Last Updated : 29 May, 2016 12:16 PM

 

Published : 29 May 2016 12:16 PM
Last Updated : 29 May 2016 12:16 PM

செம்மை காணுமா செர்பியா?- 11

கடந்த 1980-ல் டிட்டோ இறந்ததும் யுகோஸ்லாவிய நாட்டில் அமைந்த குடி யரசுகள் சுயாட்சி மற்றும் சுதந்திரக் குரல்களை ஒலிக்கத் தொடங்கின.

1991-ல் இருந்து 1995 வரை நடைபெற்ற கடும் போர்களின் விளைவாக யுகோஸ்லாவியக் கூட்டமைப்பு உடைந்தது. ‘‘டிட்டோ இறந்தவுடன் நாங்கள் எல்லோரும் அழுதோம். ஆனால் அப்போது எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் புதைத்தது யுகோஸ்லாவியாவைத்தான் என்று’’ என்றார் ஓர் உள்ளூர் அரசியல்வாதி.

தனது 35 ஆண்டு ஆட்சிக் காலத்தில் யுகோஸ்லாவியாவின் அத்தனை இனங்களையும் மதங்களையும் டிட்டோ தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். கம்யூனிஸத்தைப் பரவ விட்டார். மக்களின் மதிப்பைப் பெற்றார்.

டிட்டோவுக்குப் பிறகு அவரது வாரிசு என்று யாரும் சரியாக முன்வரவில்லை. தனக்குப் பிறகு ஒவ்வொரு வருடம் ஒவ்வொரு குடியரசின் பிரதிநிதி சுழற்சி முறை யில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற டிட்டோவின் திட்டம் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அமலுக்கு வரவில்லை.

1991-ல் இருந்து 2001 வரை முன்னாள் யுகோஸ்லாவியா பரப்புக்குள் நடைபெற்ற இனப்போர்களை ‘யுகோஸ்லாவ் யுத்தங்கள்’’ என்பார்கள். யுகோஸ்லாவியக் குடியரசு உடைவதற்கு இந்தப் போர்கள் முக்கிய காரணமாக அமைந்தன.

1991-ல் ஸ்லோவேனியாவில் போர் நடைபெற்றது. பத்து நாட்கள் நடைபெற்ற இந்த யுத்தத்தை ஸ்லோவேனியாவின் சுதந்திரப் போர் எனலாம். யுகோஸ்லாவிய மக்கள் ராணுவத்துக்கும் ஸ்லோ வேனிய எல்லைப் பாதுகாப்பு அமைப்புக்கும் இடையே நடைபெற்ற போர் இது.

டிட்டோ 1980-ல் இறந்ததிலிருந்தே யுகோஸ்லாவியாவில் பல தளங்களில் பிரச்சினைகள் தோன்றின. 1989-ல் மிலோசெவிக் செர்பியாவின் அதிபர் ஆனார். பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் செர்பியாதான் யுகோஸ்லாவியக் குடியரசு களில் மிகப் பெரியது. இதை அடிப்படையாக வைத்துக் கொண்டே செர்பியாவின் அதிகாரத்தை மேலும் மேலும் வலிமைப் படுத்திக் கொண்டார் மிலோசெவிக். மத்திய ஆட்சி செர்பியாவுக்கே பல சலுகைகளை வழங்குவதாகப் பிற குடியரசுகள் எண்ணத் தொடங்கின. 6 குடியரசுகளில், நான்கு சுதந்திரம் குறித்து வெளிப்படை யாகவே பேசத் தொடங்கின. ஸ்லோ வேனியா இதில் முன்னணியில் நின்றது. ஜெர்மனி மற்றும் வாடிகன் ஸ்லோவேனி யாவுக்கு ஆதரவாக களத்தில் குதித்தன.

டிட்டோ இறந்தபோது யுகோஸ்லாவியக் கூட்டமைப்பு 20 பில்லியன் டாலர் கடன் பட்டிருந்தது. அதே சமயம் அதன் இரு குடியரசுகளான க்ரோவேஷியா மற்றும் ஸ்லேவேனியா ஆகியவை பணக்காரக் குடியரசுகளாக இருந்தன. செர்பியத் தலைநகரான பெல்கிரேடிலிருந்து இவற் றிற்குத் தொடர்ந்து முதலீடுகள் வந்த வண்ணம் இருந்தன. 1980-க்களில் யுகோஸ்லாவியாவில் 8 சதவீத மக்கள் தொகையை மட்டுமே கொண்டிருந்த ஸ்லோவேனியா, நாட்டின் வருமானத்தில் 20 சதவீதத்துக்கு காரணமாக அமைந்திருந்தது. அதே சமயம் தொடர்ந்து பெல்கிரேட் தன் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடு வதாகவும் ஸ்லோவேனியா கருதத் தொடங் கியது. இதைத் தொடர்ந்து ஸ்லோவேனி யாவும் க்ரோவேஷியாவும் தனி நாடு கோரிக்கைகளை எழுப்பத் தொடங்கின. இவற்றைத் தனி நாடுகளாக முதலில் அங்கீகரித்த முக்கியமான தேசம் ஜெர்மனி.

1990-ல் ஸ்லோவேனியா மக்களிடையே ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. 93 சதவீதம் பேர் ஸ்லோவேனியா தனி நாடாக வேண்டும் என்று கூறினர். இதைத் தொடர்ந்துதான் மேற்படி போர் நடைபெற்றது. ஸ்லோவேனியா தனி நாடானது.

1991-ல் தொடங்கி 1995 வரை தொடர்ந்தது க்ரோவேஷியாவின் சுதந்திரப் போர். க்ரோவேஷியாவைச் சேர்ந்தவர் களுக்கும் செர்பியா மீது புகைச்சல். யுகோஸ்லாவிய ராணுவத்தின் தலைமைப் பீடத்தைப் பெரும்பாலும் செர்பியர்களே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தது க்ரோவே ஷியா. க்ரோவேஷியா தனி நாடாக வேண்டும் என விரும்பியது. ஆனால் அந்த நாட்டில் வசித்த செர்ப் இனத்தவர் க்ரோவேஷியா தனி நாடு ஆகக் கூடாது என்று கொடி பிடித்தனர்.

போரின் முடிவில் க்ரோவேஷியா வென்றது. தன்னை தனி நாடாக அறிவித்துக் கொண்டது. ஆனால் அதன் பொருளாதாரம் வெகுவாக சரிந்திருந்தது. இரு தரப்பிலும் 20,000 பேர் போரில் கொல்லப்பட்டிருந்தனர். தவிர இரு தரப்பிலும் போர் அகதிகளும் எக்கச்சக்கமாக இருந்தனர்.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x