Published : 27 Nov 2015 10:17 AM
Last Updated : 27 Nov 2015 10:17 AM

துருக்கி விமானத்தை தகர்க்க ரஷ்யா வியூகம்: சிரியாவில் அதிநவீன போர்க்கப்பல் ரோந்து

ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு பழிக்குப் பழியாக துருக்கு போர் விமானத்தை தகர்க்க ரஷ்யா வியூகம் வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்ய விமானப் படை தாக்குதல் நடத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய போர் விமானத்தை துருக்கி ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை எழுந்துள்ளது.

‘ரஷ்யாவின் முதுகில் துருக்கி குத்திவிட்டது, இதனை மன்னிக்க முடியாது: என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதற்கேற்ப சிரியாவில் பல்வேறு புதிய வியூகங்களை ரஷ்யா வகுத்துள்ளது. மத்திய தரைகடலில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்யாவின் ஏவுகணை தாங்கி போர்க்கப்பலான மோஸ்வா தற்போது சிரியாவின் லடாகியா கடற்பகுதியில் முகாமிட்டுள்ளது.

மேலும் ரஷ்யாவின் அதிநவீன எஸ்.400 ஏவுகணை சாதனம் சிரியாவின் லடாகியா விமான தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இது 400 கி.மீட்டர் தொலைவில் உள்ள வான்பரப்பை கண்காணித்து தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட தாகும். சிரியாவில் இருந்து துருக்கி எல்லை 50 கி.மீட்டர் தொலைவில் மட்டுமே உள்ளது.

ரஷ்ய தளபதி எச்சரிக்கை

இதனிடையே ரஷ்ய ராணு வத்தின் மூத்த தளபதி லெப்டி னென்ட் ஜெனரல் செர்ஜி ரூட்காய் மாஸ்கோவில் நிருபர்களிடம் பேசியபோது, துருக்கியுடனான ராணுவ உறவு அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டது இனிமேல் சிரியாவில் முகாமிட்டுள்ள ரஷ்ய போர் விமானங்களுக்கு எந்த வகையில் அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் அந்த இலக்கு தகர்க்கப்படும் என்று தெரிவித் தார்.

இதுதொடர்பாக ஜெர்மானிய பாதுகாப்பு நிபுணர்கள் கூறியிருப்பதாவது: துருக்கி எல்லையில் வாழும் குர்துகள் தனி நாடு கோரி போராடி வருகின்றனர். அந்தப் பகுதியில் துருக்கி போர் விமானங்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றன. அப்போது சிரியா வான் எல்லைக்குள் துருக்கி போர் விமானங்கள் நுழைவது வழக்கம். இனிமேல் துருக்கி விமானம் சிரியா எல்லையில் பறந்தால் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்படுவது உறுதி என்று தெரிவித்துள்ளனர்.

துருக்கி-ஐ.எஸ். ரகசிய உறவு

துருக்கியின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதியில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அங்கு தனி நாடு கோரி பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்படுகின்றன.

குர்துகளும் ஐ.எஸ். தீவிரவாதிகளும் ஆரம்பம் முதலே கடும் போரில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் துருக்கி குர்துகளை ஒடுக்க ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு துருக்கி அரசு மறைமுகமாக ஆதரவு அளிப்பதாகவும் ஐ.எஸ். அமைப்பிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் பெறுவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது துருக்கி, ரஷ்யா இடையே பகைமை உருவாகி இருப்பதால் குர்து கிளர்ச்சிக் குழுக்களுக்கு ரஷ்யா மறைமுக மாக ஆயுதங்களை விநியோகிக்கக் கூடும் என்று அமெரிக்க கூட்டுப் படை பாதுகாப்பு நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் சமரச முயற்சி

நேட்டோ அமைப்பில் துருக்கியும் ஓர் உறுப்பு நாடு ஆகும். இதனால் துருக்கிக்கு ஆதரவாக அமெரிக்கா கருத்து தெரிவித்து வருகிறது.

எனவே இருதரப்புக்கும் இடையே பதற்றத்தை தணிக்க பிரான்ஸ் அதிபர் ஹொலாந்தே முயற்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை அவர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை நேரில் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து நேற்று மாஸ்கோவுக்கு சென்ற அவர் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து ஆலோசனை நடத்தி னார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x