிழந்தார்.

பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களின் அஞ்சலிக்காக அவரது உடல் காத்மண்டுவில் உள்ள தசரத விளையாட்டு அரங்கில் வைக்கப்படவுள்ளது. பின்னர் முழு அரசு மரியாதையுடன் இன்று இறுதி சடங்குகள் நடக்கும் என நேபாள அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுஷ்மா பங்கேற்பு

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு நேற்று நேபாளம் சென்று சுஷில் கொய்ராலாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியது. இது குறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறும்போது, ‘‘நேபாளத்தின் சோகத்தை இந்தியாவும் பகிர்ந்து கொள்கிறது. வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழு நேபாளம் சென்றுள்ளது. இந்த குழு இறுதிச் சடங்கில் பங்கேற்கும்’’ என்றார்.

இந்த குழுவில் காங்கிரஸ் சார்பில் ஆனந்த் சர்மா, ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உட்பட பலர் இடம் பெற்றுள்ளனர்.

பிரதமர் மோடி இரங்கல்:

சுஷில் குமார் மறைவால் நேபாள நாடும், நேபாளி காங்கிரஸ் கட்சியும் ஒரு நல்ல தலைவரையும், இந்தியா ஒரு நல்ல நண்பரையும் இழந்துவிட்டது என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x