Last Updated : 04 Feb, 2017 03:49 PM

 

Published : 04 Feb 2017 03:49 PM
Last Updated : 04 Feb 2017 03:49 PM

நெருப்புடன் விளையாடுகிறது ஈரான்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானின் ஆயுதக் கொள்முதல் வலைப்பின்னல்களில் புதிய தடை உத்தரவுகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிறப்பித்துள்ளார். ஏற்கெனவே 7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள் நுழைய தடை உத்தரவினால் ஏற்பட்டுள்ள தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் ட்ரம்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரானின் சமீபத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை மற்றும் ஏமனில் ஹூதி போராளிகளை ஈரான் ஆதரிப்பது ஆகியவற்றினால் அமெரிக்கா இந்த புதிய தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் சிலர் தெரிவித்தான்ர். ஹூதி போராளிகள் சமீபத்தில் சவுதியின் போர்க்கப்பலை தாக்கக் குறிவைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒபாமா ஆட்சியில் ஈரானுடன் மைல்கல் அணு ஒப்பந்தம் கையெழுத்தானது, இதன் மூலம் ஈரானுக்கு அமெரிக்கா சில வாக்குறுதிகளை அளித்திருந்தது.

ஆனால் ட்ரம்ப் தற்போது ட்வீட் செய்யும் போது, “ஈரான் நெருப்போடு விளையாடுகிறது. ஒபாமா அவர்களுடன் எவ்வளவு அன்னியோன்யமாக இருந்தார் என்பதை அவர்கள் பாராட்டவில்லை, ஆனால் நான் ஒபாமா போல் அல்ல, நான் அப்படி இருக்கப்போவதில்லை” என்று ட்வீட் செய்துள்ளார்.

மேலும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் சனிக்கிழமையன்று டோக்கியோவில் தெரிவிக்கும் போது, “உலகத்தில் பயங்கரவாதத்திற்கு பெரிய ஆதரவளிக்கும் நாடு ஈரான். இதனை புறக்கணிப்பதோ, மறுப்பதோ ஒருக்காலும் நல்லதல்ல. ஆனால் மத்திய கிழக்கில் அமெரிக்க படைகளை அதிகரிக்க எந்த ஒரு திட்டமும் இல்லை” என்றார்.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைகேல் பிளின், “உலக நாடுகளுக்கு, அமெரிக்காவுக்கு எதிரான ஈரானின் பகைமை நிரம்பிய, தீரமான செயல்களுக்கு பாராமுகமாக இருக்கும் நாட்கள் முடிந்து விட்டன. ஒபாமா அரசு சாதகமான ஓர் உடன்படிக்கையை மேற்கொண்ட பிறகும் ஈரான் தன் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. இப்போதைய தடைகள் ஈரானின் இந்த நடத்தையைக் குறிவைத்து செலுத்தப்பட்டதே.

புரட்சிகர பாதுகாப்புப் படை பயிற்சிகளுக்காக ஈரான் இன்று சில ஏவுகணைகளை ஏவி சோதனைகள் மேற்கொள்ளவிருந்தது. அதாவது அமெரிக்காவின் எந்த வித அச்சுறுத்தலுக்கும், இழிவான தடைகளுக்கும் முழுதும் ஈரான் தயாராக இருப்பதைக் காட்டவே இந்த சோதனைகள் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

ராணுவ ரீதியான ஆய்வு:

அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் ஈரானின் வலைப்பின்னல்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். உயர் தொழில் நுட்ப ஆயுதக் கொள்முதல் தீவிரவாத உதவி ஆகியவற்றுக்கான சாட்சிகளை அமெரிக்கா திரட்டி வருவதாக அமெரிக்க ராணுவ உயர்மட்டத் தரப்பு கூறுகிறது.

தற்போது ட்ரம்ப் விதித்த தடையின் பின்னணியில் கடந்த ஞாயிறன்று ஈரான் நடத்திய ஏவுகணை சோதனையே உள்ளது, இந்த ஏவுகணை ஒருநாள் அணு ஆயுதங்களை சுமந்து செல்லவல்லது என்று அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர், இதனையடுத்தே புதிய தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஈரானுக்கு எதிராக எந்த ஒரு தெரிவையும் பரிசீலித்து வருகிறோம், ராணுவ நடவடிக்கை உட்பட என்று ராணுவ உயர்மட்டங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஏமன் நாட்டில் அரசுப்படைகளை எதிர்த்து வரும் ஹூதி போராளிகள் எனும் சக்திவாய்ந்த பழங்குடியினருக்கு ஆயுதங்களை ஈரான் வழங்குவதாக அமெரிக்கா கருதுவதும் ஈரான் மீதான காழ்ப்புக்குக் காரணமாகியுள்ளன. அமெரிக்காவின் தோழமை நாடான சவுதி போர்க்கப்பலை ஹூதி போராளிகள் தாக்கினர்.

சிரியாவில் பஷார் அல் அசாத்தின் ஆட்சியை ஆதரிக்கும் ரஷ்யாவுடன் ஈரான் படைகள் சேர்ந்துள்ளதால் ஈரான் மீதான புதிய தடைகளை அனுமதிக்க மாட்டோம் என்று ரஷ்யா கருத இடமுண்டு.

லெபனான் மற்றும் சீனாவில் உள்ள ஈரானின் வலைப்பின்னல்கள் அமெரிக்க பொருட்களை வாங்குவதற்கும், அமெரிக்க நிதி அமைப்பை பயன்படுத்துவதையும் தடுத்திருப்பது ஈரானின் நடவடிக்கைகளைக் குறைக்கும் என்று அமெரிக்க நிதித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் ஈரானின் பொருளாதாரத்தை தடைகள் மூலம் அமெரிக்காவினால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் நிபுணர்கள் சிலர் கருதுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x