Last Updated : 09 Feb, 2016 10:03 AM

 

Published : 09 Feb 2016 10:03 AM
Last Updated : 09 Feb 2016 10:03 AM

செம்மை காணுமா செர்பியா? - 5

போர் வேண்டாம் என்று நினைத்தது செர்பியா. ஆஸ்திரியாவின் பல நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டது. மீதி நிபந்தனைகளுக்கு சுற்றி வளைத்து மழுப்பலான பதிலைத் தந்தது. 'எல்லா நிபந்தனைகளையும் ஏற்கவில்லை, இரண்டு நாட்களுக்குள் பதில் வரவில்லை' என்று காரணம் காட்டி செர்பியா மீது போர் தொடுப்பதாக அறிவித்தது ஆஸ்திரியா.

“உங்கள் நிபந்தனைகள் எதையும் செர்பியா எதிர்க்க வில்லை. தவிர, போர் வேண்டாம் என்று அவர்கள் நினைப்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆக இதுவே உங்களுக்கு வெற்றிதான். எனவே போருக்கான காரணம் இப்போது இல்லை” என்றது ரஷ்யா. பிரிட்டனும் இந்த விவகாரத்தை ஒரு மாநாடு மூலம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று கருதியது.

செர்பியா மீது போர் தொடுப்ப தாக அறிவித்துவிட்டது. என்றாலும் அந்த போர் தொடங்கிய பிறகும் கூட ரஷ்யாவும் ஆஸ்திரியாவும் பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டு இருந்தன.

ரஷ்யாவுக்கு வேறு ஒரு கவலை. “இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால்? அப்போது செர்பியாவுக்கு நமது ராணுவம் உதவியாக வேண்டுமே. திடீரென்று ஒரே நாளில் ராணுவத்தை அனுப்ப முடியாதே. ஆகவே நம் ராணுவத் தின் ஒரு பகுதியை இப்போதே செர்பியாவுக்கு அனுப்பிவைப் போம். பேச்சு வார்த்தை வெற்றி அடைந்தால் ராணுவத்தை திருப்பி அழைத்துக் கொள்ளலாம். பேச்சு வார்த்தை தோல்வி என்றால் நம் ராணுவம் போரில் பங்கெடுத்துக் கொள்ளட்டும்” இப்படி நினைத்தது.

ஜெர்மனிக்கு சந்தேகம் வந்தது. பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே எதற்காக ரஷ்யா தன் ராணுவத்தை செர்பியாவில் குவிக்கவேண்டும்? நிச்சயமாக அது போரில் கலந்துகொள்ளத்தான் போகிறது.

ஜெர்மனி அவசரமாக ரஷ்யா வுக்கு ஓர் அறிக்கையை அனுப் பியது. “உடனடியாக உங்கள் ராணுவத்தை வாபஸ் பெறுங்கள்”.

அடுத்தது பிரான்ஸுக்கு ஓர் அறிக்கை அனுப்பியது. “இந்தப் போரில் நடுநிலை வகிப்பேன் என்று நீங்கள் அறிவிக்க வேண்டும்”.

பிரான்ஸிடமிருந்து எந்தவித மான பதிலும் இல்லை. இதற்காக பிரான்ஸ் போரில் ஈடுபட விரும் பியது என்று அர்த்தம் இல்லை. தான் இதுவரை சம்பந்தப்படாதபோது எதற்காக அறிக்கை விடவேண்டும் என்று பிரான்ஸ் நினைத்தது.

ஆகஸ்ட் 1 அன்று ஜெர்மனி “ரஷ்யாவுடன் போர்” என்று அறிவித்தது. அதற்கு இரண்டு நாள் கழித்து “பிரான்ஸுடனும் போர்” என்றது.

ஆக ஒரு பெரிய ஐரோப்பிய போர் நடந்தே தீரும் என்கிற நிலை உருவானது. அது முதலாம் உலகப்போராக வடிவெடுத்தது. அதற்கான பிள்ளையார் சுழி போஸ்னியாவில், செர்பிய இயக்கத்தினரால் போடப்பட்டது.

முதலாம் உலகப்போரின் முடிவில் கூட்டு நாடுகள் வென்றன. பல சாம்ராஜ்யங்கள் சரிந்தன. ஜெர்மனி வீழ்ந்தது. ரஷ்யாவுக்குத் தோல்வி முகம். ஒட்டாமன் சாம் ராஜ்யம் பெரும் சரிவைச் சந்தித்தது. பல ஜெர்மானிய காலனிகளும் ஒட்டாமன் சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த பகுதிகளும் பிற ஐரோப் பிய சக்திகளின் வசம் சென்றன. இன்றைய ஐ.நா.சபைக்கு முன்னோடியான லீக் ஆஃப் நேஷன்ஸ் உருவானது. ரஷ்யா விலிருந்து பின்லாந்து, எஸ்டோ னியா, லாட்வியா, லித்துவேனியா ஆகியவை தனி நாடுகள் ஆயின. (ஆஸ்திரிய ஹங்கேரிய, செக்கோஸ்லாவியக் குடியரசுகள் உருவாகவும் வழிவகை செய்யப்பட்டது).

செர்பிய மன்னர் முதலாம் பீட்டரின் கீழ் ஸ்லாவின மக்களுக் கான இணைப்பு முயற்சி தொடங்கப் பட்டது. 1918-ல் மோன்டேனெக் ரோவின் மன்னர் முதலாம் நிக்கோலஸ் உடல் நலம் இழந்து விட, அந்த நாடு செர்பியாவுடன் இணைக்கப்பட்டது. டிசம்பர் 1918-ல் ‘செர்புகள், க்ரோட்டுகள் மற்றும் ஸ்லோவேன்களின் அரசாங்கம்’ (Kingdom of the Serbs, Croates and Slovenes) உருவானது.

யுகோஸ்லாவியாவின் சரித்திரத் தின் அடுத்த கட்டத்தில் குறிப்பிடத் தக்கவர் மன்னர் முதலாம் அலெக்ஸாண்டர். (கிரேக்கத் தைச் சேர்ந்த மாவீரர் என்று அழைக்கப்படும் அலெக்ஸாண்ட ரோடு இவரைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்). செர்பியாவின் இளவரசர் என்பதிலிருந்து யுகோஸ் லாவியாவின் மன்னர் என்பதுவரை பதவி உயர்வு பெற்றவர் இவர்.

அலெக்ஸாண்டரின் தாய் இளம் வயதிலேயே இறந்து விட்டாள். அலெக்ஸாண்டரும், அவரது அண்ணனும் ரஷ்யாவில் பள்ளிப் படிப்பைப் பயின்றவர்கள் (அப்போது செர்பியாவில் ஆஸ்திரியா-ஹங்கேரியின் ஆதிக்கம் அதிகமாக இருந்த தால், ராஜகுடும்பத்துக்கு அச்சுறுத் தல்கள் இருந்தன).

அலெக்ஸாண்டரின் தந்தை பெடார் வன்முறை மூலம் செர்பியா வின் ஆட்சியைப் பிடித்தார். இதில் அப்போதைய மன்னரும் (அவர் பெயரும் முதலாம் அலெக் ஸாண்டர் என்பதால், அதைக் குறிப்பிட்டு குழப்பப் போவ தில்லை!) அரசியும் படுகொலை செய்யப்பட்டனர். தனது 58-வது வயதில் அலெக்ஸாண்டரின் தந்தை செர்பியாவின் மன்னர் ஆனார். இதற்குப் பின் அலெக்ஸாண்டரும் அவரது அண்ணனும் செர்பியா வந்து தங்கள் படிப்பைத் தொடர்ந்தனர்.

மார்ச் 1909-ல் ஒரு முக்கிய நிகழ்வு நடைபெற்றது. அலெக்ஸாண்டரின் அண்ணன் ஜார்ஜ் தனக்கு அரியணை ஏற இஷ்டமில்லை என்று பகிரங்கமாக அறிவித்தார். செர்பியாவில் உள்ள அதிகாரிகள் பலரும் ஜார்ஜுக்கு ஆட்சி செய்யும் தன்மைகள் இல்லை என்றே நினைத்தனர். அவர் களின் வற்புறுத்தலின் பேரில்தான் ஜார்ஜ் இப்படி அறிவித்தார் என்பவர் களும் உண்டு. அதுமட்டுமல்ல அரண்மனை சேவகர் ஒருவரை இளவரசர் ஜார்ஜ் காலினால் எட்டி உதைக்க, இதனால் வயிற்றில் கடும் பாதிப்பு ஏற்பட்டு அவன் சில நாட்களில் இறந்தான். இதுவும் பொதுமக்களை கொந்தளிக்க வைத்தது. இந்த நிலையில் இளவரசரின் அறிவிப்பு எல்லோராலுமே மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x